×

மதுரை ஆதீனத்தின் கார் டிரைவர் மீது வழக்குப்பதிவு

உளுந்தூர்பேட்டை: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே அஜீஸ் நகர் ரவுண்டானா பகுதியில் கடந்த 2ம் தேதி மதுரையில் இருந்து சென்னை நோக்கி ஒரு காரில் சென்ற மதுரை ஆதீனம் கார் விபத்து ஏற்பட்டது. இதுதொடர்பாக தன்னை கொலை செய்ய முயற்சி நடைபெற்றதாக ஆதீனம் பரபரப்பாக தெரிவித்தார். இந்நிலையில் மதுரை ஆதீனம் கார் விபத்து விவகாரத்தில் அதிவேகமாகவும், அஜாக்கிதையாகவும் ஆதீனத்தின் கார் டிரைவர் சென்றதால் தான் இந்த விபத்து நடைபெற்றதாக காவல்துறை சார்பில் சிசிடிவி காட்சி அடிப்படையில் தெரிவிக்கப்பட்டது.

இதுதொடர்பாக உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்தில் கள்ளக்குறிச்சியை சேர்ந்த முபாரக் அலி (37) புகார் அளித்தார். அதன் பேரில் ஆதீனத்தின் கார் டிரைவர் மீது உளுந்தூர்பேட்டை போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். உதவியாளர் ரூ.2000 வாங்கினார்: முபாரக் அலி கூறுகையில், மதுரை ஆதீனத்தின் காரில் உடன் வந்த உதவியாளர், என்னிடம் வாக்குவாதம் செய்து உங்களுடைய காரால்தான் விபத்து ஏற்பட்டது என கூறி ரூ.5000 கேட்டு பேரம் பேசி பேசி ரூ.2 ஆயிரத்தை வாங்கி சென்றுவிட்டதாக தெரிவித்தார்.

இதனிடையே, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மதுரை மாவட்ட செயலாளர் செல்வராஜ் தலைமையில் ஏராளமானோர் நேற்று மதுரை போலீஸ் கமிஷனர் லோகநாதனை சந்தித்து, சிறுபான்மையினருக்கு எதிராக அவதூறு ஏற்படுத்தும் வகையில் பொய்யான தகவலை பரப்பி வரும் மதுரை ஆதீனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென புகார் அளித்தனர். மதுரை ஆதீனம் அறிக்கை: மதுரை ஆதீனம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், உளுந்தூர்பேட்டை ரவுண்டானாவில் நடந்த சம்பவம் தொடர்பான காவல்துறையின் உண்மைக்கு புறம்பான விளக்க அறிக்கையை மறுக்கிறோம்.

கார் விபத்து தொடர்பாக மதுரை ஆதீனம் இதுவரை எந்தவித புகாரையும் தெரியப்படுத்தவில்லை என காவல்துறை அறிக்கையில் பார்த்தோம். காலை 9.42 மணிக்கு 100க்கு போன் செய்தோம். காலை 10.09 மணிக்கு உளவு பிரிவு அதிகாரிக்கு தெரிவித்தும் காலை 11.47 மணிக்கு உளுந்தூர்பேட்டை எஸ்ஐயிடம் பேசினோம். மாலை 5.39 மணிக்கு உளவுத்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு எங்களை தொடர்பு கொண்டு சம்பவம் பற்றி முழுமையாக கேட்டறிந்தார் என கூறியுள்ளார்.

* மதுரை ஆதீனத்தை பதவி நீக்க வலியுறுத்தல்
இந்து மக்கள் கட்சியின் மதுரை மாவட்ட தலைவர் சோலை கண்ணன், நேற்று செய்தியாளர்களிடம் கூறுகையில், மதுரை ஆதீனம் உளுந்தூர்பேட்டை வாகன விபத்து தொடர்பாக கூறிய கருத்துக்கள் மடத்தின் புனிதத்தை கெடுக்கும்விதமாகவும், மத பிரச்னையை உண்டாக்கும் விதமாகவும் உள்ளது. ஆதீனம் இதுபோன்று பேசி வருவது கண்டிக்கத்தக்கது. அவரது நடவடிக்கைகள், செயல்பாடுகளையும் பார்க்கும் போது மனநலம் பாதிக்கப்பட்டவர் போல செயல்படுகிறார். ஆதீன மடத்தை இருளில் போடுவதும், மடத்திற்குள் சிசிடிவி கேமராவை அணைத்து வைப்பது போன்ற அவரது செயல்கள் மூலம் சந்தேகம் எழுகிறது. அறநிலையத்துறை சட்டப்படி மனநலம் பாதிக்கப்பட்டவரோ, குற்றச்சாட்டுக்கு உள்ளானவரோ ஆதீனமாக இருக்க தகுதியற்றவர். அவரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும். மதுரை ஆதீன மடத்தை அறநிலையத்துறை கையகப்படுத்த வேண்டும் என்றார்.

The post மதுரை ஆதீனத்தின் கார் டிரைவர் மீது வழக்குப்பதிவு appeared first on Dinakaran.

Tags : Madurai ,Atheenam ,Ulundurpettai ,Chennai ,Aziz Nagar Roundabout ,Kallakurichi district ,Dinakaran ,
× RELATED செக் மோசடி வழக்கில் திரைப்பட...