×

லக்னோவை வீழ்த்தி 2வது இடத்திற்கு தாவிய பஞ்சாப் கிங்ஸ்; பிரப்சிம்ரன் அடித்த ஒவ்வொரு ஷாட்டும் பார்க்க அழகாக இருந்தது: கேப்டன் ஸ்ரேயாஸ் பாராட்டு

தர்மசாலா: ஐபிஎல் தொடரில் தர்மசாலாவில் நேற்றிரவு நடந்த 54வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ்-லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மோதின. டாஸ் வென்ற லக்னோ பந்து வீச்சை தேர்வு செய்ய முதலில் பேட் செய்த பஞ்சாப் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 236ரன் குவித்தது. அதிகபட்சமாக பிரப்சிம்ரன் சிங் 48 பந்தில், 6 பவுண்டரி, 7 சிக்சருடன் 91 ரன் விளாசினார். கேப்டன் ஸ்ரேயாஸ் 45, ஷஷாங்க் சிங்நாட் அவுட்டாக 33, ஜோஷ் இங்கிலிஸ் 30 ரன் எடுத்தனர்.பின்னர் களம் இறங்கிய லக்னோ அணியில் மிட்செல் மார்ஷ் 0, மார்க்ரம் 13, நிக்கோலஸ் பூரன் 6 ரன்னில் அர்ஷ்தீப் சிங் பந்தில் கேட்ச் ஆகினர்.

கேப்டன் ரிஷப் பன்ட் 18, டேவிட் மில்லர் 11 ரன்னில் வெளியேற அதிகபட்சமாக ஆயுஷ் படோனி 40 பந்தில் 74ரன் , அப்துல் சமது 24 பந்தில் 45ரன் எடுத்தனர். 20 ஓவரில் லக்னோ 7 விக்கெட் இழப்பிற்கு 199 ரன்களே எடுத்தது. இதனால் 37 ரன் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் வெற்றி பெற்றது. அந்த அணியின் பவுலிங்கில் அர்ஷ்தீப் சிங் 3, அஸ்மதுல்லா ஒமர்சாய் 2 விக்கெட் வீழ்த்தினர். பிரப்சிம்ரன் சிங் ஆட்டநாயகன் விருது பெற்றார். 11வது போட்டியில் 7 வது வெற்றியை பெற்ற பஞ்சாப் பட்டியலில் 2வது இடத்திற்கு முன்னேறி பிளே ஆப் வாய்ப்பை கிட்டத்தட்ட உறுதி செய்தது. லக்னோ 11வது போட்டியில் 6வது தோல்வியுடன் 7வது இடத்தில் உள்ளது. நடப்பு சீசனில் 2 போட்டியிலும் லக்னோவை பஞ்சாப் வீழ்த்தி உள்ளது.

வெற்றிக்கு பின் பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயாஸ் கூறுகையில், உண்மையை சொல்ல வேண்டுமென்றால் நான் மிகவும் மகிழ்ச்சியில் இருக்கிறேன். ஏனென்றால் அனைவரும் சரியான நேரத்தில் பொறுப்புகளை உணர்ந்து விளையாடி இருக்கிறார்கள். ஒவ்வொருவரும் அணியின் வெற்றிக்காக பங்காற்றி உள்ளனர். இன்று பிரப்சிம்ரன் ஆடிய விதம் மிகவும் பிரமாதமாக இருந்தது. அவர் அடித்த ஒவ்வொரு ஷாட்டையும் பார்க்க அவ்வளவு அழகாக இருந்தது. ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெற வேண்டும் என்ற உத்வேகத்தில் தான் நாங்கள் களத்தில் இறங்குகிறோம்.

அதுதான் எங்களுடைய மன உத்வேகமாக இருக்கிறது. சில போட்டிகளில் எங்களுக்கு அதிர்ஷ்டம் இருந்திருக்கிறது. ஆனால் அந்த அதிர்ஷ்டம் ஏன் இருக்கிறது என்று கேட்டால் நாங்கள் களத்தில் கடின உழைப்பை மேற்கொண்டதால் தான் அது கிடைத்திருக்கிறது. சரியான நேரத்தில் அனைவரும் பார்ம்க்கு திரும்பி உள்ளனர். புள்ளிவிவரங்கள் பற்றி கவலைப்பட கூடாது. புள்ளி விபரம் குறித்து யோசிக்கவும் கூடாது. வெற்றி மட்டும் தான் ஒரே குறிக்கோளாக இருக்க வேண்டும், என்றார்.

12 ஆண்டுக்கு பின் வெற்றி
* தர்மசாலாவில் 12 ஆண்டுக்கு பின் பஞ்சாப் கிங்ஸ் வெற்றி பெற்றுள்ளது.
* 11 ஆண்டுக்கு பின் பஞ்சாப் ஒரு ஐபிஎல் சீசனில் 14 புள்ளிகளைக் கடந்தது.
* லக்னோ அணிக்காக 5வது மற்றும் அதற்கு கீழ் வரிசையில் களம் இறங்கி அதிகமுறை 50 பிளஸ் ரன் அடித்த வீரர் ஆயுஷ் படோனி(6முறை) தான். இந்த வரிசையில் பூரன் (5முறை) அடுத்த இடத்தில் உள்ளார்.
* கேப்டனாக ஸ்ரேயாஸ், ஐபிஎல்லில் 4 சீசனில் 400 பிளஸ் ரன் அடித்துள்ளார். அதிகபட்சமாக கோஹ்லி 7, வார்னர் 5 முறை 400 பிளஸ் ரன் அடித்துள்ளனர்.

சேசிங் இலக்கு அதிகம்: ரிஷப் பன்ட் வேதனை
தோல்வி குறித்து லக்னோ கேப்டன் ரிஷப் பன்ட் கூறுகையில், அதிக ரன்களை கொடுத்து விட்டோம். முக்கியமான கேட்ச்களை தவறவிட்டால் ​​அது உங்களை மோசமாக பாதிக்கலாம். தொடக்கத்தில் சரியான லென்த்தில் பந்துவீசவில்லை. எங்கள் பிளே ஆப் வாய்ப்பு கனவு இன்னும் உள்ளது. அடுத்த 3 போட்டிகளில் வெற்றி பெற்றால், நிச்சயமாக திரும்பி வரமுடியும். டாப் ஆர்டர் நன்றாக பேட்டிங் செய்யும்போது எளிதாக இருக்கும். ஆனால் ஒவ்வொரு போட்டியிலும், அவர்கள் சிறப்பாக விளையாடுவார்கள் என்று நம்ப முடியாது. நாங்கள் சேசிங் செய்ய முடியாத அளவுக்கு இலக்கு இருந்தது. அது எங்களுக்கு மிகவும் வேதனையாக இருந்தது, என்றார்.

The post லக்னோவை வீழ்த்தி 2வது இடத்திற்கு தாவிய பஞ்சாப் கிங்ஸ்; பிரப்சிம்ரன் அடித்த ஒவ்வொரு ஷாட்டும் பார்க்க அழகாக இருந்தது: கேப்டன் ஸ்ரேயாஸ் பாராட்டு appeared first on Dinakaran.

Tags : Punjab Kings ,Lucknow ,Prabsimran ,Shreyas ,Dharamsala ,Lucknow Super Giants ,IPL ,Punjab ,Dinakaran ,
× RELATED 3வது டெஸ்டில் வென்று ஆஷஸ் கோப்பையை தக்க வைத்தது ஆஸ்திரேலிய அணி!