×

வரலாற்று சிறப்பு மிக்க மதுரை தெப்பம்!

உண்மையான வரலாறு இதுதான்

சுவாமியைவிட அம்பாள் அதிகப்படியான ஒரு வாகனத்தில் உலா வரும் ஒரே மதுரை உற்சவம்…!

மதுரை மாநகரில் 12 மாதங்களும்

திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். அதில் சித்திரை திருவிழாவிற்கு அடுத்தபடியாக மதுரையில் கோலாகலமாக கொண்டாடப்படும் திருவிழாக்களில் ஒன்றுதான் தைப் பூசத்தன்று நடக்கும் வண்டியூர் மாரியம்மன் தெப்ப திருவிழா. இத்திருவிழா, 12நாள் விழாவாக நடக்கும். திருவிழா நடைபெறும் நாட்களில் காலை, இரவு என இருவேளையும் சுவாமியும், அம்மனும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி சித்திரை வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பர்.

இந்த திருவிழாவில், சிவபெருமான் நிகழ்த்திய திருவிளையாடல் நிகழ்வு நடைபெறுவது வழக்கம். அதில் வலைவீசி அருளிய லீலையும் ஒன்று. இந்த விழாவையொட்டி சுவாமியும், அம்மனும் மீனாட்சி அம்மன் கோயிலில் இருந்து கிளம்பி மதுரை பெரியார் பஸ் நிலையம் அருகே உள்ள எல்லீஸ் நகர் பாலத்திற்கு கீழே உள்ள வலைவீசி தெப்பக்குளம் பகுதிக்கு செல்வர்.

அங்கு லீலை முடிந்து மீண்டும் கோயிலை வந்தடைவது வழக்கம். தைப்பூச விழாவின் 11 நாள் நிகழ்ச்சியாக விவசாயத்தின் மேன்மையை வலியுறுத்தி சிந்தாமணியில் கதிரறுப்பு வைபவமும் நடக்கும். இதற்காக மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர் அங்கு எழுந்தருளுவார்கள். சிந்தாமணி பகுதியில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட வயல்வெளியில் சுந்தரேஸ்வரர், மீனாட்சி அம்மன் சார்பில் கோயில் சிவாச்சாரியார்கள் நெற்கதிர்களை அறுவடை செய்வர்.

பின்னர், நெற்கதிர்களுடன் சுவாமியும், அம்மனும் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்கள். மறுநாள் அதிகாலை 5 மணியளவில் வெள்ளி அவுதா தொட்டிலில் அம்மனும், சிம்ம வாகனத்தில் சுவாமியும் எழுந்தருளுகின்றனர். பின்னர் கோயிலில் இருந்து புறப்பாடாகி அம்மன் சந்நதி தெரு, கீழமாசி வீதி, யானைக்கல், கீழவெளி வீதி, முனிச்சாலை, காமராஜர் சாலை வழியாக தெப்பக்குளத்தில் உள்ள முக்தீஸ்வரர் கோயிலில் எழுந்தருளுகின்றனர்.

அதன் பின், தண்ணீர் நிரம்பிய தெப்பக்குளத்தில் தெப்ப உற்வசம் நடைபெறுகிறது. தெப்பத்தை, சுவாமி-அம்பாள் 3 முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்கள். இங்கு மாலையில் நடைபெறும் நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். அதன் பிறகு, முக்தீசுவரர் கோயிலில் எழுந்தருளி சிறப்பு ஆராதனைகள் நடைபெறும். பின்னர், அங்கிருந்து புறப்பாடாகி மீனாட்சியம்மன் கோயிலில் எழுந்தருளுகின்றனர். விழாவையொட்டி, அதிகாலை சுவாமியும், அம்மனும் புறப்பாடாகி, மீண்டும் கோயிலுக்குள் வரும் வரை மீனாட்சி – சுந்தரேஸ்வரர் கோயில் நடை சாத்தப்பட்டிருக்கும்.

எனவே, வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்களின் நலன் கருதி, ஆயிரங்கால் மண்டபம் (கலைக் கூடம்) திறந்து வைக்கப்படும். மேற்கண்ட நாளில் கோயிலுக்கு வரும் பக்தர்கள் வடக்கு கோபுரவாசல் வழியாக காலை 7 மணி முதல் பகல் 12.30 வரை, மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரை அனுமதிக் கப்படுவார்கள். மீனாட்சியம்மன் தெப்பத்திருவிழா நாயக்க மன்னர் காலத்தில் ஏற்பட்டது.

திருமலை நாயக்க மன்னர், இந்தத் தெப்பக்குளத்தை ஏற்படுத்தித் தன் பிறந்தநாளை முன்னிட்டு தை பூசத்தன்று தெப்ப உற்சவத்தையும் ஏற்பாடு செய்தார். நாயக்கர்களுக்கு மீனாட்சி அம்மனின் மீதிருந்த பற்று காரணமாக நாயக்க மன்னர் பிறந்தநாளையொட்டி அம்பாரியில் ராணியாக மீனாட்சியை அமரச்செய்து அழுகு பார்த்தார்கள்.

அதன் தொடர்ச்சியாக, இப்போதும் அதேபோல் புறப்பாடு நடத்தப்படுகிறது. இந்த ஓர் உற்சவத்தில் மட்டும்தான் சுவாமியைவிட அம்பாள் அதிகப்படியான ஒரு வாகனத்தில் உலா வருகிறார். அதாவது, இருவருக்கும் வெள்ளி சிம்மாசனம்தான். ஆனால், அம்மனுக்கு சிம்மாசனத்தின் மேல் கூடுதலாக ஒரு அவுதா அமைந்துள்ளதன் மூலம் இந்த விழாவில் அன்னை மீனாட்சி பிரதானப்படுத்தப்படுகிறார்’’ என்கிறார்கள். தைப்பூச நாளில் நடக்கும் தெப்பத்திருவிழா, தேரின் வடம் பிடிக்கும் உரிமை, அப்பகுதியில் உள்ள அனுப்பானடியைச் சேர்ந்த தாழ்த்தப்பட்டோருக்கே உண்டு. இது ஆண்டாண்டு காலமாக நடக்கும் ஒரு பாரம்பரிய முறை. இப்போதும் இந்த நடைமுறை தொடர்ந்து நடக்கின்றது.

மதுரை தெப்பக்குளத்தின் உண்மையான வரலாறு

மதுரையின் அழகில் மேலும் அழகு சேர்க்கும் மாரியம்மன் தெப்பகுளம், மதுரையின் முக்கிய அடையாளமாகவும், சுற்றுலாதளமாகவும் விளங்குகிறது. திருவாரூர், மன்னார்குடிக்கு அடுத்து தமிழகத்தின் மிகப் பெரிய தெப்பகுளம் இந்த மதுரை தெப்பகுளம்தான். மதுரையில் 1635 முதல் இன்று வரை 385 ஆண்டுகளாக கம்பீரமாக கட்டிட கலையிலும், நீராதாரத்தின் சேமிப்புக்கும் கட்டப்பட்ட இந்த தெப்பக்குளம். மதுரையின் அழகையும், பிரமாண்டத்தையும், வரலாறையும் பறை சாற்றிக் கொண்டிருக்கிறது.

வரலாறுகள் நிறைந்து வாழும் நகரம் மதுரை. கட்டிட கலைகளாலும், கட்டபட்டதின் காரணங்களாலும், என்றும் கம்பீரமாக நிலைத்திருக்கும் இதன் வரலாறு. அப்படி ஒரு வரலாற்றின் காரணம், பல கற்பனைக்குள் சிக்கி, அடுத்த தலைமுறைக்கு அது கட்டுகதைகளாக வெளிவரும். அப்படி ஒரு வரலாறுதான் மதுரை தெப்பக்குளத்தின் வரலாறு. பல கதைகள் உலவி வந்தாலும், மக்களிடையே இந்த தெப்பகுளத்தை பற்றி அதிகமாக வலம் வரும் ஒரு கதை ஒன்று இருக்கிறது.

மதுரையை ஆண்ட மன்னர் திருமலை நாயக்கர், அவருக்கு அரண்மனையை கட்டுவதற்கு மண் தேவை பட்டதால், ஒரு இடத்தை தோண்டி மண் எடுத்த பின் அந்த இடம் குழியாக இருந்ததால், அதை சீரமைக்க தெப்பம் கட்டியதாக இன்றளவும் பேசப்படும் ஒரு கதை உண்டு. இது மக்கள் மத்தியில் நிலவி வரும் கதை மட்டுமே. ஆனால் உண்மையான வரலாறு வேறு. மன்னர் திருமலை நாயக்கர், மதுரையை தலைநகராக தேர்வு செய்து ஆட்சி செய்ய முற்பட்டார். கட்டிட கலையின் மீது காதல் கொண்ட திருமலை நாயக்கர், மதுரையை தலைநகராக ஏற்ற உடனேயே, மதுரையில் ஒரு அரண்மனையும் தெப்பகுளமும் கட்ட திட்டமிட்டார். மதுரை வைகை ஆற்றின் கறையான வண்டியூர் பகுதியை தேர்வு செய்த அவர், அங்கு தெப்பகுளத்தை கட்ட திட்டமிட்டார். ஆயிரம் அடி நீளத்துடன் 950 அடி அகலத்துடன் சதுர வடிவில் 16 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கப்பட்டது, இந்த தெப்பகுளம்.

இந்த தெப்பகுளத்துக்கு நடுவே மைய்ய மண்டபம் உருவாக்கப்பட்டது. அதை சுற்றி தோட்டம் போல், மரங்கள் நிறைந்து அதன் நடுவே எழில் மிகு கட்டிட கலையுடன் மைய்ய மண்டபம் கட்டப்பட்டது. வெளி பார்வைக்கு பல்லவர் கட்டிட கலையின் மாமல்லபுரம் கற்கோயிலின் அமைப்பிலும், உள்ளே முகலாயர்களின் கட்டிட கலையிலும் கட்டப்பட்டது, இந்த மதுரை தெப்பக்குளத்தின் மைய்ய மண்டபம். இந்த மைய்ய மண்டபத்தின் மற்றொரு சிறப்பு, இதன் விமானத்தின் நிழல் தண்ணீரில் விழாத அளவுக்கு கட்டியமைத்தனர். அந்த மண்டபத்தின் சுற்று சுவர் தாண்டி இதனின் நிழல் தண்ணீரில் விழாது. ஒவ்வொரு திசையிலும் மூன்று படித்துறைகள் எழுப்பி 12 படிதுரைகளுடன் உருவாக்கப்பட்டது, இந்த தெப்பகுளம்.

கிட்டத்தட்ட 20 அடி ஆலமும் 115 கன அடி கொள்ளளவும் கொண்ட இந்த தெப்பகுளம், 1635-ல் கட்டி முடிக்கப்பட்டது, இந்த தெப்பகுளம். நீராதாரத்தை வலுபடுத்தவே இந்த தெப்பகுளமானது கட்டப்பட்டது. வைகை ஆற்றில் இருந்து கால்வாய் மூலம் இணைப்பை ஏற்படுத்தி, இந்த தெப்பகுளத்தை தண்ணீரால் நிரப்பி வந்தனர்.

இதை சிறப்பிக்கும் வகையில் எண்ணிய திருமலை நாயக்கர், இந்த தெப்பகுளத்தின் திறப்புவிழா, ஒரு சிறப்பு விழாவாக இருக்க வேண்டும் என எண்ணினார். தான் பிறந்த தினமான தைபூச நாள் அன்று, இந்த தெப்பகுளத்தை திறந்து வைத்து, மதுரை மீனாட்சி அம்மனையும் சுந்தரேஸ்வரரையும் தெப்பத்தில் எழுந்தருளி வளம் வர செய்தார், திருமலை நாயக்கர். இன்றளவும் மதுரை மக்கள் வெகுவிமர்சியாக கொண்டாடி வரும் தெப்ப திருவிழா, மன்னர் திருமலை நாயக்கரின் பிறந்த தினத்தையும், திருவிழா கோலமாக கொண்டாடும் விதமாக விளங்குகிறது.

The post வரலாற்று சிறப்பு மிக்க மதுரை தெப்பம்! appeared first on Dinakaran.

Tags : Madurai ,Dam ,Madura ,Ambala ,Swami ,Madurai Managar ,Chitra Festival ,Madurai Dam ,Dinakaran ,
× RELATED விஷக்கடி ஆபத்து நீங்க ஒரு பிரார்த்தனை