சிவகங்கை, மே 5: காலை உணவு திட்டத்தின் மூலம் சிவகங்கை மாவட்டத்தில் 38 ஆயிரத்து 855 மாணவ, மாணவிகள் பயனடைந்து வருகின்றனர். தமிழ்நாடு முழுவதும் அரசு பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் குழந்தைகளுக்கு அனைத்துப் பள்ளி நாட்களிலும் காலை உணவு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் அறிவித்தார். இத்திட்டம் சில மாநகராட்சிப் பள்ளிகள் மற்றும் தொலைதூரக் கிராமங்களில் உள்ள பள்ளிகள் சிலவற்றில் முதற்கட்டமாகத் தொடங்கப்பட்டது.
இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் காலை உணவு வழங்கும் திட்டம் கடந்த 2023ம் ஆண்டு முதல் விரிவாக்கம் செய்யப்பட்டது. சிவகங்கை மாவட்டத்தில் 899 அரசுப்பள்ளியில் படிக்கும் 31ஆயிரத்து 357மாணவ, மாணவிகள் இத்திட்டத்தில் பயனடைந்து வருகின்றனர். தொடர்நது கடந்த ஜுலை மாதம் இத்திட்டம் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ,மாணவிகளும் பயனடையும் வகையில் மேலும் விரிவு படுத்தப்பட்டது.
சிவகங்கை மாவட்டத்தில் 113 அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 5 ஆயிரத்து 287மாணவ, மாணவிகள் இத்திட்டத்தில் பயனடைந்து வருகின்றனர். ஒட்டு மொத்தமாக மாவட்டம் முழுவதும் 1059 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் 38ஆயிரத்து 855மாணவ, மாணவிகள் இத்திட்டத்தில் பயனடைந்து வருகின்றனர்.
புரட்சிகரமான திட்டமாக கருதப்படும் இத்திட்டம் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் அமல்படுத்தப்பட்டுள்ளது மட்டுமின்றி வெளிநாடுகளிலும் பரிசோதனை முயற்சியாக செயல்பாட்டிற்கு வந்துள்ளது. இத்திட்டத்தின் மூலம் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையில் மிகப்பெரிய அளவிலான மாற்றம் வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவ்வாறே மாணவர் சேர்க்கை கடந்த ஆண்டுகளைவிட அதிகரித்துள்ளது.
The post காலை உணவு திட்டத்தில் 38,855 மாணவர்கள் பயன்பெறுகின்றனர் appeared first on Dinakaran.
