×

தீவிரவாத தாக்குதலை எதிர்த்து பாஜக சார்பில் நாளை மாபெரும் ஆர்ப்பாட்டம்: தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி

சென்னை: தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று அளித்த பேட்டி: காஷ்மீரில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டு மிகவும் சோகமான சூழ்நிலையில் இந்த நாடு உள்ளது. உலகமே இருக்கிறது. இன்று தமிழகத்தில் கூட சில ஆதரவு குரல்கள் வரவில்லை என்றாலும் கூட, பாரத தேசத்திற்காக 30 நாடுகள் தங்களது ஆதரவு குரலை தெரிவித்து இருக்கிறார்கள். இது ஒன்றே இந்தியாவிற்கு உலக அரங்கில் தீவிரவாதத்தை எதிர்ப்பதற்கு எந்த அளவுக்கு ஆதரவு இருக்கிறது.

குறிப்பாக பிரதமருக்கு எவ்வளவு ஆதரவு இருக்கிறது. பிரதமர் வெளிநாடு செல்கிறார், செல்கிறார் என்று விமர்சனம் செய்து கொண்டிருந்தார்கள். ஆனால், வெளிநாடு சென்றது நட்புணர்விற்காகவும், நம் நாட்டிற்கு ஒரு பிரச்னை வந்தால் உலகின் பல நாடுகள் நம்மோடு இருக்க வேண்டும் என்பதற்காக ஒரு நல்லெண்ண அடிப்படையில் அவர் சென்று வந்தார். இந்த பயணம் நல்லெண்ண அடிப்படையில் இன்றைக்கு நமக்கு உதவுகிறது. தீவிரவாத தாக்குதல் யாருக்கும் உகந்தது அல்ல. இந்திய நாட்டிற்கு உகந்தது அல்ல. மற்ற நாடுகளை விட நாம் தீவிரவாத நாட்டை நாம் பக்கத்திலே வைத்து கொண்டு இருக்கிறோம்.

அந்த வகையில் நாம் எல்லாம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பது தான் அனைவரின் எண்ணம். தீவிரவாத தாக்குதலை எதிர்த்து பாஜக சார்பில் நாளை மாலை 4 மணிக்கு மிக்பபெரிய ஆர்பாட்டம் நடைபெறுகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. சென்னையில் 7 மாவட்டங்களை சேர்ந்து சென்னையில் நடக்கிறது. சென்னையில் நடக்கும் ஆர்ப்பாட்டத்திற்கு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமை தாங்குகிறார். அவரோடு நானும் கலந்து கொள்கிறேன். கோவையில் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தலைமை தாங்குகிறார். இதில் வானதி சீனிவாசன் கலந்து கொள்கிறார். மதுரையில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்ராதாகிருஷ்ணனும், திண்டுக்கல்லில் எச்.ராஜாவும் தலைமை தாங்குகிறார்கள்.

அந்தந்த மாவட்டத்தில் முக்கிய தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். தீவிரவாத தாக்குதலுக்கு இந்தியா ஒரு போதும் ஒத்துப்போகாது என்பதை வலியுறுத்துவதற்கான ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது. பாகிஸ்தானை சார்ந்த அதிகாரி சொன்னார். சிந்து நதியில் ரத்த ஆறு ஓடும் என்று. இந்தியா என்ன பதில் சொன்னது. ரத்ததும், தண்ணீரும் ஓரு சேர ஓட முடியாது என்பதில் நாங்கள் தீவிரமாக இருக்கிறோம் என்று சொன்னது. இவ்வாறு அவர் கூறினார்.

The post தீவிரவாத தாக்குதலை எதிர்த்து பாஜக சார்பில் நாளை மாபெரும் ஆர்ப்பாட்டம்: தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : BJP ,Tamil Nadu ,Soundararajan ,Chennai ,Tamilyasai Soundararajan ,Kashmir ,Tamil ,
× RELATED எடப்பாடி சூழ்ச்சியில் சிக்கி தவிப்பு;...