×

பாஜ கூட்டணிக்கு ஆதரவாக பேசிய அதிமுக நிர்வாகியுடன் எஸ்டிபிஐ நிர்வாகி வாக்குவாதம்: ஆடியோ வெளியானதால் பரபரப்பு

கோவை: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் நடந்த அதிமுக மே தின கூட்டத்தில் பேசிய அதிமுக சிறுபான்மை பிரிவு இணைச்செயலாளர் அப்துல் ஜப்பார், இஸ்லாமியர்கள் அதிமுகவிற்கு வாக்களிக்க மாட்டார்கள் எனவும், பாஜ உடன் கூட்டணி வைக்க வேண்டும் எனவும் எடப்பாடி பழனிசாமியிடம், தான் வலியுறுத்தியதாக தெரிவித்திருந்தார். மேலும், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக உடன் கூட்டணியில் இருந்த ஒரு முஸ்லிம் கட்சி (எஸ்டிபிஐ) திமுகவிற்கே வாக்களித்ததாகவும் கூறியிருந்தார்.

அப்துல் ஜப்பார் கோவை மாவட்ட ஐக்கிய ஜமாஅத் பொதுச்செயலாளர் பொறுப்பிலும் இருந்து கொண்டு, இப்படி பேசியதால் இது சர்ச்சைக்குள்ளானது. இதையடுத்து கோவை மாவட்ட ஐக்கிய ஜமாஅத் அமைப்பின் பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து அப்துல் ஜப்பார் நீக்கப்பட்டார். இந்நிலையில், தற்போது எஸ்.டி.பி.ஐ கட்சி நிர்வாகி ஒருவருடன், அப்துல் ஜப்பார் பேசும் ஆடியோ வெளியாகி உள்ளது.
அதில் அப்துல் ஜப்பார் பேசுகையில், ‘‘அதிமுகவிற்கு முஸ்லிம்கள் ஓட்டுப் போடவில்லை என்பது 100 சதவீதம் உண்மை.

பாஜ கூட்டணியில் இருந்த போதும் இஸ்லாமியர்கள் அதிமுகவிற்கு வாக்களிக்கவில்லை. கூட்டணியில் இருந்து வெளியே வந்த பின்னரும் அதிமுகவிற்கு வாக்களிக்கவில்லை. 2021 தேர்தலில் அதிமுக சார்பில் எஸ்.பி.வேலுமணி நின்ற போது, கரும்புக்கடை பூத்தில் 1600 வாக்குகள் மட்டுமே விழுந்தது. ஆனால், திமுகவிற்கு பத்தாயிரத்திற்கு மேற்பட்ட வாக்குகள் விழுந்தன. 2024 தேர்தலில் பாஜ கூட்டணியில் அதிமுக இல்லை. அப்போது, 1200 ஓட்டுதான் விழுந்தது. 2021க்கு பின்பு பாஜ கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறினால், இஸ்லாமியர்களின் வாக்குகள் கிடைக்கும் என சொன்னார்கள்.

அப்போது, பாஜ கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேற எஸ்.பி.வேலுமணி எடப்பாடி பழனிசாமியிடம் சண்டை போட்டார். சி.வி சண்முகமும் மற்ற சிலரும் வெளிப்படையாகவே பாஜ கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டும் என பேசினார்கள். பாஜ கூட்டணியில் இருந்து வெளியில் வந்தவுடன், நடந்த 2024 தேர்தல் முடிவு மிக மோசமானதாக அதிமுகவிற்கு இருந்தது. அதிமுக கட்சியின் நிலைமை மோசமாக இருந்தது. கூட்டணி இல்லாமல் யாரும் வென்றது இல்லை என்பதால், பாஜவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என வலியுறுத்தினேன். இஸ்லாமியர்கள் திமுகவிற்குதான் ஓட்டு போட்டார்கள்.

2024 தேர்தலில் அதிமுக – பாஜ கூட்டணி இருந்திருந்தால் 21 மக்களவை தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்க முடியும். அண்ணாமலை எம்.பி ஆகி இருக்க முடியும். 3 பேர் கேபினட் அமைச்சர் ஆகியிருப்பார்கள், 5 பேர் இணை அமைச்சர் ஆகி இருப்பார்கள். அந்த வாய்ப்பை பாஜவை விட்டு வெளியே வந்ததால் எடப்பாடி பழனிசாமி இழந்து விட்டார். கட்சியின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியின் நிலை எப்படி இருக்கும்?, அதனால் பாஜ கூட்டணி வேண்டும் என்று சொன்னேன்.

நான் ஐக்கிய ஜமாஅத் பொறுப்பாளர் என்பது சத்தியமங்கலத்தில் யாருக்கும் தெரியாது. கோவையில் கட்சிக்கார இஸ்லாமியர்கள் மட்டும்தான் அதிமுகவிற்கு வாக்களித்தார்கள். வேறு யாரும் வாக்களிக்கவில்லை. இவ்வாறு அவர் பேசி உள்ளார். அவருடன் ஆடியோவில் எஸ்டிபிஐ கட்சி நிர்வாகி பேசுகையில், ‘‘திமுக இஸ்லாமியர்களுக்கு எதுவும் செய்யவில்லை என சொல்லாதீர்கள். இஸ்லாமிய சமூகத்திற்கு மு.க.ஸ்டாலின் இருப்பதே பாதுகாப்பு தான்’’ எனக் கூறுகிறார். இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

The post பாஜ கூட்டணிக்கு ஆதரவாக பேசிய அதிமுக நிர்வாகியுடன் எஸ்டிபிஐ நிர்வாகி வாக்குவாதம்: ஆடியோ வெளியானதால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : STBI ,AIADMK ,BJP ,Coimbatore ,Day ,Sathyamangalam, Erode district ,Wing ,Joint Secretary ,Abdul Jabbar ,Edappadi Palaniswami ,Muslims ,Audio ,Dinakaran ,
× RELATED தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவிய...