×

போப் உடையில் இருப்பது போன்ற ஒரு புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட அமெரிக்க அதிபர் ட்ரம்ப்!!

நியூயார்க்: அமெரிக்க அதிபர் டிரம்ப், போப் உடையில் இருப்பது போன்ற ஒரு புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளது சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. போப் பிரான்சிஸ் மறைவைத் தொடர்ந்து புதிய போப்பை தேர்வு செய்தற்கான கர்தினால்கள் மாநாடு வாடிகனில் வரும் 7ம் தேதி தொடங்க உள்ளது. போப் பிரான்சிசின் இறுதிசடங்கில் அமெரிக்க அதிபர் டிரம்ப் பங்கேற்று விட்டு வந்த நிலையில் கடந்த வாரம் செய்தியாளர்கள் சந்திப்பு நடந்தது.

அப்போது ஒரு நிருபர், ‘‘அடுத்த போப்பாக யார் இருக்க வேண்டும்’’ என்று கேட்டார். இதற்கு பதிலளித்த அதிபர் டிரம்ப், ‘‘நானே போப் ஆக இருக்க விரும்புகிறேன். எனவே முதல் தேர்வு நானே’’ என நகைச்சுவையாக கூறினார். பின்னர் டிரம்ப், ‘‘எனக்கு விருப்பமில்லை. நியூயார்க்கிலும் ஒரு கர்தினால் உள்ளார். அவர் மிகவும் நல்லவர். எனவே, என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்’’ என்றார். டிரம்பின் இந்த நகைச்சுவை பதில் சமூக வலைதளங்களில் வைரலாகியது.

இந்த நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப், போப் உடையில் இருப்பது போன்ற ஒரு புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். செய்யறிவு புகைப்படம் என்று கூறப்படும் டிரம்ப்பின் இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதேநேரத்தில் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள், டிரம்ப்பின் இந்த புகைப்படம் போப் ஆண்டவரையும் புதிய போப் தேர்வு செய்யும் நடைமுறையையும் அவமதிப்பதாக இருப்பதாக கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதனிடையே அடுத்த போப் தேர்வில், நியூயார்க் கர்தினால் திமோதி டோலன் முக்கிய போட்டியாளராக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

The post போப் உடையில் இருப்பது போன்ற ஒரு புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட அமெரிக்க அதிபர் ட்ரம்ப்!! appeared first on Dinakaran.

Tags : US ,President Trump ,Pope ,New York ,US President Trump ,Pope Francis ,Vatican… ,Dinakaran ,
× RELATED பல்கலைகழக துப்பாக்கிசூடு எதிரொலி:...