×

கடன்களை வலுக்கட்டாயமாக வசூலித்தால் 5 ஆண்டு சிறை, மருத்துவக் கழிவுகளை கொட்டினால் சிறை : பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள்!!

சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடன்களை வலுக்கட்டாயமாக வசூலித்தால் 5 ஆண்டு சிறை, ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கும் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. சட்டப்பேரவையில் துணை முதல்வர் உதயநிதி தாக்கல் செய்த இந்த சட்ட மசோதா ஒருமனதாக நிறைவேற்றம் செய்யப்பட்டது. வங்கி அல்லாத பணக்கடன் வழங்கும் நிறுவனங்களுக்கு இந்த சட்டம் பொருந்தும். கடன் பெற்றவர்கள் தற்கொலை செய்து கொண்டால், கடன் தந்த நிறுவனம் தற்கொலைக்கு தூண்டியதாக கருதப்படும் என்பது மசோதாவின் முக்கிய அம்சமாகும். வலுக்கட்டாய கடன் வசூலில் ஈடுபட்டால் பிணையில் வெளிவர முடியாத அளவுக்கு சிறை தண்டனை விதிக்கவும் கடன் பெற்றவரை, கடன் வழங்கிய நிறுவனம் மிரட்டவோ, சொத்துகளை பறிக்கவோ கூடாது எனவும் மசோதாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. வலுக்கட்டாய கடன் வசூலில் இருந்து நலிவடைந்த பிரிவினரை பாதுகாக்கும் வகையில் இந்த சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. கடன்களை வலுக்கட்டாயமாக வசூலித்தால் 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கும் மசோதாவுக்கு பல கட்சிகள் வரவேற்பு அளித்துள்ளன. மசோதாவுக்கு த.வா.க., கம்யூ., மார்க்சிஸ்ட் கம்யூ., பா.ம.க. உள்ளிட்ட கட்சிகள் வரவேற்பு கொடுத்துள்ளன.

*தமிழக சட்டப்பேரவையில் இன்று நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள்!!

*மருத்துவ கழிவுகளை கொட்டினால் விசாரணையின்றி சிறை தண்டனை அளிக்க சட்டத்திருத்தம் நிறைவேற்றம் செய்யப்பட்டது. சட்டத்துறை அமைச்சர் ரகுபதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்த மசோதா நிறைவேறியது. மருத்துவக் கழிவுகளை கொட்டினால், விதிகளை மீறியதாக தடுப்புக் காவலில் வைக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

*கலைஞர் பல்கலைக்கழக சட்ட மசோதா-2025 சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. கும்பகோணத்தில் கலைஞர் பல்கலைக்கழகம் அமைப்பது தொடர்பாக சட்ட முன்வடிவு நிறைவேற்றம் செய்யப்பட்டது. கலைஞர் பல்கலைக்கழகத்தால் தஞ்சை, அரியலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டச் சேர்ந்த மாணவர்கள் பயன்பெறுவர்.

*தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் சட்ட மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

*தமிழ்நாடு உடற்கல்வியியல் விளையாட்டு பல்கலைக்கழக சட்ட மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றம் செய்யப்பட்டது.

*மாற்றுத்திறனாளிகளுக்கு கவுன்சிலர் பதவி வழங்க கொண்டு வரப்பட்ட மசோதா நிறைவேற்றம் செய்யப்பட்டது.

*ஊராட்சிகளில் விளம்பரங்களை காட்சிப்படுத்தும் முறை தொடர்பான மசோதாவும் நிறைவேறியது. ஊராட்சிகளில் ஆட்சேபனைக்குரிய விளம்பரங்களை அகற்றும் முறை தொடர்பான மசோதாவும் நிறைவேற்றம் செய்யப்பட்டது.

The post கடன்களை வலுக்கட்டாயமாக வசூலித்தால் 5 ஆண்டு சிறை, மருத்துவக் கழிவுகளை கொட்டினால் சிறை : பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள்!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Tamil Nadu Legislative Assembly ,Deputy Chief Minister ,Udhayanidhi ,Legislative Assembly ,Dinakaran ,
× RELATED ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின்...