×

அமெரிக்காவில் நுழைய 7 நாடுகளுக்கு தடை: டிரம்ப் அதிரடி உத்தரவால் அதிர்ச்சி

வாஷிங்டன்: அமெரிக்க அதிபரான டிரம்ப், கடந்த ஓராண்டாக பல்வேறு பயண தடைகளை விதித்து வருகிறார். இதனால் வெளிநாட்டினர் அமெரிக்கா செல்வது நாளுக்கு நாள் சிக்கலாகி வருகிறது. அங்கு வசிப்பவர்கள்கூட ஒருவித பீதியில் இருக்கும் சூழல் உருவாகி இருக்கிறது. இந்நிலையில், கடந்த 1ம் தேதி முதல் 7 நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் நுழைய தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அமெரிக்க சுங்க மற்றும் எல்லை பாதுகாப்புத் துறை விரிவான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி பர்கினா பாசோ, லாவோஸ், மாலி, நைஜர், சியரா லியோன், தெற்கு சூடான் மற்றும் சிரியா ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள் இனி அமெரிக்காவிற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். டிசம்பர் 29ம் தேதி வெளியிட்ட அறிவிப்பின்படி நிரந்தர குடியுரிமை கோருபவர்கள், தற்காலிக விசா கோருவோர் என இரு தரப்புமே இதனால் பாதிக்கப்படுவார்கள்.

அமெரிக்காவின் தேசிய, பொது பாதுகாப்புக்கு இந்த கட்டுப்பாடுகள் அவசியம் என வெள்ளை மாளிகை தெரிவிக்கிறது. உதாரணமாக, பர்கினா பாசோவில் பயங்கரவாத அமைப்புகள் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகின்றன. இவை அமெரிக்காவுக்கு அச்சுறுத்தலாக மாறிவிடக்கூடாது எனவும் அதனால் தடை விதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிரியாவின் உள்நாட்டு அமைதியின்மை என காரணம் சொல்லப்படுகிறது. இப்படி ஒவ்வொரு நாட்டிற்கும் காரணம் பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த 7 நாடுகளை சேர்ந்தவர்கள் தவிர ஆப்கானிஸ்தான், மியான்மர், சாட், காங்கோ, எக்குவடோரியல் கினியா, எரித்திரியா, ஹைட்டி, ஈரான், லிபியா, சோமாலியா, சூடான், யேமன் ஆகிய நாட்டினர் அமெரிக்காவில் நுழைய தடை உள்ளது. தவிர வெனிசுலா, கியூபா நாடுகளை சேர்ந்தவர்களுக்கும் பகுதி அளவில் கட்டுப்பாடுகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த புதிய தடையால் எந்த விதத்திலும் இந்தியா பாதிக்கப்படவில்லை. இந்த 7 நாட்டை சேர்ந்தவர்கள் மட்டுமே விசா கோரி விண்ணப்பிக்க முடியாது. அதேநேரம் ஏற்கனவே டிரம்ப் அறிவித்துள்ள எச்-1பி விசா தொடர்பான கட்டுப்பாடுகளால் இந்தியர்கள் பாதிக்கப்படுகிறார்கள். அமெரிக்காவில் வழங்கப்படும் எச்-1பி விசாவில் 70% இந்தியர்களுக்கே செல்லும் நிலையில், இதர தடைகளால் இந்தியா கடுமையாக பாதிக்கப்படுகிறது. ஏற்கனவே, டிரம்பின் சோஷியல் மீடியா கண்காணிப்பு தடைகள் காரணமாக இந்தியர்கள் ஹெச்-1பி விசா விண்ணப்பங்கள் தாமதமாகியுள்ளன. இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகங்களில் பல ஆயிரம் இந்தியர்கள் விசா நேர்காணலுக்கு காத்திருக்கிறார்கள். நிலைமை மோசமாக இருப்பதால் அமேசான் நிறுவனம் தனது இந்திய ஊழியர்கள், வீட்டில் இருந்தபடியே பணிபுரிய அனுமதி கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : United States ,Trump ,Washington ,U.S. ,President Trump ,
× RELATED பாஜக ஆட்சியின் ஊழல், ஆணவம், வெறுப்பு...