×

காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைக்கான புதிய அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: சட்டப்பேரவை உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்று காவல்துறை மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைக்கான புதிய அறிவிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

காவல் துறை

I.புதிய காவல் நிலையங்கள், புறக்காவல் நிலையங்கள், உட்கோட்டங்கள், பிரிவுகள் உருவாக்குதல்
கோயம்புத்தூர் மாவட்டம் நீலாம்பூரில் புதிய காவல் நிலையம் உருவாக்குதல் பொதுமக்கள் காவல் நிலையத்தை எளிதில் அணுகவும், மக்களின் பாதுகாப்பை உறுதி செய்திடவும், அதிகளவில் தொழிற்சாலைகள், கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள் நிறைந்த பகுதியாக இருப்பதாலும், வளர்ந்து வரும் பகுதியாக இருப்பதாலும், சட்டம் ஒழுங்கை பராமரிக்கவும், குற்றச் செயல்களைத் தடுக்கவும் மற்றும் போக்கிரிகளின் நடவடிக்கைகளை கண்காணிக்கவும், கோயம்புத்தூர் மாவட்டம் நீலாம்பூரில் புதிதாக காவல் நிலையம் ரூபாய் 4.88 கோடி செலவில் உருவாக்கப்படும்.

சிவகங்கை மாவட்டம் கீழடியில் புதிய காவல் நிலையம் உருவாக்குதல் பொதுமக்கள் காவல் நிலையத்தை எளிதில் அணுகவும் மற்றும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்திடவும், இந்திய தொல்லியல் ஆய்வுத் துறையின் அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வரும் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக உள்ளதாலும், தமிழரின் நாகரிகத்தின் தொன்மையை பறைசாற்றும் இப்பகுதி சுற்றுலாத் தலமாகவும், வளர்ந்து வரும் பகுதியாகவும் இருப்பதால் சட்டம் ஒழுங்கை பராமரிக்கவும், குற்றச் செயல்களைத் தடுக்கவும், போக்கிரிகளின் நடவடிக்கைகளை கண்காணிக்கவும், சிவகங்கை மாவட்டம் மானாமதுரை உட்கோட்டத்தில் உள்ள கீழடியில் புதிதாக காவல் நிலையம் ரூ.2.83 கோடி செலவில் உருவாக்கப்படும்.

திருநெல்வேலி மாவட்டம் மேலச்செவலில் புதிய காவல் நிலையம் உருவாக்குதல் பொதுமக்கள் காவல் நிலையத்தை எளிதில் அணுகவும் மற்றும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்திடவும், முன்னீர்பள்ளம் காவல் நிலையத்திலிருந்து இப்பகுதி தொலைவில் இருப்பதாலும், வளர்ந்து வரும் பகுதியாக இருப்பதாலும், சட்டம் ஒழுங்கை பராமரிக்கவும், குற்றச் செயல்களைத் தடுக்கவும், போக்கிரிகளின் நடவடிக்கைகளை கண்காணிக்கவும் திருநெல்வேலி மாவட்டம், சேரன்மாதேவி உட்கோட்டத்தில் உள்ள மேலச்செவலில் புதிதாக காவல் நிலையம் ரூபாய் 4.88 கோடி செலவில் உருவாக்கப்படும்.

திருப்பூர் மாவட்டம் பொங்கலூரில் புதிய காவல் நிலையம் உருவாக்குதல் பொதுமக்கள் காவல் நிலையத்தை எளிதில் அணுகவும் மற்றும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்திடவும், கோழிப் பண்ணைகள், விசைத்தறிகள் மற்றும் நெசவுத் தொழிற்சாலைகள் கொண்ட வளர்ந்து வரும் பகுதியாக இருப்பதால், சட்டம் ஒழுங்கை பராமரிக்கவும், குற்றச் செயல்களைத் தடுக்கவும், போக்கிரிகளின் நடவடிக்கைகளை கண்காணிக்கவும், திருப்பூர் மாவட்டம், பல்லடம் உட்கோட்டத்தில் உள்ள பொங்கலூரில் புதிதாக காவல் நிலையம் ரூபாய் 2.83 கோடி செலவில் உருவாக்கப்படும்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், களமருதூரில் புதிய காவல் நிலையம் உருவாக்குதல் பொதுமக்கள் காவல் நிலையத்தை எளிதில் அணுகவும் மற்றும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்திடவும், திருநாவலூர் காவல் நிலையத்தில் இருந்து இப்பகுதி தொலைவில் இருப்பதாலும், வளர்ந்துவரும் பகுதியாக இருப்பதாலும் சட்டம் ஒழுங்கை பராமரிக்கவும், குற்றச் செயல்களைத் தடுக்கவும், போக்கிரிகளின் நடவடிக்கைகளை கண்காணிக்கவும், கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை உட்கோட்டத்தில் உள்ள களமருதூரில் புதிதாக காவல் நிலையம் ரூபாய் 2.83 கோடி செலவில் உருவாக்கப்படும்.

நாமக்கல் மாவட்டம் கொக்கராயன்பேட்டையில் புதிய காவல் நிலையம் உருவாக்குதல் பொதுமக்கள் காவல் நிலையத்தை எளிதில் அணுகவும் மற்றும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்திடவும், திருச்செங்கோடு காவல் நிலையத்திலிருந்து இப்பகுதி தொலைவில் இருப்பதாலும், வளர்ந்துவரும் பகுதியாக இருப்பதாலும், சட்டம் ஒழுங்கை பராமரிக்கவும், குற்றச் செயல்களைத் தடுக்கவும், போக்கிரிகளின் நடவடிக்கைகளை கண்காணிக்கவும், நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு உட்கோட்டத்தில் உள்ள கொக்கராயன்பேட்டையில் புதிதாக காவல் நிலையம் ரூபாய் 4.88 கோடி செலவில் உருவாக்கப்படும்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை கோவில் காவல் நிலையம் உருவாக்குதல் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்திடவும், திருவண்ணாமலை மாவட்டம் திருவண்ணாமலையில் உள்ள அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில், தற்போது ஆண்டு முழுவதும் கூட்டம் அதிகமாக உள்ளதாலும், வார இறுதி நாட்களிலும், பௌர்ணமி நாட்கள் மற்றும் அனைத்து விடுமுறை நாட்களிலும் கூட்டம் அதிகமாக உள்ளதாலும், சில நாட்களில் இரண்டு இலட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வந்து செல்வதாலும் திருவண்ணாமலை திருக்கோவிலுக்கென புதிதாக காவல் நிலையம் ரூபாய் 2.83 கோடி செலவில் உருவாக்கப்படும்.

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையில் புதிதாக இருப்புப்பாதை காவல் நிலையம் உருவாக்குதல் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குழித்துறை பகுதியானது நாகர்கோவில் இருப்புப்பாதை காவல் நிலையத்திலிருந்து தொலைவில் இருப்பதாலும், அதிகளவில் இரயில் பயணிகள் வந்து செல்வதாலும், முக்கியமான இரயில் நிலையமாக இருப்பதாலும், இரயில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்திடவும், குற்றச் செயல்களைத் தடுக்கவும், போக்கிரிகளின் நடவடிக்கைகளை கண்காணிக்கவும் குழித்துறையில் புதிதாக இருப்புப்பாதை காவல் நிலையம் ரூபாய் 2.15 கோடி செலவில் உருவாக்கப்படும்.

மதுரை மாநகரக் காவல் ஆணையரகத்தில் சிந்தாமணியில் புதிதாக காவல் நிலையம் உருவாக்குதல் பொதுமக்கள் காவல் நிலையத்தை எளிதில் அணுகவும் மற்றும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்திடவும், பள்ளிகள், கல்வி நிலையங்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனைகள் கொண்ட வளர்ந்து வரும் பகுதியாக இருப்பதால், சட்டம் ஒழுங்கை பராமரிக்கவும், குற்றச் செயல்களைத் தடுக்கவும், போக்கிரிகளின் நடவடிக்கைகளை கண்காணிக்கவும், மதுரை மாநகரக் காவல் ஆணையரக எல்லைக்குட்பட்ட சிந்தாமணியில் புதிதாக காவல் நிலையம் ரூபாய் 6.57 கோடி செலவில் உருவாக்கப்படும்.

மதுரை மாநகரக் காவல் ஆணையரகத்தில் மாடக்குளத்தில் புதிதாக காவல் நிலையம் உருவாக்குதல் பொதுமக்கள் காவல் நிலையத்தை எளிதில் அணுகவும் மற்றும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்திடவும், பள்ளிகள், கல்வி நிலையங்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனைகள் கொண்ட வளர்ந்து வரும் பகுதியாக இருப்பதால், சட்டம் ஒழுங்கை பராமரிக்கவும், குற்றச் செயல்களைத் தடுக்கவும், போக்கிரிகளின் நடவடிக்கைகளை கண்காணிக்கவும், மதுரை மாநகரக் காவல் ஆணையரக எல்லைக்குட்பட்ட மாடக்குளத்தில் புதிதாக காவல் நிலையம் ரூபாய் 6.57 கோடி செலவில் உருவாக்கப்படும்.

சென்னை பெருநகரம், திருவல்லிக்கேணி ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனை வளாகத்தில், புறக்காவல் நிலையம் அமைத்தல் சென்னை பெருநகரம், திருவல்லிக்கேணியில் உள்ள ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையை பொறுத்தவரை, ஏராளமான நோயாளிகள் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்படுவதால், பார்வையாளர்களின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாலும், பார்வையாளர்களுக்கும் உள்நோயாளிகளுக்கும் உதவுவதற்காகவும், மருத்துவமனை வளாகத்திற்குள் குற்றத் தடுப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்த ஏதுவாகவும் இவ்வளாகத்தில் தேவையான பணியாளர்களுடன் ஒரு புறக்காவல் நிலையம் ரூபாய் 7.50 இலட்சம் செலவில் அமைக்கப்படும்.

சென்னை பெருநகரம், பெரம்பூர், பெரியார் நகர் அரசு புறநகர் மருத்துவமனை வளாகத்தில் புறக்காவல் நிலையம் அமைத்தல் சென்னை பெருநகரம், பெரம்பூரிலுள்ள பெரியார் நகர் அரசு புறநகர் மருத்துவமனையை பொறுத்தவரை, ஏராளமான நோயாளிகள் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்படுவதால், பார்வையாளர்களின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாலும், பார்வையாளர்களுக்கும் உள்நோயாளிகளுக்கும் உதவுவதற்காகவும், மருத்துவமனை வளாகத்திற்குள் குற்றத் தடுப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்த ஏதுவாகவும் இவ்வளாகத்தில் தேவையான பணியாளர்களுடன், ஒரு புறக்காவல் நிலையம் ரூபாய் 7.50 இலட்சம் செலவில் அமைக்கப்படும்.

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் புதிதாக காவல் உட்கோட்டம் உருவாக்குதல் முதல் தகவல் அறிக்கைகளை பதிவு செய்தல், பரந்த அதிகார வரம்பு. அதிகரித்து வரும் மக்கள் தொகை, நகர்ப்புர விரிவாக்கம் மற்றும் பாதுகாப்பு, அதிக எண்ணிக்கையிலான மக்கள் குறைதீர் மனுக்கள், சாலை விபத்துகள் மற்றும் சாலை பாதுகாப்பு ஆகியவற்றினைக் கருத்தில் கொண்டு, தேவையான பணியிடங்களுடன் ரூபாய் 72.30 இலட்சம் செலவில் காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் புதிதாக காவல் உட்கோட்டம் உருவாக்கப்படும்.

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் புதிதாக காவல் உட்கோட்டம் உருவாக்குதல் முதல் தகவல் அறிக்கைகளை பதிவு செய்தல், பரந்த அதிகார வரம்பு, அதிகரித்து வரும் மக்கள் தொகை, நகர்ப்புர விரிவாக்கம் மற்றும் பாதுகாப்பு, அதிக எண்ணிக்கையிலான மக்கள் குறைதீர் மனுக்கள், சாலை விபத்துகள் மற்றும் சாலை பாதுகாப்பு ஆகியவற்றினைக் கருத்தில் கொண்டு, தேவையான பணியிடங்களுடன் ரூபாய் 72.30 இலட்சம் செலவில் நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் புதிதாக காவல் உட்கோட்டம் உருவாக்கப்படும்.

நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தில் புதிதாக காவல் உட்கோட்டம் உருவாக்குதல் முதல் தகவல் அறிக்கைகளை பதிவு செய்தல், பரந்த அதிகார வரம்பு, அதிகரித்து வரும் மக்கள் தொகை, நகர்ப்புர விரிவாக்கம் மற்றும் பாதுகாப்பு, அதிக எண்ணிக்கையிலான மக்கள் குறைதீர் மனுக்கள், சாலை விபத்துகள் மற்றும் சாலை பாதுகாப்பு ஆகியவற்றினைக் கருத்தில் கொண்டு, தேவையான பணியிடங்களுடன் ரூபாய் 72.30 இலட்சம் செலவில் நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தில் புதிதாக காவல் உட்கோட்டம் உருவாக்கப்படும்.

சென்னை பெருநகர காவல் அரும்பாக்கம் சரகத்தில் புதிதாக அனைத்து மகளிர் காவல் நிலையம் அமைத்தல் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் பிரச்சனைகள் குறித்த புகார்களை பிரத்யேகமாக கையாளுவதற்காக, அனைத்து மகளிர் காவல் நிலையம் ஒன்று அமைக்கப்பட வேண்டியதினை கருத்தில் கொண்டு, சென்னை பெருநகர காவல், அரும்பாக்கம் சரகத்தில் புதிதாக அனைத்து மகளிர் காவல் நிலையம் ரூபாய் 2.68 கோடி செலவில் அமைக்கப்படும்.

சென்னை பெருநகர காவலின் நுண்ணறிவுப் பிரிவில் புதிதாக திட்டமிட்ட குற்றப் பிரிவு (Organised Crime Cell) உருவாக்குதல் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த உதவிடும் வகையிலும், சென்னை பெருநகர காவல் எல்லையில் சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் மற்றும் குற்றக் குழுக்கள் நிகழ்த்தக்கூடிய திட்டமிட்ட குற்றங்களை கட்டுப்படுத்திடவும், சென்னை பெருநகர காவலின் நுண்ணறிவுப் பிரிவில் புதிதாக திட்டமிட்ட குற்றப் பிரிவு ரூபாய் 13 இலட்சம் செலவில் உருவாக்கப்படும்.

சென்னை பெருநகர காவலின் நுண்ணறிவுப் பிரிவில் புதிதாக போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு (Anti Narcotics Intelligence Unit) உருவாக்குதல் சென்னை பெருநகர நுண்ணறிவுப் பிரிவு ஆளிநர்கள், போதை பொருட்களின் நடமாட்டம், விற்பனை ஆகியவை குறித்து நுண்ணறிவு தகவல்களை திரட்டவும், கடத்தலில் ஈடுபடுவோரின் நடவடிக்கைகளை கண்காணித்து போதைப் பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவதற்கு ஏதுவாகவும், சென்னை பெருநகர காவலின் நுண்ணறிவுப் பிரிவில் புதிதாக போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு ஒன்று ரூபாய் 8 இலட்சம் செலவில் உருவாக்கப்படும்.

சென்னை பெருநகர காவலின் மத்திய குற்றப் பிரிவில் செயல்படும் இணையவழி குற்றப் பிரிவில் புதிதாக சமூக ஊடக நுண்ணறிவுப் பிரிவு (Social Media Investigation Unit) உருவாக்குதல் மத்திய குற்றப் பிரிவின் (CCB) இணையவழி குற்றப் பிரிவானது, நிதி மற்றும் நிதி சாராத கணினி வழி குற்றங்களை கையாளுகிறது. சமூக ஊடகம் தொடர்பான குற்றங்கள் மீது தீவிர நடவடிக்கை மேற்கொள்ளவும், உண்மை கண்டறியும் பிரிவு மற்றும் தேசிய இணையவழி குற்ற புகார் இணைய முகப்பு ஆகிய பிரிவுகளிலிருந்து பெறப்படும் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுத்து ஆட்சேபகரமான பதிவுகளை நீக்குவதற்காகவும், பதிவேற்றியவர் குறித்த தகவலை கண்டறிவது, வழக்கு பதிவு செய்து குற்றவாளியை கண்டுபிடிப்பது போன்ற பணிகளை சமூக ஊடக தளங்களின் ஒருங்கிணைப்புடன் மேற்கொள்ளவும், சென்னை பெருநகர காவல் மத்திய குற்றப் பிரிவின் இணையவழி குற்றப் பிரிவில், தேவையான பணியிடங்களுடன் சமூக ஊடக நுண்ணறிவுப் பிரிவு ஒன்று புதிதாக ரூபாய் 63 இலட்சம் செலவில் உருவாக்கப்படும்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறைக்கென புதிய அலகு உருவாக்குதல் செங்கல்பட்டு மாவட்டத்தில் குற்றப் பிரிவு குற்றப் புலனாய்வுத் துறையின் செயல்பாடுகளை சீர்படுத்த வேண்டிய தேவையினைக் கருத்தில் கொண்டு, தேவையான பணியிடங்களுடன் செங்கல்பட்டு மாவட்டத்தில் குற்றப் பிரிவு குற்றப்புலனாய்வுத் துறைக்கென புதிய அலகு ஒன்று ரூபாய் 1 .05 கோடி செலவில் உருவாக்கப்படும்.

புதிதாக உருவாக்கப்பட்ட மயிலாடுதுறை மற்றும் இராணிப்பேட்டை மாவட்டங்களில் இரண்டு தனிப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை அலகுகள் உருவாக்குதல் மறைமுக மற்றும் நேரடி அரசியல் நடவடிக்கைகள் மற்றும் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க கூடிய மற்றும் மத நல்லிணக்கத்தை குலைக்கக் கூடிய அமைப்புகளை கட்டுப்படுத்துவதற்காக, புதிதாக உருவாக்கப்பட்ட மயிலாடுதுறை மற்றும் இராணிப்பேட்டை மாவட்டங்களில் தலா ஒன்று வீதம் இரண்டு தனிப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை அலகுகள் ரூபாய் 4.04 கோடி செலவில் உருவாக்கப்படும்.

இருப்புப் பாதை காவல் நிலையங்களின் பணிகளை ஒருங்கிணைப்பதற்காக சென்னையில் உள்ள தலைமையிடத்தில், புதிய தொலைத் தொடர்பு சாதனங்களைக் கொண்ட ஒருங்கிணைந்த தலைமைக் கட்டுப்பாட்டு அறை (Integrated Master Control Room), வெடிகுண்டுகளை கண்டுபிடித்து செயலிழக்கச் செய்யும் பிரிவு மற்றும் மோப்ப நாய் பிரிவு அமைத்தல் இருப்புப் பாதை காவல் நிலையங்களின் பணிகளை ஒருங்கிணைத்து குற்றம் மற்றும் குற்றவாளிகளை கண்காணிக்கவும், கைதிகளின் வழிக்காவல் குறித்த தகவல்களை மற்ற மாநிலங்களுடன் பகிரவும், இதன்மூலம் பொது மக்களின் பாதுகாப்பினை உறுதி செய்திடவும், சென்னையில் உள்ள தலைமையிடத்தில் தேவையான பணியிடங்களுடன், புதிய தொலைத் தொடர்பு சாதனங்களைக் கொண்ட ஒருங்கிணைந்த தலைமை கட்டுப்பாட்டு அறையும், வெடிகுண்டுகளை கண்டுபிடித்து செயலிழக்கச் செய்யும் பிரிவும் மற்றும் மோப்ப நாய்ப் பிரிவும் ரூபாய் 1 .14 கோடி செலவில் அமைக்கப்படும்.

குற்றப் பிரிவு குற்றப் புலனாய்வுத்துறை பெருநகர பகுதிகளில், ஒருங்கிணைத்தல் மற்றும் நிர்வாக பணிகளுக்காக இரண்டு புதிய காவல் கண்காணிப்பாளர் பணியிடங்கள் உருவாக்குதல் குற்றப் பிரிவு குற்றப் புலனாய்வுத்துறையில் மெட்ரோ பிரிவு, சர்வதேச காவல் நிலைய மனுக்கள் மற்றும் நிர்வாகப் பணிகளுக்காகவும், குற்றப் பிரிவு குற்றப் புலனாய்வுத்துறையில் பெருநகரப் பகுதிகளில், ஒருங்கிணைப்பு பணிகளை மேற்பார்வையிடவும் இரண்டு புதிய காவல் கண்காணிப்பாளர் பணியிடங்கள் ரூபாய் 63 இலட்சம் செலவில் உருவாக்கப்படும்.

ஆவடி போக்குவரத்து காவல் பிரிவினை இரண்டாகப் பிரித்து செங்குன்றம் மாவட்ட போக்குவரத்து காவல் பிரிவு புதிதாக உருவாக்குதல் ஆவடி மாநகர காவல் போக்குவரத்து பிரிவின் செங்குன்றம் பகுதியில் விபத்துகளைக் குறைக்கவும், விபத்தினால் பாதிக்கப்படும் பொதுமக்களின் வழக்குகளை விரைந்து விசாரணை செய்யவும், கண்காணிப்பு அவசியமாவதைக் கருத்தில் கொண்டு, ஆவடி போக்குவரத்து காவல் பிரிவினை இரண்டாகப் பிரித்து ஒரு துணை காவல் ஆணையாளர் பணியிடத்துடன், செங்குன்றம் மாவட்ட போக்குவரத்து காவல் பிரிவு புதிதாக ரூபாய் 59 இலட்சம் செலவில் உருவாக்கப்படும்.

சென்னை பெருநகரக் காவல் ஆயுதப் படையில் புதிய பணியிடங்கள் உருவாக்குதல் சென்னை, இந்திய பெருநகரங்களில் ஒன்றாகவும், தமிழ்நாட்டின் தலைநகராகத் திகழ்வதாலும், மிக முக்கிய நபர்கள் மற்றும் அரசுப் பிரதிநிதிகள் ஆகியோரின் வருகையின்போது, பாதுகாப்பினை பலப்படுத்தவும், வழிக்காவல் பணி, நிரந்தர பாதுகாப்பு போன்றவற்றிற்கென ஆளிநர்கள் மற்றும் மேற்பார்வை அதிகாரிகள் நியமிக்கப்படுவதைக் கருத்தில் கொண்டு, தேவையான புதிய பணியிடங்கள் இரண்டு கட்டங்களாக ரூபாய் 21.02 கோடி செலவில் உருவாக்கப்படும். இதற்கான முதற்கட்ட செலவினம் ரூபாய் 10.51 கோடி ஆகும்.

I சிலைத் தடுப்புப் பிரிவு, இணையவழி குற்றப் பிரிவு, இரயில்வே காவல் (சென்னை மற்றும் திருச்சி இரயில்வே மாவட்டங்கள்) ஆகியவற்றிற்காக சட்ட ஆலோசகர் பதவிகள் உருவாக்குதல் நீதிமன்றங்களில் விசாரணைக்கு வரும் வழக்குகளுக்கு சட்ட ஆலோசனை வழங்கிட ஏதுவாக, சிலைத் தடுப்புப் பிரிவு, இணையவழிக் குற்றப் பிரிவு, இரயில்வே காவல் (சென்னை மற்றும் திருச்சி இரயில்வே மாவட்டங்கள்) ஆகியவற்றிற்காக தலா ஒன்று வீதம் 04 சட்ட ஆலோசகர் பதவிகள் ரூபாய் 24 இலட்சம் செலவில் உருவாக்கப்படும்.

280 காவல் ஆய்வாளர் பணியிடங்கள் கூடுதலாக உருவாக்கப்பட்டு, சார்பு ஆய்வாளர் தலைமையிலான காவல் நிலையங்கள் ஆய்வாளர் தலைமையிலான காவல் நிலையங்களாக தரம் உயர்த்துதல் சட்டம் ஒழுங்கை சிறப்பாக பராமரிக்கவும், திறம்பட செயல்படவும், அன்றாட அவசர நிலைகளை கையாளவும், பொது மக்களுக்கு உதவிகரமாக இருக்கும் வகையில், 280 சார்பு ஆய்வாளர் தலைமையிலான காவல் நிலையங்கள், ஆய்வாளர் தலைமையிலான காவல் நிலையங்களாக மாற்றப்படும். இதன்மூலம், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவும், குற்ற வழக்குகளை விசாரிக்கவும், நீதிமன்றங்களில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யவும், சட்டம் ஒழுங்கு, சாதி, வகுப்புவாத பிரச்சனைகளை கட்டுப்படுத்தவும் முடியும். இதற்கான தொடர் செலவினம் ரூபாய் 1 .18 கோடி ஆகும்.

II புதிய கட்டடங்கள் கட்டுதல் / பழைய கட்டடங்கள் பழுதுபார்த்தல்
நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கான முகாம் அலுவலகம் கட்டுதல் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள மாவட்டக் காவல் கண்காணிப்பாளருக்கான முகாம் அலுவலக பழையக் கட்டடம் பழுதடைந்துள்ளதால், அதனை இடித்துவிட்டு, மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கான புதிய முகாம் அலுவலகக் கட்டடம் ரூபாய் 3.38 கோடி செலவில் கட்டப்படும்.

திருப்பூர் மாநகரக் காவல் ஆணையாளருக்கு முகாம் அலுவலகத்துடன் இணைந்த குடியிருப்பு கட்டடம் கட்டுதல் புதிதாக உருவாக்கப்பட்ட திருப்பூர் மாநகரத்தின் காவல் ஆணையாளருக்கு முகாம் அலுவலகத்துடன் இணைந்த குடியிருப்பு ரூபாய் 3.28 கோடி செலவில் கட்டப்படும்.

திருச்சி மாவட்டம் கொள்ளிடம் மற்றும் காணக்கிளியநல்லூர் ஆகிய காவல் நிலையங்களுக்கு புதிய கட்டடம் கட்டுதல் திருச்சி மாவட்டம் கொள்ளிடம் மற்றும் காணக்கிளியநல்லூர் ஆகிய இடங்களில் முறையே ரூபாய் 1.95 கோடி மற்றும் ரூபாய் 2.16 கோடி செலவில் புதிய காவல் நிலையக் கட்டடங்கள் கட்டப்படும்.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான், நீடாமங்கலம் மற்றும் குடவாசல் ஆகிய காவல் நிலையங்களுக்கு புதிய கட்டடம் கட்டுதல் திருவாரூர் மாவட்டம் வலங்கைமான், நீடாமங்கலம் மற்றும் குடவாசல் ஆகிய இடங்களில் முறையே ரூபாய் 2.68 கோடி, ரூபாய் 2.44 கோடி மற்றும் ரூபாய் 2.46 கோடி செலவில் புதிய காவல் நிலையக் கட்டடங்கள் கட்டப்படும்.

திருவண்ணாமலை மாவட்டம் வானாபுரம் காவல் நிலையத்திற்கு புதிய கட்டடம் கட்டுதல் திருவண்ணாமலை மாவட்டம் வானாபுரம் காவல் நிலையத்திற்கு ரூபாய் 2.02 கோடி செலவில் புதிய கட்டடம் கட்டப்படும்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்திற்கு புதிய கட்டடம் கட்டுதல் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்திற்கு ரூபாய் 2.86 கோடி செலவில் புதிய கட்டடம் கட்டப்படும்.

வேலூர் மாவட்டம் பிரம்மபுரம் காவல் நிலையத்திற்கு புதிய கட்டடம் கட்டுதல் வேலூர் மாவட்டம், பிரம்மபுரம் காவல் நிலையத்திற்கு ரூபாய் 3.02 கோடி செலவில் புதிய கட்டடம் கட்டப்படும்.

கடலூர் மாவட்டம் புதுப்பேட்டை காவல் நிலையத்திற்கு புதிய கட்டடம் கட்டுதல் கடலூர் மாவட்டம், புதுப்பேட்டை காவல் நிலையத்திற்கு ரூபாய் 2.42 கோடி செலவில் புதிய கட்டடம் கட்டப்படும்.

விருதுநகர் மாவட்டம், பந்தல்குடி மற்றும் செய்தூர் காவல் நிலையங்களுக்கு புதிய கட்டடம் கட்டுதல் விருதுநகர் மாவட்டம், பந்தல்குடி மற்றும் செய்தூர் காவல் நிலையங்களுக்கு முறையே ரூபாய் 2.37 கோடி மற்றும் ரூபாய் 2.16 கோடி செலவில் புதிய கட்டடங்கள் கட்டப்படும்.

தஞ்சாவூர் மாவட்டம் பந்தநல்லூர் காவல் நிலையத்திற்கு புதிய கட்டடம் கட்டுதல் தஞ்சாவூர் மாவட்டம், பந்தநல்லூர் காவல் நிலையத்திற்கு ரூபாய் 2.07 கோடி செலவில் புதிய கட்டடம் கட்டப்படும்.

தேனி மாவட்டம் கண்டமனூர் காவல் நிலையத்திற்கு புதிய கட்டடம் கட்டுதல் தேனி மாவட்டம், கண்டமனூர் காவல் நிலையத்திற்கு ரூபாய் 2.50 கோடி செலவில் புதிய கட்டடம் கட்டப்படும்.

சென்னை பெருநகர் விருகம்பாக்கம் காவல் நிலையத்திற்கு புதிய கட்டடம் கட்டுதல் சென்னை பெருநகரில் உள்ள விருகம்பாக்கம் காவல் நிலையத்திற்கு ரூபாய் 6.46 கோடி செலவில் புதிய கட்டடம் கட்டப்படும்.
மதுரை மாவட்டம் வலந்தூர் காவல் நிலையத்திற்கு புதிய கட்டடம் கட்டுதல் மதுரை மாவட்டம் வலந்தூர் காவல் நிலையத்திற்கு ரூபாய் 2.69 கோடி செலவில் புதிய கட்டடம் கட்டப்படும்.

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை காவல் நிலையத்திற்கு புதிய கட்டடம் கட்டுதல் கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை காவல் நிலையத்திற்கு ரூபாய் 2.09 கோடி செலவில் புதிய கட்டடம் கட்டப்படும்.

திருப்பூர் மாநகரிலுள்ள செங்கரை மற்றும் அனுப்பர்பாளையம் ஆகிய காவல் நிலையங்களுக்கு புதிய கட்டடம் கட்டுதல் திருப்பூர் மாநகரில் உள்ள செங்கரை மற்றும் அனுப்பர்பாளையம் ஆகிய காவல் நிலையங்களுக்கு முறையே ரூபாய் 3.63 கோடி மற்றும் ரூபாய் 3.08 கோடி செலவில் புதிய கட்டடங்கள் கட்டப்படும்.

ஆவடி மாநகரில் சட்டம் ஒழுங்கு, குற்றப் பிரிவு மற்றும் துணை ஆணையாளர் அலுவலகங்களுக்கென ஒருங்கிணைந்த புதிய காவல் நிலையக் கட்டடம் கட்டுதல் ஆவடி மாநகரில் சட்டம் ஒழுங்கு, குற்றப் பிரிவு மற்றும் துணை ஆணையாளர் அலுவலகங்களுக்கென ஒருங்கிணைந்த புதிய காவல் நிலையக் கட்டடம் ரூபாய் 7.71 கோடி செலவில் கட்டப்படும்.

நீலகிரி மாவட்டம் உதகமண்டலத்தில் 90 ஆயுதப்படை காவல் குடியிருப்புகள் மற்றும் தருமபுரியில் 135 ஆயுதப்படை காவல் குடியிருப்புகள் கட்டுதல் 1984-இல் கட்டப்பட்ட நீலகிரியில் உள்ள ஆயுதப்படை காவல் குடியிருப்பானது, தற்போது பாழடைந்த நிலையில் உள்ளது. எனவே, அக்கட்டடம் இடிக்கப்பட்டு புதிய ஆயுதப்படை காவல் குடியிருப்புக் கட்டடம் கட்டப்படும். அதேபோன்று, 1982-இல் கட்டப்பட்ட தருமபுரியில் உள்ள ஆயுதப்படை காவல் குடியிருப்பானதும், தற்போது பாழடைந்த நிலையில் உள்ளது. எனவே, அக்கட்டடம் இடிக்கப்பட்டு புதிய ஆயுதப்படை காவல் குடியிருப்புக் கட்டடம் கட்டப்படும். இவற்றிற்கான மொத்த செலவினம் ரூபாய் 101.35 கோடி ஆகும்.

ஆறு காவல் உதவி ஆணையாளர், எட்டு காவல் ஆய்வாளர், 22 காவல் உதவி ஆய்வாளர் மற்றும் 255 காவல் ஆளிநர்களுக்கென மொத்தம் 321 காவல் குடியிருப்புகள் கட்டுதல் ஆறு காவல் உதவி ஆணையாளர், எட்டு காவல் ஆய்வாளர், 22 காவல் உதவி ஆய்வாளர் மற்றும் 255 காவல் ஆளிநர்கள் ஆக மொத்தம் 321 காவல் ஆளிநர்களின் பயன்பாட்டிற்கென, திருச்சி மாவட்டம் துவாக்குடியில் 70, கரூர் மாவட்டம் வெள்ளணையில் 29, தருமபுரி மாவட்டம் கம்பைநல்லூரில் 32, திருநெல்வேலி மாவட்டம் களக்காட்டில் 39, பெருநகர சென்னை காவல் இராயப்பேட்டையில் 6, பெருநகர சென்னை காவல் கொண்டித்தோப்பில் 120 மற்றும் இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் 25 என ஆக மொத்தம் 321 குடியிருப்புகள் ரூபாய் 143.16 கோடி செலவில் கட்டப்படும்.

ஆயுதப்படை காவல் ஆளிநர்களுக்காக காவலர் தங்குமிடங்கள் கட்டுதல் காவலர் தங்குமிடம் வசதி இல்லாத அல்லது குறைவாக உள்ள 20 மாவட்ட/ மாநகரங்களில் ஆயுதப்படை காவல் ஆளிநர்களின் பயன்பாட்டிற்காக 50 படுக்கை வசதிகள் கொண்ட காவலர் தங்குமிடங்கள் ரூபாய் 30 கோடி செலவில் கட்டப்படும்.

கோயம்புத்தூர் தீவிரவாத தடுப்புப் பிரிவிற்கு கோவை மாநகரத்தில் அலுவலகக் கட்டடம் கட்டுதல் நுண்ணறிவுப் பிரிவின் கீழ் புதிதாக உருவாக்கப்பட்ட கோயம்புத்தூர் தீவிரவாத தடுப்புப் பிரிவிற்கு (Anti Terrorism Squad) கோவை மாநகரத்தில் ரூபாய் 5.98 கோடி செலவில் அலுவலகக் கட்டடம் கட்டப்படும்.

சென்னை செம்பியம் அதிஉயரலை சமிக்ஞை (Repeater Station) நிலையத்திற்கென புதிய கட்டடம் கட்டுதல் சென்னை செம்பியத்தில் அமைந்துள்ள அதிஉயரலை சமிக்ஞை நிலையமானது, தற்போது பழைய கட்டடத்தில் செயல்பட்டு வருவதால், அக்கட்டடத்தை இடித்து விட்டு, அதற்கென ஒரு புதிய கட்டடம் ரூபாய் 76 இலட்சம் செலவில் கட்டப்படும்.

III புதிய காவல் வாகனங்கள் வாங்குதல்
சார்நிலை காவல் அதிகாரிகள் மற்றும் காவல் நிலைய அதிகாரிகளுக்காக 350 நான்கு சக்கர வாகனங்கள் (ஈப்புகள்) வாங்குதல் தற்போது சார்நிலை காவல் அதிகாரிகள் மற்றும் காவல் நிலைய அதிகாரிகள் பயன்படுத்திவரும் வாகனங்கள் மிகவும் பழுதடைந்துள்ளதால், ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள 1257 வாகனங்கள் கழிவுசெய்யப்பட்டு அவற்றிற்கு பதிலாக 350 நான்கு சக்கர வாகனங்கள் (ஈப்புகள்) ரூபாய் 38.85 கோடி செலவில் வாங்கப்படும்.

சென்னை மாநகரக் காவல்துறையை தவிர்த்து மற்ற மாநகரங்களுக்காக 80 இளஞ்சிவப்பு ரோந்து வாகனங்கள் (Pink Patrol Vehicles) வாங்குதல். பெண்களின் பாதுகாப்பினை உறுதி செய்வதற்காக, மாநகரங்களின் (சென்னை பெருநகரம் தவிர) பயன்பாட்டிற்கென 80 இளஞ்சிவப்பு ரோந்து வாகனங்கள் (Pink Patrol Vehicles) ரூபாய் 12 கோடி செலவில் வாங்கப்படும்.

காவல் ஆளிநர்களின் போக்குவரத்திற்காக 10 புதிய பேருந்துகள் வாங்குதல் காவல் ஆளிநர்களின் போக்குவரத்திற்காக, ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள பேருந்துகள் பழுதடைந்துள்ளதால், 68 வாகனங்கள் கழிவு செய்யப்பட்டு, அதற்குப் பதிலாக 10 புதிய பேருந்துகள் (Buses) ரூபாய் 4.31 கோடி செலவில் வாங்கப்படும்.

சிறைக்கைதிகளின் வழிக்காவலுக்காக 20 புதிய வாகனங்கள் வாங்குதல் சிறைக்கைதிகளின் வழிக்காவலுக்காக ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள 5 வாகனங்களும், 537 வேன்கள்/டெம்போ டிராவலர் வாகனங்களும் கழிவு செய்யப்பட்டு, அதற்குப் பதிலாக, சிறைக்கைதிகளின் வழிக்காவலுக்கென 20 புதிய வாகனங்கள் (Patrol vehicles) ரூபாய் 3.40 கோடி செலவில் வாங்கப்படும்.

காவல் ஆளிநர்கள் தளவாடங்களை எடுத்துச் செல்ல 10 லாரிகள் வாங்குதல் காவல் ஆளிநர்கள் தளவாடங்களை எடுத்துச் செல்ல ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள லாரிகள் பழுதடைந்துள்ளதால், 261 வாகனங்கள் கழிவு செய்யப்பட்டு, அதற்குப் பதிலாக 10 புதிய லாரிகள் (Lorries) ரூபாய் 2.35 கோடி செலவில் வாங்கப்படும்.

காவல் ஆளிநர்கள் தளவாடங்களை எடுத்துச் செல்ல 10 சிறிய ரக லாரிகள் வாங்குதல் காவல் ஆளிநர்கள் தளவாடங்களை எடுத்துச் செல்ல ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள லாரிகள் பழுதடைந்துள்ளதால், 261 வாகனங்கள் கழிவு செய்யப்பட்டு, அதற்குப் பதிலாக 10 புதிய சிறிய ரக லாரிகள் (Mini Lorries) ரூபாய் 2 .00 கோடி செலவில் வாங்கப்படும்.

IV புதிய தொழில்நுட்ப உபகரணங்கள் வாங்குதல்
தமிழ்நாடு காவல் துறையில் இணையவழி குற்றப் பிரிவிற்கு நவீன திரைமறைவு இணையதள (Dark Web) கண்காணிப்பு அமைப்பு நிறுவுதல் திரைமறைவு இணையதளம் வழியாக நிகழ்த்தப்படும் இணையவழிக் குற்றங்களைத் தடுப்பதற்காக திரைமறைவு இணையதள (Dark Web) கண்காணிப்பு அமைப்பிற்கான சிறப்புப் பிரிவு ஒன்று ரூபாய் 2.10 கோடி செலவில் அமைக்கப்படும். இத்திட்டம் மூன்று வருடங்களில் செயல்படுத்தப்படும். இதற்கென வருடத்திற்கு ரூபாய் 70 இலட்சம் வீதம் ஒதுக்கீடு செய்யப்படும் .

டிஜிட்டல் உயரலை தொடர்பு சாதனத் திட்டம் (DMR) மேலும் நான்கு மாவட்டங்கள் மற்றும் இரண்டு மாநகரங்களுக்கு விரிவுபடுத்துதல் ஏற்கனவே சில மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டுவரும் டிஜிட்டல் உயரலை தொடர்பு சாதன (DMR) திட்டம், விருதுநகர், திண்டுக்கல், தென்காசி, அரியலூர் ஆகிய நான்கு மாவட்டங்கள் மற்றும் மதுரை, கோயம்புத்தூர் ஆகிய மாநகரங்களுக்கு ரூபாய் 30 கோடி செலவில் விரிவுபடுத்தப்படும்.

சென்னை பெருநகர காவல் பயன்பாட்டிற்கென வெடிகுண்டுகளைக் கண்டுபிடித்து செயலிழக்கச் செய்யும் கருவிகள் வாங்குதல் சென்னை பெருநகரில் உள்ள பொதுமக்களின் பாதுகாப்பினை உறுதி செய்ய, காவல் துறையில் உள்ள பாதுகாப்புப் பிரிவின் பயன்பாட்டிற்கென வெடிகுண்டுகளைக் கண்டுபிடித்து செயலிழக்கச் செய்யும் கருவிகள் (BDDS Equipments) ரூபாய் 3.99 கோடி செலவில் வாங்கப்படும்.

தமிழ்நாடு கைவிரல் ரேகைப் பிரிவின் கீழ் இயங்கிவரும் தமிழ்நாடு காவல்துறையின் புகைப்படப் பிரிவிற்கு நவீன புகைப்படக் கருவிகள் வாங்குதல் தமிழ்நாடு கைவிரல் ரேகைப் பிரிவின் கீழ் இயங்கிவரும் தமிழ்நாடு காவல்துறையின் புகைப்படப் பிரிவின் பயன்பாட்டிற்கென நவீன வசதிகளுடன் கூடிய 55 புகைப்படக் கருவிகள் ரூபாய் 80 இலட்சம் செலவில் வாங்கப்படும்.

சென்னை, ஆவடி மற்றும் தாம்பரம் மாநகரங்களைத் தவிர மற்ற அனைத்து மாவட்ட / மாநகரங்களிலும் பிரத்யேக சமூக ஊடக மையங்கள் உருவாக்குதல் ஒவ்வொரு மாவட்டம் / மாநகரிலும் (சென்னை, ஆவடி மற்றும் தாம்பரம் மாநகரங்களைத் தவிர) போதிய இட வசதி மற்றும் உரிய கட்டமைப்புகளுடன் தேவையான பணியாளர்களுடன் பிரத்யேக சமூக ஊடக மையங்கள் உருவாக்கப்படும்.

தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தில் கணினி வழி கற்பித்தல் மேலாண்மைத் திட்டம் தொடங்குதல் தமிழ்நாடு காவல் துறை ஆளிநர்களுக்கான பயிற்சிக் கருவியாக, கணினி வழி கற்பித்தல் மேலாண்மை (e-LMS) திட்டத்தை செயல்படுத்துவதற்கென, மெய்நிகர் வகுப்பறை (Virtual Class Room), கற்பித்தல் மேலாண்மைத் திட்டம் (Learning Management System) உள்ளிட்டவை அடங்கிய ஒரு திட்டம் தொடங்கப்படும்.

V காவலர் நலன்
நுண்ணறிவுப் பிரிவு / சிறப்பு செயலாக்கத்தில் சிறப்பான பணிக்காக, தமிழ்நாடு முதலமைச்சர் பதக்கம் வழங்குதல் நுண்ணறிவுப் பிரிவு / சிறப்பு செயலாக்கத்தில் சிறப்பான பணிக்கான தமிழ்நாடு முதலமைச்சர் பதக்கம் ரூபாய் 1.20 கோடி செலவில் வழங்கப்படும்.

ஆண்டுதோறும் வழங்கப்படும் அண்ணா பதக்கங்களை 100-லிருந்து 150 ஆக உயர்த்துதல் ஆண்டுதோறும் வழங்கப்படும் அண்ணா பதக்கங்களின் எண்ணிக்கை 100-லிருந்து 150 ஆக உயர்த்தப்படும். இதற்கான தொடர் செலவினம் ரூபாய் 1.08 கோடி ஆகும்.

தமிழ்நாடு முதலமைச்சரின் காவலர் பதக்கங்களின் எண்ணிக்கை 3000-லிருந்து 4000 ஆக உயர்த்தப்படுவதுடன், மாதாந்திர பதக்கப்படியையும் உயர்த்தி வழங்குதல் ஆண்டுதோறும் வழங்கப்படும் தமிழ்நாடு முதலமைச்சரின் காவல் பதக்கங்கள் 3000-லிருந்து 4000 ஆக உயர்த்தப்படுவதுடன், மாதாந்திர பதக்கப் படி ரூ.400-லிருந்து ரூ.500 ஆக உயர்த்தப்படும். இதற்கான தொடர் செலவினம் ரூபாய் 4.80 கோடி ஆகும்.

தமிழ்நாடு சிறப்புக் காவல் அணிகள் மற்றும் அனைத்து ஆயுதப்படை குடியிருப்புகளில் காவல் மன்றங்கள் (Police Clubs) அமைத்தல் மாநிலத்திலுள்ள 15 தமிழ்நாடு சிறப்புக் காவல் அணிகள் மற்றும் 47 மாவட்டம் / நகரங்களில் உள்ள காவல் துறையினரின் குடும்ப நலனுக்காக ஆயுதப்படை குடியிருப்புகளில் ரூபாய் 92 இலட்சம் தொடர் செலவினத்தில் காவல் மன்றங்கள் (Police Clubs) உருவாக்கப்படும்.

“மகிழ்ச்சி“ என்ற காவலர் நலத் திட்டத்தை மேற்கு மண்டலத்திற்கு விரிவுப்படுத்துதல் காவல் துறை ஆளிநர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களின் மனநலன் சார்ந்த உளவியல் பிரச்சினைகளினால் சமூகத்தில் தாக்கம் நிகழாவண்ணம் நிபுணர்களைக் கொண்டு உரிய ஆலோசனை வழங்கும் வகையில், ‘’மகிழ்ச்சி“ என்ற திட்டம் தொடங்கப்பட்டது. அவர்கள் அப்பிரச்சினைகளிலிருந்து மீள்வதற்கு இத்திட்டம் மிகமிக முக்கியமானதாகும். இந்த “மகிழ்ச்சி“ திட்டமானது, ஏற்கெனவே சென்னை, மதுரை மற்றும் திருவாரூரில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருவதால், இத்திட்டத்தினை, மேற்கு மண்டலத்திற்கும் ரூபாய் 47 இலட்சம் செலவினத்தில் விரிவுப்படுத்தப்படும்.

காவலர் பணிக்கு ஆட்களைத் தேர்வு செய்யும் போது, பெண் காவலர்களை தமிழ்நாடு சிறப்புக் காவல் படையில் முதலில் பணியமர்த்தும் வகையில் ஒற்றை நுழைவு முறையை மீண்டும் கொண்டு வருதல் தமிழ்நாடு சிறப்புக் காவல் அணிகளில் பெண் காவலர்களை நியமிக்க தற்போது தடை உள்ளது. இத்தடையை நீக்குவதன் மூலம், பெண் காவலர்களை தமிழ்நாடு சிறப்புக் காவல் படையில் முதலில் பணியமர்த்தும் வகையில், ஒற்றை நுழைவு முறை மீண்டும் கொண்டு வரப்படும். இதன்மூலம் பெண் காவலர்களையும் தமிழ்நாடு சிறப்புக் காவலின் ஒவ்வொரு அணியிலும் நியமிக்க முடியும்.

புலனாய்வு அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் புலனாய்விற்காக பிற மாநிலங்களுக்கு விமானம் மூலம் பயணம் மேற்கொள்ள அனுமதி அளிக்கும் அதிகாரத்தை தமிழ்நாடு காவல் துறை தலைமை இயக்குநர்/காவல் படைத் தலைவர் அவர்களுக்கு வழங்குதல். வழக்குகளை கண்டுபிடிக்கவும், எதிரிகளை கைது செய்யவும், பாரம்பரிய சொத்து குற்றங்கள் தொடர்பாக சொத்துக்களை மீட்பதற்காக மட்டுமின்றி, கணினிசார் குற்றங்கள் மற்றும் பொருளாதாரக் குற்றங்கள் தொடர்பாக பிற மாநிலங்களுக்கு பயணம் மேற்கொள்ளும் புலனாய்வு அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை விமானம் மூலம் செல்ல அனுமதியளிக்கும் அதிகாரம் தமிழ்நாடு காவல் துறை தலைமை இயக்குநர்/காவல் படைத் தலைவர் அவர்களுக்கு வழங்கப்படும்.

குழந்தைகளுக்கு பாலூட்டும் தாய்மார்களான பெண் காவல் பணியாளர்களுக்கு சுலபமான, நிர்ணயம் செய்யப்பட்ட பணி நேரம் வழங்குதல் மகளிர் காவலர்களின் நலத்தினை கருத்தில் கொண்டு, குழந்தைகளுக்கு பாலூட்டும் தாய்மார்களான பெண் காவல் பணியாளர்களுக்கு சுலபமான, நிர்ணயம் செய்யப்பட்ட பணி நேரம் வழங்குவதற்கு அனுமதி அளிக்கப்படும்.

பேறுகாலத்தில் இருக்கும் பெண் காவலர்கள், காக்கி நிற சேலை அணியும் போது, தோள்பட்டையில் அவர்களின் பதவியைக் குறிக்கும் பட்டையை அணிய அனுமதி வழங்குதல் மகளிர் காவலர்களின் நலத்தினை கருத்தில் கொண்டு, பேறுகாலத்தில் இருக்கும் பெண் காவலர்கள், காக்கி நிற சேலை அணியும் போது, தோள்பட்டையில் அவர்களின் பதவியைக் குறிக்கும் பட்டையை அணிய அனுமதி அளிக்கப்படும்.
காவல் துறையின் செய்தி மற்றும் ஊடகத்துறையை நிர்வகிக்கும் பொருட்டு, புதிதாக ஒரு காவல் கண்காணிப்பாளர் பதவி உருவாக்குதல் சமூக ஊடக பயனர்கள் உள்ளிட்ட ஊடகங்கள் மற்றும் பொதுமக்களுடன் தொடர்பை ஏற்படுத்துவதற்காகவும், மாநில காவல் ஊடக மையம் மற்றும் காவல் துறையின் செய்தி மற்றும் ஊடகத்துறையினை நிர்வகிக்கும் பொருட்டும், புதிதாக ஒரு காவல் கண்காணிப்பாளர் பதவி உருவாக்கப்படும்.

காவலர் பயிற்சிப் பள்ளிகளுடன் காவலர் பணியிடைப் பயிற்சி மையங்களை இணைத்தல் பணியிலுள்ள காவல் அலுவலர்கள் மற்றும் ஆளிநர்களுக்கான பணியிடைப் பயிற்சி வழங்கிட, பயிற்சி அளிக்கும் நிறுவனங்களின் தரத்தினை உயர்த்தி, வகைப்படுத்தி, நிலைப்படுத்த வேண்டியுள்ளது. எனவே, மாநிலம் முழுவதும் செயல்படும் 15 காவலர் பணியிடை பயிற்சி மையங்கள், காவலர் பயிற்சிப் பள்ளிகளுடன் இணைக்கப்படும்.

உறுதியான பணி முன்னேற்றத் திட்டத்தின்படி (Assured Career Progression), காவலர்களுக்கான நிலை உயர்த்துதல் (Up gradation) தற்போது 10 + 5 + 10 ஆண்டுகள் என்று உள்ளதை மாற்றி 10 + 3 + 10 என்று நிர்ணயம் செய்து அமல்படுத்துதல் பொதுமக்களுக்கு பயனுள்ள மற்றும் உதவிகரமான சேவையை வழங்குவதற்காக காவல்துறையினரின் செயல்திறனை ஊக்குவிப்பது அவசியமாகும். இதன் ஒருபடியாக, காவலர்கள் பதவி உயர்வில் ஏற்படும் காலதாமதத்தினை கருத்தில் கொண்டு, உறுதியான பணி முன்னேற்றத் திட்டத்தின் அடிப்படையில் தற்போது நடைமுறையில் உள்ள, காவலர்களுக்கான நிலை உயர்த்துதல் (Upgradation) காலத்தை 10 + 5 + 10 ஆண்டுகள் என்பதை மாற்றி 10 + 3 + 10 ஆண்டுகளாக நிர்ணயம் செய்யப்படும். அதாவது, 10 ஆண்டுகள் பணிபுரிந்த இரண்டாம் நிலைக் காவலர்கள் முதல்நிலைக் காவலர்களாகவும், மேலும், அவர்கள் 3 ஆண்டுகள் (ஆக மொத்தம் 13 ஆண்டுகள்) முதல்நிலைக் காவலராக பணிபுரிந்த பின்னர் தலைமைக் காவலர்களாகவும், தலைமைக் காவலராக 10 ஆண்டுகள் (ஆக மொத்தம் 23 ஆண்டுகள்) பணிபுரிந்த பின்னர், சிறப்பு உதவி ஆய்வாளராகவும் தரம் உயர்த்தப்படுவர்.

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் பல்வேறு இடங்களில் கட்டப்பட்ட குடியிருப்புகளில், காவல் ஆளிநர்கள் குடியிருக்க வகை செய்தல் சென்னை, தாம்பரம், ஆவடி மற்றும் கோயம்புத்தூர் நகரங்களில் உள்ள காவல்துறையினருக்கான குடியிருப்பு தேவையை பூர்த்தி செய்வதற்கு, சென்னை சோழிங்கநல்லூர், மகாகவி பாரதியார் நகர், அம்பத்தூர், அயப்பாக்கம், கோயம்புத்தூர் கணபதி ஆகிய இடங்களில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளில் காவல் ஆளிநர்கள் குடியிருப்பதற்கு வகை செய்யப்படும்.

காவல் துறை, சிறைகள் மற்றும் சீர்திருத்தத் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை ஆகியவற்றில் 3,363 காவலர்கள் தேர்வு செய்தல் சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம், காவல்துறையில் 2,833 இரண்டாம் நிலை காவலர்கள் (ஆயுதப்படைக்கு 850 காவலர்கள், தமிழ்நாடு சிறப்புக் காவல் படைக்கு 1,983 காவலர்கள்), சிறைகள் மற்றும் சீர்திருத்தத் துறைக்கு 180 இரண்டாம் நிலை சிறைக்காவலர்கள், தீயணைப்பு மற்றும் மீட்புப் படைக்கு 350 தீயணைப்பாளர்கள் ஆக மொத்தம் 3,363 நபர்கள் தேர்வு செய்யப்படுவர்.

தடய அறிவியல் துறை

தடய அறிவியல் துறையில் கணினி தடய அறிவியல் பிரிவுகளின் திறனை மேம்படுத்துதல் டிஜிட்டல் சான்றுகளை விரைவாக ஆய்வு செய்வதையும், தடய அறிவியல் அறிக்கைகளை குறித்த நேரத்தில் வழங்குவதை உறுதி செய்வதற்காகவும், தடய அறிவியல் துறையில் உள்ள கணினி தடய அறிவியல் பிரிவை வலுப்படுத்தும் வகையில் ரூ.15.16 கோடி செலவில் கணினி மென்பொருட்கள் மற்றும் கணினி வன்பொருட்களை வாங்குதல், மென்பொருள் பயன்பாட்டிற்கான உரிமங்களை புதுப்பித்தல் மற்றும் மனிதவளத்திற்கு ஊதியம் வழங்குதல் ஆகியவை மேற்கொள்ளப்படும்.

தடய அறிவியல் துறையின் துணைப் பிரிவுகளான வேதியியல், இயற்பியல், மரபணு ஆய்வு மற்றும் நஞ்சியல் பிரிவில் தடய அறிவியல் அறிக்கைகளை விரைந்து அளிக்கவும், பணியாளர்களின் திறனை மேம்படுத்திட ஏதுவாகவும் தொழில்நுட்ப மனிதவளத்தை ஏற்படுத்தல் வேதியியல், இயற்பியல், மரபணு ஆய்வு மற்றும் நஞ்சியல் பிரிவின் பகுப்பாய்வுப் பணிகளை விரைவுபடுத்துவதற்காக, தடய அறிவியல் துறையின் மேற்கண்ட துணைப் பிரிவுகளில் தொழில்நுட்ப மனிதவளம் ரூபாய் 1.74 கோடி செலவில் ஏற்படுத்தப்படும்.

சேலம், விழுப்புரம், வேலூர், தஞ்சாவூர், மதுரை மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களில் உள்ள வட்டார தடய அறிவியல் ஆய்வகங்களில் தற்போதுள்ள போதைப் பொருள் சோதனைப் பிரிவுகளில் புதிதாக மனமயக்கப் பொருட்கள் மருந்து சோதனை அலகுகள் அமைத்தல் சேலம், விழுப்புரம், வேலூர், தஞ்சாவூர், மதுரை மற்றும் திருநெல்வேலியில் உள்ள வட்டார தடய அறிவியல் ஆய்வகங்களில் போதை பொருள் சோதனை பிரிவுகளில், புதிதாக மனமயக்கப் பொருட்கள் மற்றும் மருந்து சோதனை அலகுகள், தேவையான உபகரணங்கள் மற்றும் மனிதவளங்களுடன் ரூபாய் 1 .23 கோடி செலவில் அமைக்கப்படும்.

சென்னையில் உள்ள தடய அறிவியல் துறையின் முதன்மை ஆய்வக வளாகத்தில் புதிய நவீன ஆய்வகக் கட்டடம் கட்டுதல் புதிய பிரிவுகள் உருவாக்கம், புதிய கருவிகள் வாங்குதல் மற்றும் மேம்பட்ட தொழில்நுட்ப முறைகள் காரணமாக ஏற்படும் தடய அறிவியல் துறையின் விரிவாக்கத்திற்கு வகை செய்ய ஏதுவாக, தடய அறிவியல் துறையின் முதன்மை ஆய்வக வளாகத்தில் அமைந்துள்ள பழைய பாழடைந்த கல்வித் தொகுதி கட்டடத்தை அப்புறப்படுத்தி, நவீன அடுக்குமாடி ஆய்வகக் கட்டடம் கட்டப்படும்.

குற்ற நிகழ்விடப் பார்வையிடல் (Scene of Crime) விசாரணையை வலுப்படுத்தும் வகையில் மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் நடமாடும் தடய அறிவியல் வாகனங்களை (Mobile Forensic Vehicles) வழங்குதல் தடய அறிவியல் துறையின் குற்ற நிகழ்விடப் பார்வையிடல் விசாரணை முறையை வலுப்படுத்துவதற்கு ஏதுவாக, 50 நடமாடும் தடய அறிவியல் வாகனங்களும் (Mobile Forensic Vehicles), அவற்றிற்கு தேவையான மனிதவளம், எரிபொருள் மற்றும் பராமரிப்புச் செலவுகள் ஆகியவற்றிற்கென ரூபாய் 38.25 கோடி வழங்கப்படும்.

தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை

I புதிய தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலையங்கள் நிறுவுதல்
புதிய தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையங்கள் நிறுவுதல் திருவண்ணாமலை மாவட்டம்-அருணாசலேஸ்வரர் திருக்கோவில், பெரம்பலூர் மாவட்டம் – வேப்பந்தட்டை, வேலூர் மாவட்டம் – பள்ளிகொண்டா, விழுப்புரம் மாவட்டம்-கண்டமங்கலம், கரூர் மாவட்டம் – குளித்தலை, கிருஷ்ணகிரி மாவட்டம்- சூளகிரி, கன்னியாகுமரி மாவட்டம் – இராஜாக்கமங்கலம் ஆகிய 7 இடங்களில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையங்கள் ரூபாய் 16.80 கோடி செலவில் அமைக்கப்படும்.

II தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையங்களை தரம் உயர்த்துதல்
தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையங்களை தரம் உயர்த்துதல் நீலகிரி மாவட்டம் – கோத்தகிரி, திண்டுக்கல் மாவட்டம் – பழனி, இராமநாதபுரம் மாவட்டம் – இராமேஸ்வரம் ஆகிய மூன்று தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையங்கள் ரூபாய் 5.60 கோடி செலவில் தரம் உயர்த்தப்படும்.

III புதிய தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் வாகனங்கள் மற்றும் உபகரணங்கள் வழங்குதல்
தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலையங்களின் பயன்பாட்டிற்காக 10 நீர்தாங்கி வண்டிகள் (Water Tender) வழங்குதல் பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக பயன்பாட்டிலுள்ள 10 நீர்தாங்கி வண்டிகளுக்கு பதிலீடாகப் புதிய ஊர்திகள் ரூபாய் 9 கோடி செலவில் கொள்முதல் செய்து வழங்கப்படும்.

தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையின் பயன்பாட்டிற்கு புதியதாக 15 சிறிய நுரை தகர்வு ஊர்திகள் (Foam Tenders) வழங்குதல் அனைத்து மாவட்டங்கள் மற்றும் தீ விபத்து அதிகம் ஏற்படக் கூடிய பகுதிகளில் உள்ள தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையங்களுக்கு சிறிய நுரை தகர்வு ஊர்தி வழங்கும் திட்டத்தின் இரண்டாம் கட்டமாக, 15 சிறிய நுரை தகர்வு ஊர்திகள் (Foam Tenders) ரூபாய் 15 கோடி செலவில் கொள்முதல் செய்து வழங்கப்படும்.

தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையின் பயன்பாட்டிற்கு புதியதாக பெரும தண்ணீர் லாரிகள் (Water Bowzers) வழங்குதல் தீவிபத்து அதிகம் ஏற்படக்கூடிய பகுதிகளில் உள்ள தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையங்களுக்கு ரூபாய் 5 கோடி செலவில் 5 பெரும தண்ணீர் லாரிகள் (Water Bowzers) கொள்முதல் செய்து வழங்கப்படும்.

தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையின் பயன்பாட்டிற்கு மூச்சுக் கருவிகள் (Breathing Apparatus Sets) வழங்குதல் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகளின் போது பயன்படுத்துவதற்காக 700 மூச்சுக் கருவிகள் (Breathing Apparatus Sets) ரூபாய் 10.50 கோடி செலவில் கொள்முதல் செய்து வழங்கப்படும்.

தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையின் பயன்பாட்டில் உள்ள மூச்சுக் கருவிகளுக்கு மறுநிரப்பம் செய்ய காற்றுப் பிடிக்கும் கருவிகள் வழங்குதல் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையின் பயன்பாட்டில் உள்ள மூச்சுக் கருவிகளுக்கு மறுநிரப்பம் செய்ய 5 காற்றுப் பிடிக்கும் கருவிகள் (Breathing Apparatus – Air Compressors) ரூபாய் 80 இலட்சம் செலவில் கொள்முதல் செய்து வழங்கப்படும்.

தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையின் பயன்பாட்டிற்கு நீட்டிச் சுருக்கும் இரப்பர் விசைப் படகுகள் வழங்குதல் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையின் பயன்பாட்டிற்கு 50 நீட்டிச் சுருக்கும் இரப்பர் விசைப் படகுகள் (Inflatable Rubber Boats with Out Board Motor) ரூபாய் 3.5 கோடி செலவில் கொள்முதல் செய்து வழங்கப்படும்.

தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையங்கள் பயன்பாட்டிற்கு கூட்டு மீட்புக் கருவிகள் (Combi-tools) வழங்குதல் அனைத்து தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையங்களின் பயன்பாட்டிற்கு கூட்டு மீட்புக் கருவிகள் வழங்கும் திட்டத்தின் முதல் கட்டமாக, 50 கூட்டு மீட்புக் கருவிகள் (Combi-tools) ரூபாய் 4.5 கோடி செலவில் கொள்முதல் செய்து வழங்கப்படும்.

தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையின் பணியாளர்களுக்கு மழையங்கிகள் (Rain Coats) வழங்குதல் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையின் பணியாளர்களுக்கு 2,500 மழையங்கிகள் (Rain Coats) ரூபாய் 50 இலட்சம் செலவில் கொள்முதல் செய்து வழங்கப்படும்.

தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையின் உதவி மாவட்ட அலுவலர்களின் அலுவலகப் பயன்பாட்டிற்காக புதிதாக ஈப்புகள் (Jeeps) வழங்குதல் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையின் உதவி மாவட்ட அலுவலர்களின் அலுவல் பணிகளுக்காக ஈப்புகள் (Jeeps) வழங்கும் திட்டத்தின் இரண்டாம் கட்டமாக 10 ஈப்புகள் ரூபாய் 90 லட்சம் செலவில் கொள்முதல் செய்து வழங்கப்படும்.

தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையின் நிலைய அலுவலர்களின் பயன்பாட்டிற்காக புதிய விசைமிதி வண்டிகள் (Motor Cycles) வழங்குதல் அனைத்து நிலைய அலுவலர்களுக்கும் விசைமிதி வண்டிகள் (Motor Cycles) வழங்கும் திட்டத்தின் இரண்டாம் கட்டமாக 50 விசைமிதி வண்டிகள் (Motor Cycles) ரூபாய் 80 இலட்சம் செலவில் கொள்முதல் செய்து வழங்கப்படும்.

IV தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையங்களுக்கு புதிய கட்டடங்கள்/ சுற்றுச்சுவர் கட்டுதல்
திண்டிவனம் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையத்திற்கு புதிய கட்டடம் கட்டுதல் விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையத்திற்கு ரூபாய் 5.58 கோடி செலவில் புதிய கட்டடம் கட்டப்படும்.

காட்டுமன்னார்கோவில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையத்திற்கு புதிய கட்டடம் கட்டுதல் கடலூர் மாவட்டம், காட்டுமன்னார் கோவிலில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையத்திற்கு ரூபாய் 6.68 கோடி செலவில் புதிய கட்டடம் கட்டப்படும்.

கொடைக்கானல் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையத்திற்கு புதிய கட்டடம் கட்டுதல் திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையத்திற்கு ரூபாய் 3.13 கோடி செலவில் புதிய கட்டடம் கட்டப்படும்.

குன்னூர் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையத்திற்கு புதிய கட்டடம் கட்டுதல் நீலகிரி மாவட்டம், குன்னூரில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையத்திற்கு ரூபாய் 4.90 கோடி செலவில் புதிய கட்டடம் கட்டப்படும்.

ஆலங்குளம் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையத்திற்கு புதிய கட்டடம் கட்டுதல் தென்காசி மாவட்டம், ஆலங்குளத்தில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையத்திற்கு ரூபாய் 4.76 கோடி செலவில் புதிய கட்டடம் கட்டப்படும்.

மதுரை தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையம் மற்றும் தென்மண்டல துணை இயக்குநர் அலுவலகம் ஆகியவற்றிற்கு புதிய கட்டடம் கட்டுதல் மதுரை தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையம் மற்றும் தென்மண்டல துணை இயக்குநர் அலுவலகம் ஆகியவற்றிற்கு ரூபாய் 7.85 கோடி செலவில் புதிய கட்டடம் கட்டப்படும்.

திருச்சி மண்டல பயிற்சி மையம் நிறுவுவதற்கான நிலத்திற்கு சுற்றுச்சுவர் கட்டுதல் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையின் திருச்சி மண்டல பயிற்சி மையம் நிறுவுவதற்காக கையகப்படுத்தப்பட்டுள்ள நிலத்திற்கு சுற்றுச்சுவர் (Compound Wall) ரூபாய் 85 இலட்சம் செலவில் கட்டப்படும்.

V தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் அலுவலர் மற்றும் பணியாளர்களுக்கு குடியிருப்புகள் கட்டுதல்
கோயம்புத்தூர் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலைய வளாகத்தில் பணியாளர்களுக்கு குடியிருப்புகள் கட்டுதல் கோயம்புத்தூர் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலைய வளாகத்தில் ரூபாய் 27.22 கோடி செலவில் 72 பணியாளர் குடியிருப்புகள் இரண்டு கட்டங்களாகக் கட்டப்படும்.

VI புதிய மண்டலம் உருவாக்குதல்
தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையில் திருச்சியை தலைமையிடமாகக் கொண்ட மத்திய மண்டலத்தை இரண்டாகப் பிரித்து விழுப்புரத்தில் புதிய மண்டலம் உருவாக்குதல் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையில் திருச்சியை தலைமையிடமாகக் கொண்ட மத்திய மண்டலத்தை இரண்டாகப் பிரித்து விழுப்புரத்தைத் தலைமையிடமாகக் கொண்டு ஒரு புதிய மண்டலம் பின்வரும் வகையில் ரூபாய் 1.04 கோடி செலவில் உருவாக்கப்படும். மண்டலம் மாவட்டங்கள் மத்திய மண்டலம் திருச்சி, புதுக்கோட்டை, கரூர், அரியலூர், தஞ்சாவூர் மற்றும் திருவாரூர். விழுப்புரம் மண்டலம் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை.

VII பதக்கங்கள்
தீத்தொண்டு நாளில் வழங்கப்படும் சிறப்புப் பணி பதக்கம் மற்றும் அண்ணா பிறந்த நாளில் வழங்கப்படும் அண்ணா பதக்கம் ஆகியவற்றின் எண்ணிக்கையை உயர்த்துதல் தீத்தொண்டு நாளில் வழங்கப்படும் சிறப்புப் பணி பதக்கம் மற்றும் அண்ணா பிறந்த நாளில் வழங்கப்படும் அண்ணா பதக்கம் ஆகியவற்றின் எண்ணிக்கை பின்வருமாறு உயர்த்தப்படும் பதக்கத்தின் பெயர் தற்போது வழங்கப்படும் எண்ணிக்கை உயர்த்தி வழங்கப்பட உள்ள எண்ணிக்கை சிறப்புப் பணி பதக்கம் (ஏப்ரல் 14) 6 12 அண்ணா பதக்கம் (செப்டம்பர் 15) 10 20

VIII அதிவிரைவு மீட்புப் படைக்கு பயிற்சி மற்றும் சிறப்பு உபகரணங்கள் வழங்குதல்
தீயணைப்போர் கமாண்டோ படைகளுக்கு (Rapid Rescue Force – அதிவிரைவு மீட்புப் படை) பயிற்சி மற்றும் சிறப்பு உபகரணங்கள் வழங்குதல் தலா 25 தீயணைப்போர்களைக் கொண்ட இரண்டு கமாண்டோ படைகளுக்கு (Rapid Rescue Force – அதிவிரைவு மீட்புப் படை) பயிற்சி மற்றும் சிறப்பு உபகரணங்கள் ரூபாய் 1.00 கோடி செலவில் வழங்கப்படும்.

The post காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைக்கான புதிய அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!! appeared first on Dinakaran.

Tags : Chief Minister MLA ,Police, Fire and Rescue Department ,K. Stalin ,Chennai ,Chief Minister ,MLA ,Legislative Assembly ,Police and Fire and Rescue Department ,K. ,Stalin ,Police Department ,NEILAMPUR ,Mu. K. Stalin ,Dinakaran ,
× RELATED 2030ம் ஆண்டிற்கான தொலைநோக்கு...