×

போப் பிரான்சிஸ் மறைவைத் தொடர்ந்து புதிய போப்பை தேர்ந்தெடுக்கும் ரகசிய மாநாடு மே 7ல் தொடக்கம்: வாடிகன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

வாடிகன் சிட்டி: போப் பிரான்சிஸ் மறைவைத் தொடர்ந்து, புதிய போப்பை தேர்வு செய்வதற்கான கர்தினால்களின் ரகசிய மாநாடு வரும் மே 7ம் தேதி தொடங்குவதாக வாடிகன் அறிவித்துள்ளது. கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ் (88) உடல் நலக் குறைவால் கடந்த 21ம் தேதி காலமானார். அவரது உடல் ரோம் நகரில் உள்ள செயின்ட் மேரி மேஜர் தேவாலயத்தில் கடந்த 26ம் தேதி நல்லடக்கம் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து 9 நாள் துக்க தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், போப் மறைவைத் தொடர்ந்து அடுத்த கட்டமாக புதிய போப்பை தேர்வு செய்வதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. புதிய போப்பை தேர்வு செய்வதற்கான கர்தினால்களின் ரகசிய மாநாடு மே 7ம் தேதி தொடங்கும் என வாடிகன் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. போப்களின் இல்லமான அபோஸ்தலிக் அரண்மனையில் அமைந்துள்ள சிஸ்டைன் சேப்பல் தேவாலயத்தில் கர்தினால்களின் ரகசிய மாநாடு நடத்தப்படும். பாரம்பரிய வழக்கப்படி இந்த மாநாடு, 9 நாள் துக்க தினம் அனுசரிக்கப்பட்ட பிறகு தொடங்கப்படும்.

மொத்தமுள்ள 252 கர்தினால்களில் 135 பேர் வாக்களிக்க தகுதி பெற்றவர்கள். இதில் 108 கர்தினால்கள் போப் பிரான்சிசால் நியமிக்கப்பட்டவர்கள். 135 கர்தினால்கள் சிஸ்டைன் சேப்பலில் நடக்கும் ரகசிய மாநாட்டில் பங்கேற்பார்கள். அப்போது இந்த சேப்பல் மூடி சீலிடப்படும். புதிய போப் தேர்வு செய்யப்படும் வரையிலும் கர்தினால்களை வெளி உலகில் இருந்து யாரும் தொடர்பு கொள்ள முடியாது. புதிய போப்பை தேர்வு செய்ய கர்தினால்கள் வாக்குச்சீட்டில் தங்கள் வாக்கை அளிப்பார்கள். இரண்டில் 3 பங்கு பெரும்பான்மை பெறுபவர்கள் புதிய போப்பாக அறிவிக்கப்படுவார்கள். இந்த பெரும்பான்மை எட்டாத பட்சத்தில் வாக்குச்சீட்டுகள் எரிக்கப்படும். அதன் மூலம் சேப்பலின் கூரையில் உள்ள சிம்னி மூலமாக கரும்புகை வெளியிடப்படும். புதிய போப் தேர்வு செய்யப்பட்ட உடன் அதை வெளி உலகுக்கு உணர்த்தும் வகையில் வெண் புகை வெளியிடப்படும். அதோடு தேவாலய மணி ஒலிக்கப்படும்.

 

The post போப் பிரான்சிஸ் மறைவைத் தொடர்ந்து புதிய போப்பை தேர்ந்தெடுக்கும் ரகசிய மாநாடு மே 7ல் தொடக்கம்: வாடிகன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Secret conclave to ,Pope Francis' ,Vatican ,Vatican City ,Pope Francis ,pope ,Catholic Church ,conclave ,
× RELATED ஈக்வடாரில் பிரபல கால்பந்து வீரர்...