×

சிலம்பு சூப்பர் பாஸ்ட் ரயில் வாரத்தில் 7 நாட்களும் இயக்க வேண்டும்

புதுக்கோட்டை, ஏப்.28: வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமே இயக்கப்படும் செங்கோட்டையில் இருந்து சென்னை செல்லும் சிலம்பு சூப்பர் பாஸ்ட் ரயிலை ஏழு நாட்களும் இயக்க ரயில்வே துறை நடவடிக்கை வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக்கோட்டை மாநகரக்குழு கூட்டம் புதுக்கோட்டையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு, மாநகரக்குழு உறுப்பினர் கணேஷ் தலைமை வகித்தார். கூட்டத்தில், கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

செங்கோட்டையில் இருந்து சென்னைக்கு செல்லும் சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயில் வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன. பயணிகளின் நலன் கருத்து வாரத்தின் அனைத்து நாட்களும் இயக்க ரயில்வே துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், மாவட்டத் தலைநகரம் என்கிற அடிப்படையில் புதுக்கோட்டை ரயில் நிலையத்தில் அனைத்து ரயில்களும் நின்று செல்லவும் ரயில்வே துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். புதுக்கோட்டை அண்ணாசிலை அருகில் இயங்கி வரும் அறிவுசார் மையத்தில் போட்டித் தேர்வுக்காக ஏராளமனோர் படித்து வருகின்றனர்.

இவர்களுக்கு கூடுதல் வசதியை ஏற்படுத்தித் தரும் வகையில் அருகில் உள்ள காந்தி பூங்காவை விரிவடைந்த படிப்பகமாக மாநகராட்சி நிர்வாகம் மாற்றித்தர வேண்டும். புதுக்கோட்டையில் பழைய மாவட்ட தலைமை மருத்துவமனையில் அரசு புற்றுநோய் சிகிச்சை மையம் உருவாக்கி சிகிச்சை அளிக்க நடவடிக்கை வேண்டும். கோடைகாலத்தை முன்னிட்டு புதுக்கோட்டை மாநராட்சியில் நிலவும் குடிநீர்த் தட்டுப்பாட்டை போக்குவதற்கு போர்க்கால அடிப்படையில் மாநராட்சி நிர்வாகம் நடைவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

The post சிலம்பு சூப்பர் பாஸ்ட் ரயில் வாரத்தில் 7 நாட்களும் இயக்க வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Pudukkottai ,Communist Party of India ,Marxist ,Railway Department ,Sengottai ,Chennai ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை