×

ஆண்டிபட்டி தாலுகா அலுவலகத்தில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்த கோரிக்கை

ஆண்டிபட்டி, ஏப். 24: ஆண்டிபட்டி நகரில், தேனி-மதுரை சாலையில் தாலுகா அலுவலகம் அமைந்துள்ளது. இந்த தாலுகா அலுவலகத்தில் பட்டா மறுதல், வீட்டு மனை பட்டாக்கள், இலவச வீட்டு மனை பட்டாக்கள் உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ்களுக்கு விண்ணப்பிக்கவும், சான்றிதழ்கள் பெறவும் பொதுமக்கள் இந்த அலுவலகத்தை அணுகி வருகின்றனர். மேலும் இந்த அலுவலகத்தில் இ-சேவை மையம், ஆதார் கார்டு விண்ணப்பித்தால், புதுப்பித்தல் செய்யும் அலுவலகம் என தனி கட்டிடம் உள்ளது. ஆண்டிபட்டி, கண்டமனூர், கடமலை-மயிலை, வருசநாடு, மேகமலை உள்ளிட்ட நீண்ட தூரத்தில் இருந்து ஏராளமானோர் தினந்தோறும் பல்வேறு பணிகளுக்காக வந்து செல்கின்றனர். வருவாய் வட்டத்தில் நடைபெறும் சட்டம் மற்றும் ஒழுங்கு பாதிக்கப்படும் நிலையில், அதனை விசாரிக்கவும், அமைதிபடுத்தும் பணியும் இந்த அலுவலகத்தில் நடைபெறும்.

இந்நிலையில் தினந்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வரும் இந்த தாலுகா அலுவலகத்தில், குடி தண்ணீர் இல்லாதது மக்களிடையே சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்கள் பலரும் தங்கள் குழந்தைகளுடன் தாலுகா அலுவலகத்திற்கு பல்வேறு பணிகளுக்காக வந்து செல்லும்போது குடிதண்ணீர் வசதி இல்லாததாலும், பொதுமக்கள் அமர்வதற்கு இருக்கைகள் இல்லாததாலும், மேலும் குறிப்பாக பெண்களுக்கு கழிப்பறை வசதி இல்லாததாலும் தாலுகா அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் பல்வேறு சிக்கல்களை சந்திக்கின்றனர். நீண்ட தூரங்களில் இருந்து வரும் பொதுமக்கள் தாலுகா அலுவலகத்தில் அவர்களது வேலையை முடித்துக்கொண்டு செல்வதற்கு மாலை நேரம் ஆகிறது. ஆனால் அலுவலகத்தில் இருக்கை வசதி, குடிதண்ணீர், கழிப்பறை இல்லாததால் வெளியே செல்ல வேண்டிய நிலை எற்பட்டுள்ளது.

இதுகுறித்து பொதுமக்கள் தெரிவிக்கையில், ஆண்டிபட்டி தாலுகா அலுவலகத்தில் வருசநாடு, மேகமலை உள்ளிட்ட 50 கிலோமீட்டர் தூரத்தில் இருந்தும் பொதுமக்கள் வந்து செல்கின்றனர். அவர்களுக்கு தேவையான இருக்கை வசதி, கழிப்பறை வசதி, குடிதண்ணீர் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள் இந்த தாலுகா அலுவலகத்தில் இல்லாததால் பொதுமக்கள் கடும் இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். எனவே ஆண்டிபட்டி தாலுகா அலுவலகத்தில் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

The post ஆண்டிபட்டி தாலுகா அலுவலகத்தில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்த கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Andipatti Taluka Office ,Andipatti ,Taluka Office ,Theni-Madurai Road ,Taluka Office… ,Dinakaran ,
× RELATED அரசு பேருந்தில் போகும் ஊர் குறித்த தகவல் இல்லாததால் பயணிகள் அவதி