×

நவீன கழிப்பிடம் கட்டுமான பணிக்காக அரசு பள்ளி மைதானத்திற்குள் கழிவுநீர் குழாய்கள் பதித்ததால் புது சர்ச்சை

ஊட்டி : ஊட்டி ஏடிசி பகுதியில் நகராட்சி சார்பில் நவீன கழிப்பிடம் கட்டப்பட்டு வரும் நிலையில், அனுமதியின்றி கழிப்பிட கழிவுநீர் குழாய்கள் அரசு மைதானத்திற்குள் அமைக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. நீலகிரி மாவட்டம், ஊட்டியில் ஏடிசி., பகுதியில் விளையாட்டு மைதானம் உள்ளது.

2.45 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த விளையாட்டு மைதானம் ஊட்டி அரசு மேல்நிலை பள்ளி கட்டுபாட்டில் உள்ளது. தாவரவியல் பூங்கா சாலையில் எச்ஏடிபி., மைதானம் உருவாக்கப்படுவதற்கு முன்பு வரை அனைத்து விதமான விளையாட்டு போட்டிகளும் இம்மைதானத்திலேயே நடைபெற்று வந்தன.

அதன் பின் எச்ஏடிபி., மைதானம் அமைக்கப்பட்டதற்கு பிறகு, பெரிய அளவில் விளையாட்டு போட்டிகள் ஏதுவும் நடத்தப்படுவதில்லை. தனியார் பள்ளி இம்மைதானத்தை பயன்படுத்துவது தொடர்பான வழக்கில், அரசு பள்ளிக்கு சொந்தமான மைதானத்தை அரசு பள்ளி மாணவர்கள் மட்டுமே மைதானத்தை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. தற்போது மைதானத்தை அரசு பள்ளி மாணவர்கள் மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர்.

மைதானத்திற்கு வெளிப்புறம் மினி பஸ்கள் நிறுத்துமிடத்தில் நகராட்சி சார்பில் நவீன கழிப்பிடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. கட்டுமான பணிகள் முடிவடைந்த நிலையில், மைதானத்திற்கு உட்புறம் சுற்றுச்சுவர் பகுதியில் எவ்வித அனுமதியுமின்றி பள்ளம் தோண்டப்பட்டு கழிவுநீர் குழாய்கள் பதிக்கும் பணியை ஒப்பந்ததாரர் மேற்கொண்டுள்ளார்.

இதுகுறித்து அறிந்தவுடன் அரசு பள்ளி நிர்வாகம் சம்பந்தப்பட்ட இடத்தை பார்வையிட்டு நகராட்சி கழிப்பிட கழிவுநீர் குழாயை மைதானத்திற்குள் அமைக்கக்கூடாது என அறிவுறுத்தினர்.

இதனால் பணி பாதியிலேயே நிறுத்தப்பட்டது. மைதானத்திற்குள் அமைக்கப்பட்ட நிலையில் உள்ள கழிவுநீர் குழாயை அப்புறப்படுத்த வேண்டும். மைதானத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

The post நவீன கழிப்பிடம் கட்டுமான பணிக்காக அரசு பள்ளி மைதானத்திற்குள் கழிவுநீர் குழாய்கள் பதித்ததால் புது சர்ச்சை appeared first on Dinakaran.

Tags : Ooty ,Ooty ADC ,ADC ,Ooty, Nilgiris district.… ,Dinakaran ,
× RELATED அன்புமணி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி...