×

வாலாஜாபாத்-ஒரகடம் சாலை சேர்காடு வளைவு பகுதியில் கனரக லாரிகளில் இருந்து சிதறும் ஜல்லி கற்களால் விபத்து: வாகன ஓட்டிகள் அச்சம்

 

வாலாஜாபாத்: வாலாஜாபாத் – ஒரகடம் சாலை சேர்காடு வளைவு பகுதியில் கனரக லாரிகளில் இருந்து சிதறும் ஜல்லி கற்காளால் விபத்து ஏற்படுவதால் இருசக்கர வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர். வாலாஜாபாத் பேரூராட்சியில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு ரயில் நிலையம், காவல் நிலையம், ஒன்றிய அலுவலகம், தாலுகா அலுவலகம், வங்கிகள், சார்பதிவாளர் அலுவலகம், உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் செயல்படுகின்றன.

மேலும் வாலாஜாபாத் சுற்றிலும் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. கல்வே, வேலை, வியாபாரம், மருத்துவம் என பல்வேறு தேவைகளுக்காக செல்லும் பொதுமக்கள் வாலாஜாபாத்தில் இருந்து ஒரகடம், ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார்சத்திரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு சென்று வருகின்றனர். இதன் காரணமாக வாலாஜாபாத் – ஒரகடம் சாலையில் நாள்தோறும் வாகன போக்குவரத்து மிகுந்து பரபரப்புடன் காணப்படுகிறது.

இந்நிலையில் வாலாஜாபாத் அடுத்த சேர்க்காடு பகுதியில் சாலை வளைவு உள்ளது. இப்பகுதியில் செல்லும் கனரக லாரிகளில் இருந்து ஜல்லி கற்கள், எம்.சாண்ட் மணல் ஆகியசை சாலை முழுவதும் பரவிக்கிடக்கிறது. ஜல்லிக்கற்கள் மீது செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் தவறி விழுந்து காயமடைகின்றனர். சில நேரங்களில் விபத்தில் சிக்குவோர் உயிரிழக்கும் சம்பவங்களும் நடக்கிறது. இதனால், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சாலையில் பயணிக்கின்றனர்.

ஜல்லி, மணல் ஏற்றிச் செல்லும் கனரக லாரிகள் தார்பாய் போட்டு மூடாமல் செல்வதால் தூசி பறந்து பின்னால் வரும் வாகன ஓட்டிகளின் கண்களை பதம்பார்க்கிறது. மாசு படிந்த காற்றால் சுவசப் பிரச்னைகளும் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். மேலும், சேர்க்காடு வளைவு பகுதியில் அதிக வேகத்தில் திரும்புவதால் லாரியில் உள்ள கட்டுமான பொருட்கள் அனைத்தும் சாலையிலேயே சிதறி கிடக்கின்றன.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், வாலாஜாபாத் – ஒரகடம் சாலை கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சேர்க்காடு பகுதியில் ஆறு வழி சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில், கனரக வாகனங்களில் இருந்து சிதறும் எம் சாண்ட், ஜல்லி கற்கள் சாலையின் இருபுறமும் சிதறிக்கிடக்கிறது. சாலை முழுவதும் வண்டல் மண் பரவிக்கிடக்கிறது. இதனை அகற்ற பலமுறை நெடுஞ்சாலைத்துறையிடம் புகார் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் சாலையின் வளைவு பகுதியில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் சிதறி ஜல்லி கற்களால் வழுக்கி விபத்துக்குள்ளாகும் சுழலும் நாள்தோறும் அரங்கேறுகின்றன.

குறிப்பாக, இரவு நேரங்களில் வளைவு பகுதியில் அதிகளவில் விபத்துகள் ஏற்படுவதால் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி காயமடைகின்றனர். எனவே, பொதுமக்கள் பாதுகாப்பாக பயணம் செல்லும் வகையில் வாலாஜாபாத் – ஒரகடம் சாலை சேர்காடு வளைவு பகுதியில் சிதறிக்கிடக்கும் ஜல்லிக் கற்கள், மணல் ஆகியவற்றை அகற்ற நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று வலியுறுத்துகின்றனர்.

Tags : Valajabad-Orkadam road ,WALAJABAD ,Orkadam road ,Valajabad ,
× RELATED திண்டுக்கல் அருகே பல்வேறு...