புதுச்சேரி, ஏப். 23: பள்ளி மாணவியை கர்நாடகா மாநிலத்திற்கு கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த விழுப்புரம் தொழிலாளி மற்றும் வீடு கொடுத்து உதவிய நண்பருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து புதுச்சேரி போக்சோ விரைவு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் (25). புதுச்சேரி மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள பேக்கரியில் வேலை செய்து வந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த 10ம் வகுப்பு படிக்கும் மாணவி, பேக்கரி அருகே டியூஷன் படிக்க வந்து சென்றுள்ளார். அப்போது அந்த பள்ளி சிறுமியை காதல் என்ற போர்வையில் ராஜேஷ் ஆசைவார்த்தை கூறி, கர்நாடக மாநிலத்திற்கு கடத்தி சென்றுள்ளார்.
அங்கு ஒரு வீட்டில் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். கர்நாடகா மாநிலத்தில் தேயிலை தோட்டத்தில் பண்ணை தொழிலாளியாக வேலை செய்யும் ராஜேஷின் உறவினரும், நண்பருமான விழுப்புரம் மாம்பழப்பட்டு பகுதியை சேர்ந்த கதிர்வேலு (29) என்பவர், பாலியல் பலாத்காரம் செய்வதற்கு வீடு கொடுத்து உதவி செய்துள்ளார். இச்சம்பவம் 2019 செப்டம்பர் 16ம் தேதி நடந்தது. இது குறித்த புகாரின்பேரில் மேட்டுப்பாளையம் போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து ராஜேஷ், கதிர்வேலு ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
இவ்வழக்கு புதுச்சேரி போக்சோ விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை நிறைவடைந்ததை அடுத்து நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. வழக்கினை நீதிபதி சுமதி விசாரித்து, மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த ராஜேஷுக்கு போக்சோ (6) சட்டத்தின்படி 20 ஆண்டு சிறை தண்டனையும், கடத்திய குற்றத்திற்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து, தண்டனையை ஏகக்காலத்தில் அனுபவிக்கவும் தீர்ப்பு அளித்தார். மேலும், பாலியல் பலாத்காரத்திற்கு வீடு கொடுத்து உதவிய கதிர்வேலுவுக்கு போக்சோ (6) சட்டத்தின்கீழ் 20 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்துள்ளார்.
The post மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம் விழுப்புரம் தொழிலாளி, உதவிய நண்பருக்கு 20 ஆண்டு சிறை புதுச்சேரி போக்சோ விரைவு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு appeared first on Dinakaran.
