புதுச்சேரி, ஏப். 23: நூதன முறையில் இளம்பெண்ணிடம் 5 பவுன் நகை மோசடி செய்த வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர். கடலூர் மாவட்டம் சந்திக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் அன்பரசன். இவரது மனைவி எஸ்தர் (27). இவர் முதலியார்பேட்டையில் உள்ள தனியார் ரத்த பரிசோதனை மையத்தில் வேலை செய்து வருகிறார். இவரும் கடலூரை சேர்ந்த விபின் (25) என்பவரும் நண்பர்களாக பழகி வந்தனர். இந்நிலையில் விபின் நேற்று முன்தினம் எஸ்தரை தொடர்புகொண்டு தனது தாயாரின் நகை அடகில் உள்ளது. அதனை மீட்க உங்களது நகையை தந்து உதவுங்கள் என்று கேட்டுள்ளார். இதையடுத்து எஸ்தர் வீட்டில் இருந்த 5 பவுன் நகைகளை ஒரு பையில் எடுத்துக் ெகாண்டு பைக்கில் முருங்கபாக்கம் வந்துள்ளார். அங்கு தயாராக இருந்த விபின் அவரை தனது இருசக்கர வாகனத்தில் வருமாறு அழைத்துள்ளார். எனவே அவரும் தனது பைக்கை ஓரமாக நிறுத்தி விட்டு, நகைகள் இருந்த பையை எடுத்துக்கொண்டு அவருடன் சென்றுள்ளார்.
அப்போது மறைமலை அடிகள் சாலையில் வெங்கடசுப்பா ரெட்டியார் சிலை அருகே சென்றபோது விபின், எஸ்தரிடம் நீங்கள் இங்கேயே இருங்கள், நகை அடகு வைத்து விட்டு வருகிறேன். என்று கூறி விட்டு சென்றுள்ளார். வெகு நேரமாகியும் விபின் வராததால், சந்தேகமடைந்த எஸ்தர் அவரை செல்போன் மூலம் தொடர்புகொள்ள முயற்சி செய்தபோது விபினின் செல்போன் சுவிட் ஆப் என வந்தது. இதனால் எஸ்தர் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார். இதையடுத்து எஸ்தர் முதலியார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் ஜீரோ வழக்குபதிந்து, உருளையன்பேட்டை காவல் நிலையத்துக்கு மாற்றி உள்ளனர். இதையடுத்து உருளையன்பேட்டை போலீசார் வழக்குபதிந்து, விபினை வலைவீசி தேடி வருகின்றனர்.
The post நூதன முறையில் கைவரிசை இளம்பெண்ணிடம் 5 பவுன் நகை மோசடி appeared first on Dinakaran.
