×

தூத்துக்குடி மாவட்டத்தில் புதிதாக 600 மெகாவாட் அனல் மின் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்: எரிசக்தித் துறை அறிவிப்பு

சென்னை: தூத்துக்குடி மாவட்டத்தில் புதிதாக 600 மெகாவாட் அனல் மின் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என எரிசக்தித் துறை அறிவித்துள்ளது.

எரிசக்தித் துறை அறிவிப்புகள்:

  • புதிய விவசாய மின் இணைப்புகள் வழங்குதல். தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தால் இந்த ஆண்டில் 50,000 புதிய விவசாய மின் இணைப்புகள் வழங்கப்படும்.
  •  காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்புதல். TNEB Ltd.- ல் காலியாக உள்ள பணியிடங்கள் தேவைக்கேற்ப நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்.
  •  புதிய அனல் மின் நிலையம் நிறுவுதல். தூத்துக்குடி மாவட்டத்தில் புதிதாக 600 மெகாவாட் அனல் மின் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
  • தேரோடும் வீதிகளில் மேல்நிலை மின் பாதைகளை புதைவடங்களாக மாற்றுதல். ரூ.57 கோடி மதிப்பீட்டில், மன்னார்குடி, மலைக்கோட்டை, சிதம்பரம், திருஉத்திரக்கோசமங்கை, திருவிடந்தை, சமயபுரம், மேல்மலையனூர், திருவிடைமருதூர், காளையார் கோவில் ஆகிய ஊர்களில் அமைந்துள்ள தேரோடும் வீதிகள் மற்றும் திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் செல்லும் மேல்நிலை மின் பாதைகள் புதைவடங்களாக மாற்றி அமைக்கப்படும்.
  •  கடலோர நகரங்களில் மேல்நிலை மின் பாதைகளை புதைவடங்களாக மாற்றுதல். ரூ.490 கோடி மதிப்பீட்டில் இயற்கை பேரிடர்களால் இன்னலுக்கு உட்படும் கடலோர நகரங்களான கடலூர் மற்றும் நாகப்பட்டினத்தில் மேல்நிலை மின் பாதைகள் புதைவடங்களாக மாற்றி அமைக்கப்படும்.
  •  TNEB Ltd.-ல் இயங்கும் மருந்தகங்கள் மேம்படுத்துதல். TNEB Ltd. கட்டுப்பாட்டில் செயல்படும் பல்வேறு மின் கழகங்களில் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர்கள் பயன்பெறும் வகையில் தற்பொழுது இயக்கத்தில் உள்ள மருந்தகங்கள் மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
  •  தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தில் புதிய துணை மின் நிலையங்கள் நிறுவதல். ரூ.215 கோடி மதிப்பீட்டில் 18 புதிய 33/11 கி.வோ துணை மின் நிலையங்கள் நிறுவ நடவடிக்கை எடுக்கப்படும்.
  •  தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தில் உள்ள துணை மின் நிலையங்களில் மின்மாற்றிகளின் திறன் மேம்படுத்துதல். ரூ. 55 கோடி மதிப்பீட்டில், 26 துணை மின் நிலையங்களில் (33/11 கி.வோ) தற்போதுள்ள மின்மாற்றிகளின் திறன் மேம்படுத்தப்படும்.
  •  தமிழ்நாடு மின் உற்பத்திக் கழகத்தின் மின் உற்பத்தி நிலையங்களில் மூலதனப் பணிகள் மேற்கொள்ளுதல். ரூ.500 கோடி மதிப்பீட்டில் தூத்துக்குடி அனல் மின் நிலையம், மேட்டூர் அனல் மின் நிலையம்-I, மேட்டூர் அனல் மின் நிலையம்-II, வட சென்னை அனல் மின் நிலையம்-I மற்றும் வட சென்னை அனல் மின் நிலையம்-II ஆகியவற்றில் உள்ள பல்வேறு உபகரணங்களில் மூலதனப் பணிகள் மேற்கொள்ளப்படும்.
  •  தமிழ்நாடு மின் உற்பத்திக் கழகத்தின் வழுதூர் எரிவாயு மின் நிலையம் – I-ல் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளுதல். ரூ. 111 கோடி மதிப்பீட்டில் வழுதூர் எரிவாயு மின் நிலையம் – I (95 மெகாவாட்) சுழலியின் வெப்ப எரிவாயு பாதை ஆய்வு மற்றும் உலர்ந்த நைட்ரஜன் ஆக்சைடு (DLN) கட்டுப்படுத்தும் அமைப்பின் மூலம் பணிகள் மேற்கொள்ளப்படும்.
  •  தமிழ்நாடு பசுமை எரிசக்திக் கழகத்தின் காடம்பாறை நீரேற்று புனல் மின் நிலையத்தின் எஞ்சிய ஆயுள் மதிப்பீட்டு ஆய்வுப் பணி மேற்கொள்ளுதல். காடம்பாறை (4×100 மெகாவாட்) நீரேற்று புனல் மின் நிலையத்தை புதுப்பித்து நவீனப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய, எஞ்சிய ஆயுள் மதிப்பீட்டு ஆய்வுப் பணி மேற்கொள்ளப்படும்.
  •  தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகத்தில் புதிய துணை மின் நிலையங்கள் அமைத்தல். ரூ.1,192 கோடி மதிப்பீட்டில், ஒரு புதிய 400 கி.வோ துணை மின் நிலையம் மற்றும் 11 புதிய 110 கி.வோ துணை மின் நிலையங்கள் நிறுவ நடவடிக்கை எடுக்கப்படும்.
  •  தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகத்தின் துணை மின் நிலையங்களில் மின்மாற்றிகளின் திறன் மேம்படுத்துதல். ரூ.94 கோடி மதிப்பீட்டில், 25 துணை மின் நிலையங்களில் (110 கி.வோ) தற்போதுள்ள மின்மாற்றிகளின் திறன் மேம்படுத்தப்படும்.
  •  சிறப்பு பாதுகாப்பு பயிற்சிகள் வழங்குதல். TNEB Ltd.-ல் பணிபுரியும் அனைத்து களப்பணியாளர்களுக்கும் பணியாளர்களின் பாதுகாப்பிற்காக, பயிற்சி மையங்கள் மூலம் பணியிடத்தில் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான சிறப்பு பயிற்சிகள் வழங்கப்படும்.
  •  தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தில் ஒரு சிறப்பு தரவு பகுப்பாய்வு பிரிவு உருவாக்குதல். திறன் மிகு மின் கட்டமைப்பு செயல்பாட்டிற்கான ஒருங்கிணைந்த மேலாண்மை தகவல் அமைப்பு (MIS) மேம்பாடு மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான தரவு பகுப்பாய்வுகளை மேற்கொள்ள தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் (TNPDCL), ஒரு சிறப்பு தரவுப் பகுப்பாய்வு பிரிவை உருவாக்கும்.

The post தூத்துக்குடி மாவட்டத்தில் புதிதாக 600 மெகாவாட் அனல் மின் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்: எரிசக்தித் துறை அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Thoothukudi district ,Energy Department ,Chennai ,Tamil Nadu Electricity Distribution Corporation ,Dinakaran ,
× RELATED கமல்ஹாசனின் பெயர், புகைப்படங்களை...