×

மாவட்டத்தில் சுய வேலைவாய்ப்பு உருவாக்க கலைஞர் கைவினைத் திட்டம்

*ரூ.3 லட்சம் வரை பிணையற்ற கடனுதவி பெறலாம்; தொழில் துவங்க மாவட்ட நிர்வாகம் அழைப்பு

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தில் கைவினைக் கலைகள் மற்றும் தொழில்களில் உள்ளோருக்கு சுய வேலைவாய்ப்பை உருவாக்கும் பொருட்டு கலைஞர் கைவினைத்திட்டம் மாவட்ட தொழில் மையம் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

மேலும் இத்திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சம் வரை பிணையற்ற கடனுதவி மற்றும் ரூ.50 ஆயிரம் வரை மானியம் பெறலாம். இத்திட்டத்தில் தொழிற்கடன் பெற்று தொழில் துவங்க மாவட்ட நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர், சேக்கிழார் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த அரசு விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த 19ம் தேதி குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில், கலைஞர் கைவினைத் திட்டத்தை தொடங்கி வைத்தார். விழாவில் 8951 பயனாளிகளுக்கு ரூ‌.34 கோடி மானியத்துடன் ரூ‌.170 கோடி வழங்கி விழா பேருரை ஆற்றினார்.

அதனை தொடர்ந்து திட்டம் தொடர்பான விளக்க நிகழ்ச்சி ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு தலைமை வகித்தார். மாவட்ட தொழில் மைய உதவி இயக்குநர் திலகவதி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சதானந் கலகி, துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் திட்ட பயனாளிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விழாவில் மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு பேசுகையில், நீலகிரி மாவட்டத்தில் கைவினைக் கலைகள் மற்றும் தொழில்களில் உள்ளோருக்கு சுய வேலைவாய்ப்பை உருவாக்கும் பொருட்டு கலைஞர் கைவினைத்திட்டம் மாவட்ட தொழில் மையம் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

மேலும் இத்திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சம் வரை பிணையற்ற கடனுதவி மற்றும் ரூ.50 ஆயிரம் வரை மானியம் பெறலாம். 5 சதவீதம் வரை வட்டி மானியம் வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் தொழில் முனைவோர்களுக்கு திறன் மேம்பாட்டிற்கான சிறப்பு பயிற்சிகள் வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க 35 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். எந்த வகுப்பினராகவும் இருக்கலாம் என்றார்.

மேலும், மாவட்ட தொழில் மைய உதவி இயக்குநர் திலகவதி திட்டத்தின் சிறப்பம்சங்கள், அரசு மானியம், திட்டத்தில் பயனடைய தேவையான விண்ணப்பதாரரின் தகுதிகள் மற்றும் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் பயிற்சிகள் குறித்து விளக்கம் அளித்தார்.

மேலும், இத்திட்டத்தின் கீழ் பழங்குடியினரின் இயற்கை சேகரிப்புகள், கட்டிட வேலைகள், மர வேலைப்பாடுகள், பாரம்பரிய முறையில் ஜவுளி அச்சிடுதல், தோல் கைவினைப் பொருட்கள், காலணிகள் தயாரித்தல், மீன் வலை தயாரித்தல், நகைசெய்தல், சிகையலங்காரம், அழகுக்கலை, துணி நெய்தல், துணிகளில் கலை வேலைப்பாடுகள், சுதை வேலைப்பாடுகள், பூட்டு தயாரித்தல், தையல் வேலை, கூடை முடைதல், கயிறு பாய் பின்னுதல், துடைப்பான் செய்தல், மட்பாண்டங்கள்,

சுடுமண் வேலைகள், பொம்மைகள் தயாரித்தல், படகுக் கட்டுமானம், துணி வெளுத்தல், துணி தேய்த்தல், சிற்ப வேலைப்பாடுகள், கற்சிலை வடித்தல், ஓவியம் வரைதல், வண்ணம் பூசுதல், கண்ணாடி வேலைப்பாடுகள், பாரம்பரிய இசைக்கருவிகள் தயாரித்தல், மலர் வேலைப்பாடுகள், உலோக வேலைப்பாடுகள், பாசிமணி வேலைப்பாடுகள், கைவினைப்பொருட்கள், மூங்கில், பிரம்பு, சணல், பனை வேலைப்பாடுகள் போன்ற 25 வகையான கைவினை தொழில்களுக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.

இத்திட்டத்தில் இதுவரை 629 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, 465 விண்ணப்பங்கள் வங்கிகளுக்கு பரிந்துரைக்கப்பட்டு 214 ஒப்பளிப்புகள் இதுவரை பெறப்பட்டுள்ளன. 110 நபர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க www.msmeonline.tn.gov.in/kkt இணையதள முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்கள் பெறவும், கூடுதல் வழிகாட்டுதலுக்கும் பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், 134,எல்க் ஹில் ரோடு, உதகமண்டலம் 643001 என்ற அலுவலத்தை அணுகலாம் மற்றும் 0423-2443947, 89255 33996, 89255 33997 தொடர்பு கொள்ளலாம். இத்திட்டத்தில் விண்ணப்பித்து பயன் பெற வேண்டும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

The post மாவட்டத்தில் சுய வேலைவாய்ப்பு உருவாக்க கலைஞர் கைவினைத் திட்டம் appeared first on Dinakaran.

Tags : Artist Craft Project District Career Centre ,Nilagiri district ,Dinakaran ,
× RELATED ஆருத்ரா தரிசனம் முன்னிட்டு கடலூர்...