ஊத்துக்கோட்டை, ஏப். 22: பெரியபாளையம் அருகே பனப்பாக்கம் பகுதியில் சாலையோரம் நிறுத்தப்படும் கனரக வாகனங்களால் விபத்து அதிகரித்துள்ளது. உடனே வாகனங்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பெரியபாளையம் அருகே பனப்பாக்கம் கிராமத்தில் பாமாயில் தயாரிக்கும் கம்பெனி, கார் உதிரி பாகங்கள் சேமிப்பு கிடங்கு, சோப்பு, பேஸ்ட் சேமிப்பு கிடங்கு உள்ளிட்ட பல்வேறு தனியார் நிறுவனங்கள் மற்றும் கிடங்குகள் உள்ளன. இப்பகுதியைச் சுற்றியுள்ள கிராமங்களில் ஆயிரக்கணக்கானோர் வசித்து வருகின்றனர். அவர்கள் இங்குள்ள நிறுவனங்கள் மற்றும் கிடங்குகளில் பணியாற்றி வருகின்றனர்.
இந்தநிலையில் இங்குள்ள நிறுவங்கள் மற்றும் கிடங்குகளுக்கு டெல்லி, குஜராத், கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, பீகார் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து லாரி மற்றும் கனரக வாகனங்கள் தினசரி வந்து செல்கின்றன. அப்படி வந்துபோகும் இந்த வாகனங்களை நிறுத்துவதற்கு சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மற்றும் கிடங்குகளில் இடவசதி இல்லை. இதனால் சென்னை – திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில், ஜெயபுரம், பனப்பாக்கம் சாலையோரத்தின் இருபுறமும் தங்கள் வாகனங்களை டிரைவர்கள் நிறுத்தி வைக்கிறார்கள்.
இதனால் கிராமப்புற பகுதிகளில் இருந்து பைக்குகளில் வருபவர்கள் மெயின் சாலைக்கு வரும்போது எதிர்பாராதவிதமாக விபத்துகளில் சிக்கி பாதிக்கப்படுகின்றனர். மேலும் இது சென்னை-திருப்பதி முக்கிய தேசிய நெடுஞ்சாலை என்பதால் விபத்துகள் அடிக்கடி ஏற்படுகிறது. இப்படி நிகழும் விபத்துக்களை தடுக்க, சாலையோரத்தில் நிறுத்தப்பட்டுள்ள லாரி மற்றும் கனரக வாகனங்களை அப்புறப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: சென்னை – திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் பனப்பாக்கம், ஜெயபுரம் பகுதியில் உள்ள கம்பெனிகளுக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து வரும் கனரக வாகனங்கள், சம்பந்தபட்ட கம்பெனிகளில் நிறுத்த இடமில்லாமல், சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்படுகின்றன. இதனால் நாளுக்குநாள் விபத்துகள் அதிக்ரித்த வண்ணம் உள்ளன. இதில் பெரியபாளையம் காவல்துறையினர் தனிக் கவனம் செலுத்தி சாலையோரத்தில் நிறுத்தப்பட்டுள்ள கனரக வாகனங்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.
The post பெரியபாளையம் அருகே தனியார் நிறுவனங்களுக்காக சாலையோரம் நிறுத்தப்படும் கனரக வாகனங்களால் விபத்து அதிகரிப்பு: உடனே அப்புறப்படுத்த வலியுறுத்தல் appeared first on Dinakaran.
