- ஐரோப்பிய ஒன்றிய அரசு
- முதல்வர்
- எம். யூ கே. ஸ்டாலின்
- மும்பை
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- முதல் அமைச்சர்
- சட்டமன்ற உறுப்பினர்
- கே. ஸ்டாலின்
- மகாராஷ்டிரா
மும்பை: தேசிய கல்விக் கொள்கையின்படி, மூன்றாவது மொழியைப் பயிற்றுவிப்பது கட்டாயமல்ல என்ற தெளிவான வழிகாட்டுதலை ஒன்றிய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் வழங்குமா என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். தேசிய கல்வி கொள்கையை படிப்படியாக அமல் செய்து வரும் மகாராஷ்டிரா அரசு சமீபத்தில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு 3வது மொழியாக இந்தியை கட்டாயம் ஆக்கியது. இதற்கு மாநிலம் முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. எம்.என்.எஸ்.கட்சி தலைவர் ராஜ் தாக்கரே கடும் எதிர்ப்பு தெரிவித்தார். நாங்கள் இந்துக்கள். இந்திக்கள் அல்ல என்று கூறினார்.
இந்தியை திணிக்க முயன்றால் போராட்டம் வெடிக்கும் என்றும் எச்சரித்தார். உத்தவ் சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரேயும் இந்தி திணிப்புக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதுபோல் காங்கிரஸ் கட்சியும் இந்தி திணிப்பை கடுமையாக எதிர்த்தது. இந்தி திணிப்பை கண்டித்து மாநிலம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன. அரசு உத்தரவு நகல் எரித்து எதிர்ப்பை பதிவு செய்தனர். இந்த நிலையில் மாநில மொழி ஆலோசனை குழுவும் இந்தி திணிப்புக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளது. மராத்தி, ஆங்கிலத்துடன் இந்தி சுமையையும் திணிப்பது குழந்தைகளின் கல்வியை பாதிக்கும் என்று முதல்வருக்கு எழுதிய கடிதத்தில் குழுவின் தலைவர் லட்சுமிகாந்த் தேஷ்முக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில் புனேயில் பேட்டி அளித்த பட்நவிஸ்ல மகாராஷ்டிராவில் மராத்தி தான் கட்டாயம், இந்தி கட்டாயம் இல்லை. தேசிய கல்வி கொள்கையின் படி 3 மொழிகள் போதிக்கப்பட வேண்டும். இதில் இரண்டு மொழிகள் இந்திய மொழிகளாக இருக்க வேண்டும். மராத்தி ஆங்கிலம் போதிக்கப்படுகிறது. மூன்றாவது மொழியாக இந்தி, தமிழ், குஜராத்தி, மலையாளம் தவிர வேறு மொழிகள் கற்பிக்க முடியாது. மாணவர்கள் விரும்பினால் அவர்கள் விரும்பும் மொழியை 3வது மொழியாக கற்றுத்தரலாம். ஆனால் அந்த மொழி கற்கும் 20 மாணவர்களாவது அந்த வகுப்பில் இருக்க வேண்டும். அப்போதுதான் ஒரு ஆசிரியரை நியமிக்க முடியும். இந்தியை கற்றுத்தர ஆசிரியர்கள் இருக்கிறார்கள். ஆனால் இதர மொழிகளை கற்றுத்தர ஆசிரியர்கள் இல்லை, என தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது: மகாராஷ்டிரத்தில் இந்தியைக் கட்டாய மூன்றாவது மொழியாகத் திணித்ததற்காகக் கடுமையான எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், மகாராஷ்டிர மாநிலத்தில் மராத்தி மட்டுமே கட்டாய மொழி எனக் கூறுகிறார் அந்த மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ். இந்தி பேசாத மாநிலங்களில் இந்தியைத் திணிப்பதற்கு எதிராக, மிகப் பரவலாக மக்கள் தமது கண்டனங்களைத் தெரிவித்ததன் விளைவாக உருவான நடுக்கத்தின் வெளிப்பாடுதான் அவரது இந்தப் பேட்டி.
இந்த சூழ்நிலையில், தேசிய கல்விக் கொள்கையின்கீழ், மகாராஷ்டிராவில் மராத்தியை தவிர வேறு எந்த மூன்றாவது மொழியும் கட்டாயமல்ல என்ற தேவேந்திர பட்நவிசின் நிலைப்பாட்டை ஒன்றிய அரசு அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிறதா? அவ்வாறெனில், தேசிய கல்விக் கொள்கையின்படி, மூன்றாவது மொழியைப் பயிற்றுவிப்பது கட்டாயமல்ல என்ற தெளிவான வழிகாட்டுதலை ஒன்றிய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் வழங்குமா? மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொள்ளவில்லை என்ற காரணத்திற்காக அநியாயமாக தமிழ்நாட்டுக்குத் தராமல் நிறுத்தி வைத்திருக்கும் 2,152 கோடி ரூபாய் நிதியை ஒன்றிய அரசு விடுவிக்குமா? என்பதை பிரதமரும் ஒன்றிய கல்வி அமைச்சரும் தெளிவுபடுத்த வேண்டும். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்துள்ளார்.
The post மக்கள் எதிர்ப்பால் பின்வாங்கிய பட்நவிஸ் மூன்றாவது மொழி கட்டாயமல்ல என்ற வழிகாட்டுதலை ஒன்றிய அரசு வெளியிடுமா? முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி appeared first on Dinakaran.
