×

தொடர் விடுமுறை எதிரொலி; ஊட்டி, கொடைக்கானல், ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்

சென்னை: தொடர் விடுமுறையால் ஊட்டி, கொடைக்கானல், ஏற்காட்டில் உள்ள சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகள் இன்று ஏராளமானோர் குவிந்தனர். ஊட்டியில் தற்போது நடப்பு ஆண்டிற்கான கோடை சீசன் களை கட்ட துவங்கியுள்ளதாலும் புனித வெள்ளி, சனி, ஈஸ்டர் பண்டிகையான ஞாயிறு என தொடர் விடுமுறை வந்ததாலும் இன்று சுற்றுலா பயணிகள் ஊட்டியில் குவிந்தனர். இதனால் ஊட்டியில் தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா, பைக்காரா, பைன் பாரஸ்ட் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.

ஊட்டி நகரில் உள்ள சுற்றுலா தலங்கள் மட்டுமின்றி நகருக்கு வெளியில் உள்ள சுற்றுலா தலங்களிலும் கூட்டம் கணிசமான அளவிற்கு காணப்படுகிறது. ஊட்டியில் அவ்வப்போது லேசான சாரல் மழை பெய்வதால் குளு குளு ரம்மியமான காலநிலை நிலவுகிறது. இதனை அனுபவித்தபடியே சுற்றுலா தலங்களை பார்த்து ரசிகின்றனர். குறிப்பாக ஊட்டி படகு இல்லத்தில் இருந்து ஏரியில் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். சுற்றுலா பயணிகள் ஊட்டி-மேட்டுப்பாளையம், ஊட்டி-குன்னூர் இடையே மலை ரயிலில் பயணித்து குதூகலித்து வருகின்றனர். இதற்கிடையே பொள்ளாச்சி ஆழியார் அணையையும் ஏராளமானோர் பார்வையிட்டு வருகின்றனர்.

கொடைக்கானல்
திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள பிரபல சுற்றுலா தலமான கொடைக்கானல் மலைகளின் இளவரசி என அழைக்கப்படுகிறது. மேற்கு தொடர்ச்சி மலையின் இதமான அரவணைப்பு, கண்களுக்கு எட்டாமல் விரிந்து கிடக்கும் இயற்கை அழகு, துள்ளி விழும் அருவிகள், படகு சவாரி, சைக்கிள், குதிரை சவாரிகள், குடும்பத்துடன் சுற்றிப்பார்க்க ஏராளமான இடங்கள் உள்ளதால் கொடைக்கானல் பலரின் பேவரிட் சுற்றுலா தலமாக உள்ளது. கோடை சீசன் தொடங்கியதிலிருந்து கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து வந்தது.

இந்த நிலையில் தற்போது பள்ளி தேர்வுகள் முடிவடைந்து விடுமுறை தொடங்கி விட்டதால் குளுகுளு கொடைக்கானல் நோக்கி சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் படையெடுத்து வருகின்றனர். தங்கும் விடுதிகள் அனைத்தும் நிரம்பி வழிகின்றன. இந்த நிலையில் இன்று ஈஸ்டர் பண்டிகை மற்றும் விடுமுறை தினமாக அமைந்ததால் சுற்றுலா பயணிகள் வருகை வழக்கத்தை காட்டிலும் அதிக அளவில் இருந்தது. மலைச்சாலையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. நட்சத்திர ஏரி, குணா குகை, தூண் பாறை, மோயர் பாயிண்ட், பைன் காடுகள், கோக்கர்ஸ் வாக் என அனைத்து முக்கிய இடங்களிலும் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது.

நட்சத்திர ஏரியில் ஏராளமானோர் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். ஏற்காடு வார விடுமுறை தினமான இன்று (ஞாயிறு) சேலம் மாவட்டம் ஏற்காட்டுக்கு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் ஏரியில் படகு சவாரி செய்து உற்சாகம் அடைந்தனர். அண்ணா பூங்கா, தாவரவியல் பூங்கா, கிளியூர் நீர்வீழ்ச்சி, மான் பூங்கா உள்ளிட்ட இடங்களுக்கு சென்று இயற்கை காட்சிகளை பார்த்து ரசித்தனர். லேடீஸ் சீட், ஜென்ட்ஸ் சீட் பகுதியை கண்டு ரசித்து செல்போனில் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். பயணிகள் வருகை அதிகரித்துள்ளதால், சாலையோர கடைகளில் வியாபாரம் களைகட்டியது.

சுற்றுலா பயணிகள் அதிகளவு வருகையால், ரவுண்டானா பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதேபோல், இடைப்பாடி அருகேயுள்ள பூலாம்பட்டியிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. பல்வேறு பகுதிகளில் இருந்து குடும்பத்தினருடன் வந்த மக்கள், அங்குள்ள கடைகளில் மீன்களை சுவைத்து சாப்பிட்டனர். பின்னர், விசை படகில் சவாரி செய்து மகிழ்ந்தனர். மேட்டூர் அணை பூங்கா, சேலம் குரும்பப்பட்டி உயிரியல் பூங்கா உள்ளிட்ட இடங்களிலும் இன்று சுற்றுலாப்பயணிகள் வருகை அதிகமாக இருந்தது.

The post தொடர் விடுமுறை எதிரொலி; ஊட்டி, கொடைக்கானல், ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள் appeared first on Dinakaran.

Tags : Ooty, Kodaikanal ,Yartat ,CHENNAI ,KODI ,KODAIKANAL ,YURAT ,Holy ,Ooty, ,
× RELATED வாக்குச்சாவடி வாரியாக வரைவு...