×

பண்ணாரி அம்மன் கோயில் குண்டம் திருவிழா: பூச்சாட்டுதலுடன் இன்று துவக்கம்

சத்தியமங்கலம்: பண்ணாரி அம்மன் கோயில் குண்டம் திருவிழா பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே அடர்ந்த வனப்பகுதியில் பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் நடைபெறும் குண்டம் திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு திருவிழா இன்று அதிகாலை (17ம் தேதி) பூச்சாட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

முன்னதாக கோயில் துணை ஆணையர் நந்தகுமார் தலைமையில், பரம்பரை அறங்காவலர் புருஷோத்தமன் முன்னிலையில், மேள தாளங்கள் முழங்க கோயிலில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஊர்வலமாக புறப்பட்டு வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள மாதேஸ்வரன் கோயிலுக்கு சென்று அங்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து பண்ணாரி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பூச்சாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு கோயில் முன்பு மேளதாள இசைக்கு ஏற்ப பக்திப் பரவசத்துடன் நடனமாடினர். கோயிலுக்கு வருகை தந்த பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில், அன்னதானம் வழங்கப்பட்டது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பண்ணாரி அம்மனை சாமி தரிசனம் செய்தனர். இதைத் தொடர்ந்து அம்மன் திருவீதி உலா நாளை முதல் சுற்று வட்டார கிராமங்களில் நடக்க உள்ளது. முக்கிய நிகழ்ச்சியான குண்டம் திருவிழா மார்ச் 31ம் தேதி நடைபெற உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

Tags : Bannari Amman Temple Kundam Festival ,Sathyamangalam ,Bannari Mariamman Temple ,Erode district ,Hindu Religious and Charitable Endowments Department ,Panguni… ,
× RELATED சி.வி.சண்முகம் பேச்சு வெட்கக் கேடானது – குஷ்பு