×

அரசியல் கட்சி தலைவர்கள் ஈஸ்டர் திருநாள் வாழ்த்து


சென்னை: ஈஸ்டர் திருநாளில் ஒற்றுமை, சகோதரத்துவம், நல்லிணக்கம் வளர வேண்டும் என தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை: கிறிஸ்தவ சிறுபான்மை சமுதாயத்தினர் ஒன்றிய பா.ஜ. அரசால் பாரபட்சத்தோடு நடத்தப்பட்டு பல்வேறு கொடுமைகளுக்கும், அச்சுறுத்தலுக்கும் ஆளாகி வருகிறார்கள். அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள உரிமைகள் இவர்களுக்கு மறுக்கப்படுகிறது. இனி வருகிற காலங்களில் அவர்களுக்கு பாதுகாப்பு அரணாக காங்கிரஸ் கட்சி தொடர்ந்து செயல்படும்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ: கொடுந்துயரில் தவிப்பவர்களுக்கும், மரண இருளில் கலங்குகின்றவர்களுக்கும், அநீதியின் பாரத்தால் நசுக்குண்டவர்களுக்கும், விடியலும் நீதியும் ஒருநாள் உதிக்கவே செய்யும் என்ற நம்பிக்கையை மக்கள் மனங்களில் ஈஸ்டர் வழங்குகிறது.

இயேசு உயிர்த்தெழுந்தார், துக்கத்தில் இருந்து உலகம் மீண்டது. அதுபோலவே, ஈழத்திலும் தமிழர்களுக்கு நீதி கிடைக்கவும், சுதந்திர தமிழ் ஈழ தேசத்தை மலர்விக்கவும், இந்த ஈஸ்டர் திருநாளில், தமிழ்க்குலம் உறுதி எடுக்கட்டும்.

பாமக நிறுவனர் ராமதாஸ்: ஈஸ்டர் திருநாளின் நோக்கத்தைப் போலவே தமிழ்நாட்டு மக்களிடையே ஒற்றுமை, சகோதரத்துவம், நல்லிணக்கம் ஆகியவை வளர வேண்டும்; வளர்ச்சி, அமைதி, மகிழ்ச்சி ஆகியவை பெருக வேண்டும்.

பாமக செயல் தலைவர் அன்புமணி: ஈஸ்டர் திருநாள் தெரிவிக்கும் செய்தியை பின்பற்றும் வகையில் நாம் அனைவரிடத்திலும் அன்பு காட்ட வேண்டும்; தவறு செய்தவர்களை மன்னிக்க வேண்டும். அத்துடன், உலகம் ஒரு குடும்பமாக வாழ்வதற்கு தேவையான அன்பு, கருணை, சகிப்புத்தன்மை, சகோதரத்துவம் ஆகியவை பெருகவும், அமைதி, வளம், மகிழ்ச்சி ஆகியவை தழைக்க பாடுபடுவதற்கு அனைவரும் உறுதி ஏற்றுக்கொள்வோம்.

இயேசு அழைக்கிறார் அறக்கட்டளை தலைவர் பால் தினகரன்: ஈஸ்டர் பண்டிகையின்போது உங்கள் வாழ்வில் நம்பிக்கையும், உயிர்த்தெழுதலும் உண்டாகட்டும். ஈஸ்டர் என்று அழைக்கப்படும் உயிர்த்தெழுதலின் நாளானது, இயேசு கிறிஸ்து, மரணத்தின் அதிகாரத்தை ஜெயித்து, கல்லறையிலிருந்து வெற்றியுடன் எழுந்ததை நினைவுகூரும் தினமாகும். வாழ்வில் நம்பிக்கையற்ற சூழ்நிலைகளுக்குள் எவ்வளவு ஆழத்தில் நீங்கள் சிக்கியிருந்தாலும், உங்கள் துக்கத்தை சந்தோஷமாக மாற்றுவார்.

The post அரசியல் கட்சி தலைவர்கள் ஈஸ்டர் திருநாள் வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : Easter ,Chennai ,Tamil Nadu Congress ,Selvapperundhagai ,BJP government ,
× RELATED 10 நாட்களுக்கு ஒருமுறை கொளத்தூருக்கு...