சென்னை: அதிமுக நிலைபாடுகள், செயல்பாடுகள் குறித்து கட்சி தலைமை அனுமதி பெறாமல் டிவி, பத்திரிகைகளில் பேட்டி கொடுக்க வேண்டாம் என்று எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். கடந்த 12ம் தேதி ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வந்தார். அவரை எடப்பாடி பழனிசாமி கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் சந்தித்தார். பின்னர், அமித்ஷா பேட்டி அளித்தபோது, 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் அதிமுக – பாஜ கூட்டணி அமைத்து போட்டியிடும், தமிழகத்தில் அதிமுக – பாஜ கூட்டணி ஆட்சி அமையும் என்று கூறினார்.
அப்போது உடன் இருந்த எடப்பாடி எந்த பதிலும் தெரிவிக்கவில்லை. 3 நாட்கள் கழித்து எடப்பாடி கூட்டணி குறித்து வாய் திறந்தார். அப்போது, தமிழகத்தில் அதிமுக – பாஜ கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கும். அதேநேரம் அதிமுக ஆட்சியில் பாஜவுக்கு இடம் கிடையாது என்றார். இதே கருத்தை அதிமுக முன்னணி தலைவர்கள், பேச்சாளர்கள் பல்வேறு மேடைகளில், பேட்டிகளில் பேசி வருகிறார்கள். இதனால் அதிமுக – பாஜ கூட்டணியில் சலசலப்பு ஏற்படும் நிலை உள்ளது.
இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஒப்புதலுடன், தலைமை கழகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: அதிமுக நிர்வாகிகளுக்கும், கழகத்தின் மீது பற்று கொண்டுள்ளவர்களுக்கும் அன்பு வேண்டுகோள். அதிமுக நிறுவன தலைவர் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் காலந்தொட்டும்; நம் இருபெரும் தலைவர்களின் நல்லாசியோடு தொடர்ந்தும், அதிமுக ஒரு கட்டுக்கோப்பான இயக்கமாக செயல்பட்டு வருகிறது. கழகத்தின் முக்கிய முடிவுகள் மற்றும் நிலைப்பாடுகள் குறித்தான தகவல்களை, கட்சி தலைமை உரிய நேரத்தில், உரிய முறையில் அவ்வப்போது தெரிவிக்கும்.
ஆகவே, அதிமுக தலைமை கழக நிர்வாகிகள் மற்றும் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் அதிமுக நிர்வாகிகளும், கழகத்தின் மீது பற்று கொண்டுள்ளவர்களும், கழகத்தின் நிலைப்பாடுகள் மற்றும் செயல்பாடுகள் குறித்த எவ்வித கருத்துகளையும், கட்சி தலைமையின் அனுமதி பெறாமல், தொலைக்காட்சிகள், சமூக ஊடகங்கள், பத்திரிகைகள் மற்றும் இன்னபிற தகவல் தொடர்பு ஊடகங்களுக்கு பேட்டி கொடுக்க வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post அதிமுக நிலைப்பாடு, செயல்பாடுகள் குறித்து கட்சி தலைமை அனுமதி பெறாமல் டிவி, பத்திரிகைகளில் பேட்டி கொடுக்க கூடாது: எடப்பாடி உத்தரவு appeared first on Dinakaran.
