×

சூரிய சக்தியில் இயங்கும் மின்மோட்டார் மூலம் வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் பணி தீவிரம்: கூட்டமாக வந்து தாகம் தணித்து செல்லும் யானைகள்

தர்மபுரி: தர்மபுரி மாவட்ட வனப்பகுதிகளில், சூரிய சக்தியில் இயங்கும் மின்மோட்டார் மூலம், தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் பணிகள் தீவிரமாக நடக்கிறது. இந்த தொட்டிகளில் யானைகள் கூட்டம், கூட்டமாக வந்து தாகம் தணித்து செல்லுகின்றன.  தர்மபுரி மாவட்டத்தில், பாலக்கோடு, பென்னாகரம், ஒகேனக்கல், தர்மபுரி, அரூர், மொரப்பூர், தீர்த்தமலை, கோட்டப்பட்டி ஆகிய 8 வனச்சரகங்கள் உள்ளன. இங்குள்ள காடுகளில் யானை, சிறுத்தை, மான், நரி, செந்நாய், காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. கடந்த ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, 144 யானைகள் உள்ளன.

தற்போது யானைகள் எண்ணிக்கை மேலும் அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது. கோடை காலம் என்பதால் கர்நாடகாவில் இருந்து, தமிழகத்திற்குள் யானைகள் இடம்பெயர்ந்து வந்துள்ளன. இந்த யானைகள், தர்மபுரி மாவட்ட வனப்பகுதியில் சுற்றித்திரிகின்றன. இதனால் வனத்தை ஒட்டிய கிராமங்களுக்குள் யானைகள் வரும் சம்பவம் அடிக்கடி நடக்கிறது. குறிப்பாக பஞ்சப்பள்ளி, ஈச்சம்பள்ளம், சொக்கன்கொட்டாய், ஒகேனக்கல் சாலை பகுதிகளில் யானைகள் அடிக்கடி வெளியே வருகின்றன.

கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு, வழிதவறி வந்த யானைக்கூட்டத்தில், மின்வேலி மற்றும் மின்கம்பிகளில் சிக்கி 4 யானைகள் பலியாகின. அதே போல், ஒகேனக்கல் அருகே விஷக்காய் சாப்பிட்டும், சேற்றில் சிக்கியும் 2 யானைகள் இறந்தன. ஒகேனக்கல்லில், தாய் யானை விட்டு சென்ற ஒரு குட்டி யானை, முதுமலையில் விடப்பட்ட நிலையில் இறந்தது. இதனிடையே, யானைகள் வனத்தை விட்டு வெளியே வராமல் தடுக்க, காட்டில் அமைக்கப்பட்டிருந்த கால்நடை பட்டிகள் அகற்றப்பட்டன.

இதனால் தற்போது யானைகள் காட்டை விட்டு வெளியே வருவது பெருமளவு குறைந்துள்ளது. அதே சமயம், கிராமத்திற்குள் யானைகள் வராமல் இருக்க, தர்மபுரி மாவட்ட வனத்துறையும், மாவட்ட நிர்வாகமும் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. தற்போது கோடைகாலம் என்பதால், பாலக்கோடு, ஒகேனக்கல், பென்னாகரம் வனப்பகுதிகளில் யானைகள் அதிகம் வரும் 15க்கும் மேற்பட்ட இடங்களில், தண்ணீர் தொட்டிகளில் தண்ணீர் நிரப்பப்படுகிறது. சூரிய ஒளியில் இயங்கும் மின் மோட்டார் மூலம், நிலத்தடியில் நீர் எடுத்து தொட்டியில் நிரப்பப்படுகிறது.

இதனால் யானைகள் கூட்டம், கூட்டமாக வந்து தண்ணீர் குடித்து விட்டு செல்கின்றன. இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது: கோடை காலங்களில் உணவிற்காகவும், குடிநீர் தேவைக்காகவும், வனப்பகுதியில் இருந்து யானைகள் வெளியேறுவதை தடுக்கும் விதமாக, வனப்பகுதிக்குள் சூரிய மின்சக்தியால் இயங்கும் மின்மோட்டார் வசதி கொண்ட ஆழ்துளை கிணறுகள் மூலம், குடிநீர் தொட்டிகள் ரூ.26 லட்சத்தில் அமைக்கப்பட்டு வருகிறது. மேலும், வனப்பகுதிக்குள் வனவிலங்குகளுக்கு கசிவுநீர் குட்டை, தடுப்பணைகள், நீர்துளைகள் புதியதாக அமைக்கப்பட்டு வருகின்றன.

ஏற்கனவே உள்ள குட்டை, தடுப்பணைகள் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் மூலம், வனவிலங்குகளின் குடிநீர் தேவை தீர்க்கப்பட்டு வருகிறது. பாலக்கோடு வனச்சரகத்தில் கோடுப்பட்டி, குழிப்பட்டி, சொக்கன்கொட்டாய், அனுமப்பட்டி, மொரப்பூர் காப்பு காட்டிலும், ஒகேனக்கல் வனச்சரகத்தில் சின்னாறு கால்வாய், கோயில்பள்ளம், வழுக்கள் கோடு, ராசிகுட்டை மற்றும் பென்னாகரம் வனச்சரத்தில் என 15க்கும் இடங்களிலும், சூரிய சக்தியின் மூலம் இயங்கும் மின்மோட்டார்கள் கொண்டு தொட்டிகளில் தண்ணீர் நிரப்பப்படுகிறது. இதற்காக வன ஊழியர்கள் அந்தந்த பகுதிகளில் முகாமிட்டுள்ளனர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

The post சூரிய சக்தியில் இயங்கும் மின்மோட்டார் மூலம் வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் பணி தீவிரம்: கூட்டமாக வந்து தாகம் தணித்து செல்லும் யானைகள் appeared first on Dinakaran.

Tags : Dharmapuri ,Dharmapuri district ,Palacode ,Pennagaram ,Okenakkal ,Dinakaran ,
× RELATED விசாரணைக்குச் சென்ற எஸ்ஐ கையில்...