×

நாகையில் அகில இந்திய விவசாயிகள் சங்க மாநாடு; தனி வேளாண் பட்ஜெட்டால் தலைநிமிர்ந்து வாழும் விவசாயிகள்: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பெருமிதம்


நாகப்பட்டினம்: விவசாயிகள் தலைநிமிர்ந்து வாழும் நிலையை முதல்வர் உருவாக்கி கொடுத்துள்ளார் என அகில இந்திய விவசாயிகள் சங்க 30வது தேசிய மாநாட்டில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசினார். அகில இந்திய விவசாயிகள் சங்க 30வது தேசிய மாநாடு நாகப்பட்டினத்தில் நேற்று தொடங்கியது. இந்த மாநாடு நாளை(17ம்தேதி) இரவு பொதுக்கூட்டத்துடன் நிறைவு பெறுகிறது. தியாகிகள் நினைவுச்சுடர் சங்கமத்துடன் முதல் நாள் நிகழ்ச்சி நேற்று தொடங்கியது. தொடர்ந்து முன்னாள் எம்எல்ஏ தாராசிங்சித்து மாநாடு கொடியை ஏற்றினார். முன்னாள் எம்எல்ஏ பழனிச்சாமி தியாகிகள் நினைவு சின்னத்தை திறந்து வைத்தார். நாகப்பட்டினம் எம்பி செல்வராஜ் வரவேற்றார். அகில இந்திய விவசாயிகள் சங்க தலைவர் ராஜன்கிஸ்லிசாகர் தலைமை வகித்தார். கேரள மாநில வேளாண்துறை அமைச்சர் பிரசாத் மாநாட்டை தொடங்கி வைத்தார்.

மாநாட்டில் கலந்து கொண்ட தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பேசியதாவது: கடந்த ஆட்சி காலத்தில் விவசாயிகள் தங்களது தேவைகளுக்காக போராடி வந்தனர். ஏன் இந்திய அளவில் எடுத்து கொண்டால் ஒன்றிய அரசின் விவசாயிகள் விரோத போக்கை கண்டித்து போராடியுள்ளனர். இன்னும் போராடி கொண்டு இருக்கின்றனர். கலைஞர் ஆட்சி காலத்தில் ஒரே கையெழுத்தில், உழுபவர்களுக்கு எல்லாம் நிலத்தை சொந்தமாக்கி கொடுத்தார். இதற்கு சாட்சி இங்குள்ள கம்யூனிஸ்ட் தோழர்களுக்கு தெரியும். நமது முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றவுடன் வேளாண்மை துறைக்கு தனி பட்ஜெட் அறிவித்தார். இதனால் விவசாயிகள் வாழ்வில் இன்று வசந்தகாலம் வீசுகிறது. பயிர் காப்பீடுதிட்டம், நெல் கொள்முதல் ஊக்க தொகை கொடுத்துள்ளார்.

வேளாண் இயந்திரமயமாக்கல் திட்டம் என பல திட்டங்களை அறிவித்து விவசாயிகளை அடுத்த இடத்திற்கு கொண்டு சென்றுள்ளார். ரூ.160 கோடி மதிப்பில் குறுவை தொகுப்பு வழங்கியுள்ளார். விவசாயிகள் தலைநிமிர்ந்து வாழும் நிலையை முதல்வர் உருவாக்கி கொடுத்துள்ளார். விவசாய தொழிலாளர்கள் இறந்தால் நிவாரணம் உயர்த்தி வழங்கியுள்ளார். தமிழக முதல்வரின் திட்டங்கள் பிற மாநில முதல்வருக்கு எடுத்துகாட்டாக அமைந்துள்ளது. கடந்த ஆட்சி காலத்தில் விவசாயிகள் தற்கொலை நடந்துள்ளது. ஆனால் இது போன்ற நிகழ்வுகள் எதுவும் நடைபெறாமல் முதல்வர் விவசாயிகளை கண்ணும் கருத்துமாக பார்த்து கொள்கிறார். வேளாண் பட்ஜெட் வெளியிடுவதற்கு முன்பு விவசாயிகளை சந்தித்து அவர்களின் கோரிக்கையை ஏற்று அதற்கு ஏற்ப பட்ஜெட் வெளியிடப்படுகிறது. அதனால் தான் பிற மாநிலங்களில் விவசாயிகள் போராடும் போது தமிழகத்தில் மட்டும் விவசாயிகள் மகிழ்ச்சியுடன் இருக்கின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.

The post நாகையில் அகில இந்திய விவசாயிகள் சங்க மாநாடு; தனி வேளாண் பட்ஜெட்டால் தலைநிமிர்ந்து வாழும் விவசாயிகள்: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பெருமிதம் appeared first on Dinakaran.

Tags : All India Farmers' Union Conference ,Nagapattinam ,Minister ,MRK Panneerselvam ,30th National Conference of the All India Farmers' Union ,Chief Minister ,Dinakaran ,
× RELATED சிபிஐ விசாரணைக்கு ஆஜராக டெல்லி புறப்பட்டார் தவெக தலைவர் விஜய்