- ஆதிமுக நிர்வாகக் குழு
- எடப்பாடி
- சென்னை
- பாஜக
- நிர்வாக குழு
- தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில்
- ஐத்முக நிர்வாகக் குழு
- எடப்பாடி பழனிசாமி
- தின மலர்

சென்னை: பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளநிலையில், அதிமுக செயற்குழு கூட்டம் வரும் மே 2ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் அதற்கான பணிகளை தொடங்கியுள்ளனர். பல கட்சிகள் வட்டம், பகுதி என கள அளவில் கட்டமைப்புகளை வலுப்படுத்தும் பணிகளை தொடங்கியுள்ளன. ஆனால் தமிழ்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக, நடிகர் விஜய்யுடன் கூட்டணி அமைப்பது குறித்து ரகசிய பேச்சு நடத்தி வந்தார். இந்த தகவல்கள் வெளியானதும், உள்துறை அமைச்சர் அமித்ஷா உஷார் ஆனார். அவர்கள் இருவரும் சேர்ந்தால், பாஜக வழக்கம்போல நோட்டாவுடன்தான் போட்டியிட வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்று கருதி, அதிமுக தலைவர்களை டெல்லிக்கு அழைத்து அவர்களின் பல முறைகேடுகள் குறித்த ஆவணங்களை காட்டி பேச ஆரம்பித்தார். முடிவில் கூட்டணிக்கு அதிமுக சம்மதித்தது.
அதைத் தொடர்ந்து சென்னையில் அமித்ஷா, கூட்டணியை அறிவித்தார். கடந்த 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் அதிமுக தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் போட்டியிட்டனர். பின்னர் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் பாமக, பாஜக தனித்து போட்டியிட்டனர். மேலும் தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை அதிமுக தலைவர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் பற்றி கூறிய கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியது. குறிப்பாக ஜெயலலிதாவை ஊழல்வாதி என அவர் தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையாக வெடித்தது. தமிழகத்திலேயே மோசமான ஆட்சி என்பது 1991-1996 வரை நடைபெற்ற ஆட்சிதான் என்றும் குற்றம்சாட்டினார்.
இதையடுத்து அதிமுக – பாஜக கூட்டணி உடைந்தது. கடந்த 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் தேமுதிக, புதிய தமிழகம், எஸ்டிபிஐ உள்ளிட்ட கட்சிகளும், பாஜக தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக, அமமுக, ஓ.பன்னீர்செல்வம் அணி மற்றும் பல சிறிய கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டனர். இந்நிலையில் கடந்த வாரம் சென்னை வந்த அமித்ஷா அதிமுக – பாஜக கூட்டணியை உறுதி செய்த நிகழ்வின் போது, நிருபர்கள் ஏற்கெனவே பாஜக கூட்டணியில் உள்ள ஓ.பன்னீர்செல்வம், டிடிவி. தினகரன் ஆகியோர் கூட்டணியில் உள்ளனரா என்று கேள்வி எழுப்பிய போது அமித்ஷா, ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, டிடிவி.தினகரன் ஆகியோரின் விவகாரம் என்பது அதிமுகவின் உட்கட்சி பிரச்சனை அதனை அவர்கள் தான் சரி செய்ய வேண்டும், அதில் நான் தலையிட முடியாது என கூறினார்.
அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல், அதற்காக பாஜகவுடன் கூட்டணி உறுதிசெய்யப்பட்ட நிலையில், பிரிந்திருக்கும் அதிமுக என தெளிவு இல்லாத நிலை தற்போது உள்ளது. இந்நிலையில் அடுத்த மாதம் 2ம் தேதி அதிமுகவின் செயற்குழு கூட்டம் நடைபெறும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். ஆனாலும் சசிகலா, டிடிவி தினகரன் இல்லாமல் சில அதிமுக தலைவர்களை கட்சியில் இணைப்பது குறித்து எடப்பாடி பழனிச்சாமி முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தநிலையில் அதிமுக செயற்குழு கூட்டப்பட்டுள்ளது.
இது குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்ட அறிக்கை: அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக செயற்குழு கூட்டம் வருகின்ற மே 2ம் தேதி வெள்ளிக் கிழமை மாலை 4.30 மணிக்கு, சென்னை, ராயப்பேட்டையில் உள்ள தலைமைக் கழக அலுவலகத்தில், அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் நடைபெறும். செயற்குழு உறுப்பினர்களான, தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள், பிற மாநில செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் (மகளிர்) அனைவருக்கும் தனித் தனியே அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்படும் உறுப்பினர்கள் அனைவரும் தங்களுக்குரிய அழைப்பிதழோடு தவறாமல் வருகை தந்து, கழக செயற்குழு கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
The post மே 2ம் தேதி அதிமுக செயற்குழு கூட்டம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு appeared first on Dinakaran.
