சென்னை: தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் அரசுப் பள்ளி மாணவர்கள் உயர்கல்வியில் சேர்வது 30 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. பள்ளிக் கல்வித்துறையின் தரவுகளின்படி, தமிழ்நாட்டில் உயர்க்கல்வி பயிலும் அரசுப்பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை 3 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 30 சதவிகிதம் அதிகரித்துள்ளது. 2023-24ம் கல்வியாண்டில் 12ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்களில் குறைந்தது 74 சதவிதம் பேர் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர்.
2021-22ம் ஆண்டில், இந்த எண்ணிக்கை வெறும் 45 சதவிதம் மட்டுமே. தமிழ்நாடு அரசின் புதுமைப் பெண் திட்டத்தை அறிமுகப்படுத்திய பிறகு, 2022-23ம் ஆண்டில் இது 69 சதவிதமாக உயர்ந்துள்ளது. 2022-23ம் ஆண்டில், அரசுப் பள்ளிகளில் இருந்து 12ம் வகுப்புத் தேர்வு எழுதிய 3,97,809 பேரில் 2,72,744 பேர் கல்லூரி சேர்க்கையை பெற்றனர். 2023-24ம் ஆண்டில், 3,34,723 பேரில் 2,47,744 பேர் கல்லூரிகளில் சேர்ந்தனர். இதில் ஐடிஐக்கள் மற்றும் பாலிடெக்னிக் நிறுவனங்களில் சேர்ந்த மாணவர்களும் அடங்குவர்.
இதுகுறித்து கல்வித்துறை அதிகாரி கூறியதாவது: 2023-24ம் ஆண்டில் தமிழ்நாடு முழுவதிலுமிருந்து மொத்தம் 7.60 லட்சம் மாணவ-மாணவிகள் 12ம் வகுப்புத் தேர்வுகளை எழுதினர், அவர்களில் கிட்டத்தட்ட 45 சதவீதம் பேர் அரசுப் பள்ளிகளைச் சேர்ந்தவர்கள். அரசுப் பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 91.02 சதவிகிதம் ஆகும். தோல்வியடைந்த மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகளையும் கல்வித்துறை ஏற்பாடு செய்து, அவர்கள் துணைத் தேர்வுகளை எழுதுவதை உறுதி செய்ய நடவடிக்கை எடுத்தது.
நான் முதல்வன் திட்டத்தின் ஒரு பகுதியாக, மே 2023 முதல் அரசுப் பள்ளிகளில் தொழில் வழிகாட்டு டிஜிட்டல் பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. ஒவ்வொரு பிரிவிலும் தலைமையாசிரியர், நியமிக்கப்பட்ட தொழில் வழி காட்டுதல் ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் உள்ளனர். இந்தப் பிரிவுகளின் செயல்திறனை மேம்படுத்துவதற்காக, பள்ளிக் கல்வித் துறை ஏப்ரல் 2வது வாரத்தில் இருந்து அனைத்து உறுப்பினர்களுக்கும் ஒரு பயிற்சித் திட்டத்தை நடத்தும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
The post தமிழ்நாட்டில் கடந்த 3 ஆண்டுகளில் உயர்கல்வியில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை 30 சதவீதம் அதிகரிப்பு appeared first on Dinakaran.
