×

தஞ்சாவூர் ரயில் நிலைய முகப்பில் பெரிய கோயிலுக்கு பதிலாக வடநாட்டு மந்திர் கோயில்: ஒன்றிய அரசுக்கு கண்டனம்

தஞ்சாவூர்: நாட்டில் உள்ள பல்வேறு ரயில் நிலையங்களை நவீன வசதிகளுடன் ஒன்றிய அரசு புதுப்பித்து வருகிறது. அவ்வாறு புதுப்பிக்கும்போது அந்த ஊரில் சிறப்பை ரயில் நிலைய முகப்பில் அமைத்து வருகின்றனர். அதன்படி தஞ்சாவூர் ரயில் நிலையம் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் நிலைய நுழைவாயில் முகப்பில் இருந்த உலகப் புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரிய கோயில் இருந்த இடத்தில் தற்போது வடநாட்டு மந்திர் கோயில் இடம் பெற்றுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு ஒன்றிய அரசுக்கு உலகத் தமிழர் பேரமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து உலகத் தமிழர் பேரமைப்பின் துணைத் தலைவர் அய்யனாபுரம் முருகேசன் கூறியதாவது: ஒன்றிய அரசு தொடர்ந்து தமிழ் மொழி, பண்பாட்டு கலாச்சாரத்திற்கு எதிரான நடவடிக்கைகளை அனைத்து வழிகளிலும் திணித்து வருகிறது. தமிழ் மொழிக்கு எதிராக மனுதர்ம சனாதன கொள்கைகளை அமல்படுத்த முயற்சி செய்கிறது. திட்டமிட்டு பெரிய கோயில் இருந்த இடத்தில் வடநாட்டு மந்திர் கோவில் அமைத்திருப்பது தமிழர் பண்பாடு, கலாச்சாரத்தின் மீதான சனாதான பண்பாட்டு திணிப்பாகவே உள்ளது.

இது தமிழர்களின் மனங்களை வேதனைப் படுத்துவதாகவும் உள்ளது என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். பண்பாட்டுத் திணிப்புக்கு எதிரான வடநாட்டு மந்திர் அமைத்திருப்பதை தமிழ்நாட்டு மக்களின் சார்பில் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம். இதை கண்டித்து வரும் 16ம் தேதி அனைத்து ஜனநாயக அமைப்புகளையும் ஒன்று திரட்டி வலிமையான போராட்டம் நடைபெற உள்ளது. இந்த போராட்டத்தில் தமிழ் ஆர்வலர்கள், சமூக ஆர்வலர்கள், ஜனநாயக சக்திகள் பங்கேற்று சிறப்பிக்க உலகத்தமிழர் பேரவை சார்பில் அழைப்பு விடுக்கிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post தஞ்சாவூர் ரயில் நிலைய முகப்பில் பெரிய கோயிலுக்கு பதிலாக வடநாட்டு மந்திர் கோயில்: ஒன்றிய அரசுக்கு கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Thanjavur ,Railway Station ,Vadanattu ,Mandir Temple ,Condemns Union Government ,Union Government ,Vadanattu Mandir Temple ,
× RELATED செங்கல்பட்டு – காஞ்சிபுரம்- அரக்கோணம்...