திருவாரூர்: வழக்கு காரணமாக ஏற்பட்டுள்ள நெருக்கடியை பயன்படுத்தி அதிமுகவை பாஜ அடிபணிய வைத்துள்ளது. எனவே இது ஒரு சந்தர்ப்பவாத கூட்டணி என்று முத்தரசன் கூறினார். திருவாரூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: பாஜவுடன் ஒட்டும் இல்லை உறவும் இல்லை என எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே அறிவித்தார். கடந்த மாதம் 25ம் தேதி டெல்லியில் கட்சி அலுவலகத்தை பார்வையிட சென்றதாக கூறி அமித்ஷாவிடம் இரண்டரை மணி நேரம் ஆலோசனை நடத்தினார். அதன் பின்னர் அவரை சந்தித்து அரசியல் பேசவில்லை என கூறிய நிலையில் தமிழகத்தில் என்டிஏ கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருப்பதாக அமித்ஷா தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து செங்கோட்டையன், தம்பிதுரை, சி.வி.சண்முகம் உள்ளிட்ட கட்சியின் நிர்வாகிகளை தனித்தனியாக அழைத்து மிரட்டி, உருட்டி அடிபணிய வைத்து இன்று பாஜ அதிமுக இடையே கூட்டணி ஏற்பட்டுள்ளதாக அறிவித்துள்ளனர். இதனை அதிமுக தொண்டர்களே ஏற்க மாட்டார்கள். ஏனெனில், பாஜ தமிழகத்திற்கு எதிரான கட்சி. தனிப்பட்ட முறையில் எடப்பாடி பழனிசாமி மீதும், அவரது மகன் மீதும், சம்மந்தி மீதும், நண்பர்கள் மீதும், கட்சியின் மீதும், கட்சி சின்னத்தின் மீதும் வழக்குகள் உள்ள நிலையில், வழக்கு காரணமாக ஏற்பட்டுள்ள நெருக்கடியை பயன்படுத்தி அதிமுகவை பாஜ அடிபணிய வைத்துள்ளது. எனவே இது ஒரு சந்தர்ப்பவாத கூட்டணி. இதனால் தமிழகத்தில் எந்த மாற்றமும் நடைபெறப்போவதில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
The post வழக்குகளை காட்டி எடப்பாடிக்கு மிரட்டல் அதிமுகவும், பாஜவும் சந்தர்ப்பவாத கூட்டணி: முத்தரசன் தாக்கு appeared first on Dinakaran.
