- OBS
- சசிகலா
- டிடீவி
- செங்கோட்டியான்
- பாஜா பரிஷப்
- மத்தெரு
- மதேரா
- சென்னை
- செங்கோட்டயன்
- பஜவா
- ஜெயலலிதா
- அசாதாரண பொதுசெயலாளர்
- OPS
- டிடிவி செங்கோட்டயன்
- மத்தேரு
சென்னை: பாஜவை நம்பி களத்தில் இறங்கிய ஓபிஎஸ், சசிகலா, டிடிவி, செங்கோட்டையன் உள்ளிட்டோர் கைவிடப்பட்ட நிலையில், நடுத்தெருவுக்கு வந்து விட்டோமே என அவர்களின் ஆதரவாளர்கள் புலம்பி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் ஏற்பட்ட பிரச்னைகளும், அவற்றின் அதிர்வுகளும் படிப்படியாக குறைந்து ஒற்றைத் தலைமையின் கீழ் அதிமுக வந்துவிட்டதாக கருதப்பட்ட நிலையில், கட்சியில் தற்போது மீண்டும் சலசலப்புகளும், குழப்பங்களும் தலை தூக்கியுள்ளன. வரும் 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள தமிழகத்தில் உள்ள கட்சிகள் எல்லாம் தயாராகி வரும் நிலையில், பிரதான எதிர்கட்சியாக விளங்கும் அதிமுகவில் மேலும் பல பிளவுகள் உருவாகும் வாய்ப்புள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
ஏற்கனவே ஓபிஎஸ், சசிகலா என முக்கிய தலைவர்கள் அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில், திடீரென அவர்களை எல்லாம் இணைத்து ஒருங்கிணைந்த அதிமுக உருவாக வேண்டும் என்று மூத்த தலைவர் செங்கோட்டையன் திடீரென போர்க்கொடி தூக்கியது அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் டெல்லி சென்று அமித்ஷா, நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பாஜ தலைவர்களை சந்தித்து வந்ததால் பாஜவின் முகமாக செங்கோட்டையன் செயல்பட்டு வருவதாக கட்சியினர் வெளிப்படையாக பேசத் தொடங்கினர்.
அதேநேரம், பாஜ உடன் எந்த காலத்திலும் இனி கூட்டணி இல்லை என்று எடப்பாடி பழனிச்சாமி மேடைக்கு மேடை பேசி வந்த நிலையில், அதிமுக உடன் கூட்டணியை ஏற்படுத்த பாஜ தலைமையானது பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியது. குறிப்பாக முன்னாள் மூத்த அமைச்சர்களை மிரட்டி வருவதாகவும், கூட்டணி அமைக்காவிட்டால் அவர்கள் மீதான வழக்குகளை தீவிரப்படுத்தவும் பாஜ தலைமை முடிவெடுத்ததாகவும் தகவல் வெளியானது. எடப்பாடி பழனிசாமி கூட்டணியை கூட ஏற்று கொள்வோம், ஆனால் வெளியேற்றப்பட்ட தலைவர்களை எந்த காரணத்தை கொண்டும் மீண்டும் சேர்க்கமாட்டோம் என்பதில் உறுதியாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
ஆனாலும் பாஜவின் மிரட்டல் நடவடிக்கைகளால், பாஜவின் கைகளில் இருந்து வரும் ஓபிஎஸ், சசிகலா, டிடிவி.தினகரன் உள்ளிட்டவர்கள் மீண்டும் அதிமுகவில் தங்களை இணைத்து கொள்வார்கள் என்ற கனவில் இருந்து வந்தனர். அதற்கான நம்பிக்கை, அவர்கள் ஆதரவாளர்கள் மத்தியிலும் இருந்து வந்தது. எடப்பாடி பழனிச்சாமி சேர்க்கிறாரோ இல்லையோ, ஆனால் பாஜ நம்மை கைவிடாது என்ற நம்பிக்கையில் இருந்து வந்தனர். இந்த சூழ்நிலையில், எடப்பாடி பழனிச்சாமி மற்றும் மூத்த தலைவர்கள் மீதான வழக்குகளை வைத்து தங்களுடன் கூட்டணியை ஏற்படுத்த வேண்டும் என்று பாஜ நெருக்கடி கொடுத்ததாக கூறப்படுகிறது. பாஜவில் இந்த மிரட்டலை தொடர்ந்து, கடுமையாக எதிர்த்து வந்த எடப்பாடி பழனிச்சாமி கூட்டணி தொடர்பான விஷயத்தில் மென்மையான போக்கை காட்டினார்.
ஆனாலும், தனது கோரிக்கையை ஏற்றால் மட்டுமே கூட்டணியை உறுதி செய்ய முடியும் என்பதில் எடப்பாடி பழனிச்சாமி கறார் காட்டினார். அந்த கோரிக்கைகளில் முக்கியமானது என சொன்னால், தமிழகத்தில் என்.டி.ஏ.வுக்கு அதிமுக தான் தலைமை, அதிமுகவின் உள் விவகாரங்களில் தலையிடக்கூடாது (அதாவது, கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டும் இணைக்க வலியுறுத்தக்கூடாது), சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மைக்கு அதிகமான இடங்களில் அதிமுக போட்டியிடும், அதற்கு ஒப்புக்கொள்ள வேண்டும். பாஜவுக்கான இடங்களை மட்டுமே நீங்கள் கேட்டுப்பெறலாம், கூட்டணி கட்சிகளுக்கு அதிமுக தான் சீட் ஒதுக்கும் உள்ளிட்ட 10 நிபந்தனைகள் அமித்ஷாவிடம் அதிமுக தரப்பில் வைக்கப்பட்டது. இதை அமித்ஷா ஏற்றுக் கொண்ட பின்னே அதிமுக-பாஜ கூட்டணி உறுதியாகியிருக்கிறது.
அதேநேரம், எடப்பாடி பழனிச்சாமி ரூட் கிளியர் ஆன நிலையில், பாஜவை நம்பி களத்தில் இறங்கிய சசிகலா, டிடிவி.தினகரன், ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன் ஆகியோரது நிலை என்னவாகும் என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் வட்டமடித்து கொண்டிருக்கிறது. அவர்கள் எல்லாம் பாஜ கூட்டணியில் இருக்கும் நிலையில், அவர்களை அதிமுகவில் இணைக்கும் திட்டம் அந்தோ கதிதானா?. என்றே கருதப்படுகிறது. பாஜவை நம்பி களத்தில் இறங்கிய நம்மை நடுத்தெருவில் நிறுத்தி விட்டார்களே என்றும் அவர்களது ஆதரவாளர்கள் பரிதவிப்பில் உள்ளனர்.
ஏனென்றால், ஓபிஎஸ்சை அதிமுகவில் இணைக்க எடப்பாடியிடம் வலியுறுத்துவீர்களா என்று அமித்ஷாவிடம் கேள்வி கேட்டதற்கு, அதிமுகவின் உள்கட்சி விவகாரத்தில் தலையிட மாட்டோம் என கூறியது அவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பாஜவுடன் பயணித்து வந்த அமமுக மற்றும் ஓபிஎஸ் ஆகியோரை பாஜ கூட்டணி கைவிட்டதாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. எனவே பாஜவை நம்பி வந்த இந்த 3 பேரின் நிலைமை பரிதாபத்துக்குரியதாக மாறிவிட்டது. இவர்களாவது கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டவர்கள்.
தற்போது கட்சிக்குள் இருந்தே எட்ப்பாடிக்கு குடைச்சல் கொடுத்து வந்த செங்கோட்டையன் நிலமையை கொஞ்சம் யோசித்து பார்க்க வேண்டும். மொத்தத்தில் அதிமுகவுக்கு நான் தான் என எடப்பாடி பழனிச்சாமி உறுதி செய்துள்ளதால், இனி செங்கோட்டையன் கட்சியில் முழுமையாக ஓரங்கட்டப்பட வாய்ப்புள்ளது. இதனால் அவருக்கு வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட கூட வாய்ப்பு கிடைப்பதே அரிதான ஒன்று தான். ஓபிஎஸ், சசிகலா ஆகியோரை பொறுத்தவரை இனி தனிக்கட்சி தான் தொடங்க வேண்டும்.
இல்லாவிட்டால் சுயேட்சையாக தான் போட்டியிடும் நிலமை ஏற்படும். இப்படிப்பட்ட பரிதாப நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளதை பார்த்து அவர்களது ஆதரவாளர்கள், பாஜவை நம்பி இப்படி நடுத்தெருவுக்கு வந்துவிட்டோமே என்று புலம்ப தொடங்கியுள்ளார்களாம். ஓபிஎஸ்சை அதிமுகவில் இணைக்க எடப்பாடியிடம் வலியுறுத்துவீர்களா என்று அமித்ஷாவிடம் கேள்வி கேட்டதற்கு, அதிமுகவின் உள்கட்சி விவகாரத்தில் தலையிட மாட்டோம் என கூறியது அவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
The post நம்பி வந்தவர்களை கைவிட்ட பாஜ பரிதவிப்பில் ஓபிஎஸ், சசிகலா, டிடிவி செங்கோட்டையன் ஆதரவாளர்கள்: நடுத்தெருவுக்கு வந்து விட்டோமே என புலம்புவதாக தகவல் appeared first on Dinakaran.
