உசிலம்பட்டி, ஏப்.11: வெப்ப சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக, தமிழ்நாடு வானிலை மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரின் அடிவார பகுதியான உசிலம்பட்டி மற்றும் இதனை அடுத்துள்ள தொட்டப்பநாயக்கனூர், நக்கலபட்டி, வி.பெருமாள்பட்டடி, அல்லிகுண்டம், அயோத்திபட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று பகல் நேரத்தில் பலத்த இடி மற்றும் காற்றுடன் கனமழை பெய்தது.
இந்த மழையால் சாலைகளில் மழைநீர் ஆறாக ஓடியது. மேலும் காற்று காரணமாக ஆங்காங்கே மின்தடை ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. காலை முதலே கடுமையான வெயில் தாக்கிய சூழலில் பிற்பகல் நேரத்தில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கனமழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளர். பல்வேறு கிராமப்புற பகுதிகளில் பங்குனி பொங்கல் விழா நடைபெற்று வரும் நிலையில், மழை பெய்ய வேண்டும் என்ற தங்களது வேண்டுதல் நிறைவேறியுள்ளதாக மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
The post உசிலம்பட்டி பகுதியில் பலத்த காற்றுடன் கனமழை appeared first on Dinakaran.
