புதுடெல்லி: வக்பு திருத்தச் சட்டத்துக்கு எதிராக அசாதுதீன் ஓவைசி, மஹூவா மொய்த்ரா உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுக்களை வருகிற 16ம் தேதி உச்சநீதிமன்றம் விசாரணைக்கு பட்டியலிட்டுள்ளது. வக்பு திருத்தச் சட்ட மசோதா குடியரசு தலைவரின் ஒப்புதலுடன் நடைமுறைக்கு வந்துள்ளது. இந்நிலையில் வக்பு திருத்த சட்டத்துக்கு எதிராக பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், எம்பிக்கள் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். ஏற்கனவே திமுக சார்பில் ஆ.ராசா, ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஓவைசி, ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த அமனத்துல்லா கான், ஆர்ஜேடியை சேர்ந்த மனோஜ்குமார் உள்ளிட்டோர் மனு தாக்கல் செய்துள்ளனர்.
இதனை தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் எம்பியான மஹூவா மொய்த்ரா நேற்று முன்தினம் வக்பு திருத்த சட்டத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தை அணுகினார். இந்த சட்டத்தை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும் என்று மனுவில் அவர் வலியுறுத்தி இருக்கிறார். எம்பி மஹூவா மொய்த்ராவின் மனு மற்றும் இதர 10 மனுக்களை வருகிற 16ம் தேதி விசாரணைக்கு ஏற்பதாக தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா தலைமையில் நீதிபதிகள் சஞ்சய் குமார் மற்றும் விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு பட்டியலிட்டுள்ளது.
The post வக்பு திருத்த சட்டத்தை எதிர்த்து மனு உச்சநீதிமன்றத்தில் வரும் 16ம் தேதி விசாரணை appeared first on Dinakaran.
