×

சென்னை வரும் அமித்ஷாவை கண்டித்து சென்னையில் இன்று காங்கிரசார் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்: செல்வப்பெருந்தகை அறிவிப்பு

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:
ஒன்றிய பாஜ அரசின் பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் இணைந்து தமிழக நலன்களுக்கு விரோதமாக தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர். தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிதிப் பகிர்வில் பாரபட்சம், மும்மொழி திட்டத்தை ஏற்கவில்லை என்றால் ஒருங்கிணைந்த கல்வி திட்டத்திற்கு நிதி வழங்க மறுப்பது, இந்தி மொழி மற்றும் நீட் தேர்வு திணிப்பு, வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, சிபிஐ ஆகிய அமைப்புகளின் மூலமாக இந்தியா கூட்டணி கட்சியினர் மீது வழக்குகள், சோதனைகள் என சர்வாதிகார முறையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா செயல்பட்டு வருகிறார்.

தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகளை தமது அதிகார பலத்தால் அச்சுறுத்தி அரசியல் ஆதாயம் தேடுகிற நோக்கத்தில் தமிழகத்திற்கு அடிக்கடி வருகை புரிந்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்நாடு அரசுக்கு எதிராக பல்வேறு வகைகளில் நெருக்கடிகளை கொடுத்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளாக தமிழக ஆளுநரை பயன்படுத்தி தமிழக அரசின் திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போட்டு வந்தார். ஆனால், அதற்கெல்லாம் பாடம் புகட்டுகிற வகையில் சமீபத்தில் உச்ச நீதிமன்றம் ஆளுநரின் செயல்பாடுகளுக்கு முடிவுகட்டி, வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியிருக்கிறது.

இந்திய அரசமைப்புச் சட்டத்தை வழங்கிய அம்பேத்கரை நாடாளுமன்றத்தில் இழிவுபடுத்தி பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா இரண்டு நாள் பயணமாக சென்னைக்கு வருகை புரிய இருக்கிறார். அவருக்கு சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகளின் சார்பாக கண்டனத்தை தெரிவிக்கிற வகையில், எனது தலைமையில் இன்று (11ம்தேதி) வெள்ளிக்கிழமை காலை 10 மணி அளவில் சென்னை, மயிலாப்பூர் அம்பேத்கர் பாலம் அருகில் (சிட்டி சென்டர் அருகில்) கருப்புக் கொடி ஏந்தி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post சென்னை வரும் அமித்ஷாவை கண்டித்து சென்னையில் இன்று காங்கிரசார் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்: செல்வப்பெருந்தகை அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Congressional Black Flag Demonstration in ,Chennai ,Amitsha ,Tamil ,Nadu ,Congress ,President ,Selvapperundagai ,Modi ,Interior Minister ,Union Government ,Tamil Nadu ,Congressional Black Flag Protest ,
× RELATED அமமுக இடம்பெறும் கூட்டணி வெற்றிபெறும்: தஞ்சையில் டி.டி.வி. தினகரன் பேட்டி