×

கூடுதல் தலைமை செயலாளர் நேரில் ஆய்வு மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12ல் தண்ணீர் திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்

மேட்டூர்: மேட்டூர் அணையில் நேற்று தமிழக நீர்வளத்துறை கூடுதல் தலைமை செயலாளர் மங்கத்ராம் சர்மா நேரில் ஆய்வு செய்தார். அப்போது, மேட்டூர் அணையிலிருந்து குறிப்பிட்ட தினமான ஜூன் 12ம் தேதி காவிரி டெல்டா பாசனத்திற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் தண்ணீர் திறந்து வைக்கிறார் என தெரிவித்தார். சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் தமிழக நீர்வளத்துறையின் கூடுதல் தலைமை செயலாளர் மங்கத்ராம் சர்மா நேற்று காலை ஆய்வு மேற்கொண்டார். அணையின் வலது கரை- இடது கரை, 16 கண் மதகு, ஆய்வு சுரங்கம் உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட்டார்.

தொடர்ந்து அணையில் நடைபெற்று வரும் பராமரிப்பு- புனரமைப்பு பணிகளையும் ஆய்வு செய்தார். மேல்மட்ட மதகு, கீழ்மட்ட மதகு, ஆய்வு சுரங்கம் மற்றும் அணை மின் நிலையத்தையும் பார்வையிட்டார். மேலும், நீர்வளத்துறை திருச்சி மண்டல தலைமை பொறியாளர் தயாளகுமார் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து, அவர் நிருபர்களிடம் கூறியதாவது: மேட்டூர் அணையின் பராமரிப்பு சிறப்பாக உள்ளது. வழக்கமான ஆய்வு பணிக்காக வந்துள்ளேன்.

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கும் முன்பாக நேரடியாக பார்வையிட்டு அணையின் நிலவரம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஜூன் 12ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் வந்து மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறந்து வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால், முன்கூட்டியே ஆய்வுப் பணிகளை முடிக்க ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. தற்போது ரூ.20 கோடி செலவில் மேட்டூர் அணையில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

இரண்டு மாதங்களுக்கு முன்பாக பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணை திறப்பதற்கு முன்பாக இந்தப் பணிகளை முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அணை திறக்கப்பட்ட பிறகு பணிகள் நிறுத்தப்படும். மீண்டும் பாசன காலம் முடிந்த பிறகு பணிகள் துவக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். ஆய்வின்போது திருச்சி மண்டல நீர்வளத்துறை தலைமை பொறியாளர் தயாளகுமார், மேட்டூர் செயற்பொறியாளர் வெங்கடாசலம், உதவி செயற்பொறியாளர் செல்வராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

* அணைக்கு நீர்வரத்து 922 கனஅடியாக சரிவு
ஒகேனக்கல் காவிரியில் நேற்று முன்தினம் விநாடிக்கு 2 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை 1,200 கனஅடியாக சரிந்தது. இதேபோல், மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் 1,872 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை 922 கனஅடியாக சரிந்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1,000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் நீரின் அளவை விட திறப்பு அதிகமாக இருப்பதால, நீர்மட்டம் மீண்டும் சரியத் தொடங்கியுள்ளது. நேற்று முன்தினம் 107.82 அடியாக இருந்த நீர்மட்டம், நேற்று 107.79 அடியாக சரிந்தது. நீர்இருப்பு 75.30 டிஎம்சியாக உள்ளது.

The post கூடுதல் தலைமை செயலாளர் நேரில் ஆய்வு மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12ல் தண்ணீர் திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார் appeared first on Dinakaran.

Tags : Chief Secretary ,Matur Dam ,Chief Minister ,M. K. Stalin ,Mattur ,Tamil Nadu Water Department ,Mangatram Sharma ,Mattur Dam ,Delta ,M.D. K. Stalin ,Dinakaran ,
× RELATED சென்னை கத்திப்பாராவில் பூட்டு போட்டு...