கோவை: அதிமுகவுடன் கூட்டணியை இறுதி செய்ய பாஜ தீவிரம் காட்டி வருகிறது. ஆனால் அதற்கு எடப்பாடி சில முட்டுக்கட்டைகளை போடுவதால் அதிமுகவை புதிய அணியை உருவாக்கி கட்சியை உடைக்கும் திட்டத்தில் பாஜ காய் நகர்த்தி வருகிறது. இதற்கான டிரம்ப் கார்டுதான் செங்கோட்டையன். எடப்பாடிக்கு எதிராக போர்க்கொடி தூக்கி உள்ள செங்கோட்டையனை டெல்லி வரவழைத்து ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் பேசினர். தொடர்ந்து, அதிமுகவில் எடப்பாடிக்கு எதிராக உள்ள தலைவர்களை பாஜ மேலிடம் அழைத்து ரகசியமாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இதே போல், தற்போது நடைபெற்று வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்எல்ஏக்கள் ஏதாவது காரணத்தை கூறிக்கொண்டு அவ்வப்போது வெளி நடப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், செங்கோட்டையன் வெளியேறாமல் தொடர்ந்து அவை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பேசி வருகின்றார். செங்கோட்டையனின் நடவடிக்கை குறித்து எடப்பாடி பழனிசாமியிடம் கேள்வி கேட்டால் `அதை அவரிடமே போய் கேளுங்கள்’ என்று கோபத்தோடு பதில் கூறுகிறார். இதுதொடர்பாக செங்கோட்டையனிடம் செய்தியாளர்கள் பலமுறை கேள்வி கேட்டும் மவுனத்தை மட்டுமே பதிலாக அளிக்கிறார். `மவுனம் அனைத்திற்கும் நன்மைக்கே’ என்ற ஒற்றை பதிலில் முடித்துக்கொள்கிறார்.
இந்நிலையில், நேற்று இரவு சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்த செங்கோட்டையனை செய்தியாளர்கள் சுற்றி வளைத்து உங்கள் மவுனத்திற்கான காரணம் என்ன?, பாஜ தலைவர்களை சந்திப்பது ஏன்?, எடப்பாடி பழனிசாமிக்கும் உங்களுக்கும் என்ன மோதல்? என அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டனர். ஆனால் எதற்கும் பதிலளிக்காமல் கையெடுத்து கும்பிடு போட்டுவிட்டு வழக்கம் போல மவுனத்தை மட்டுமே பதிலாக அளித்து விட்டு காரில் ஏறி பறந்தார்.
The post மவுனத்திற்கு என்ன காரணம்? கும்பிடு போட்டு பறந்த செங்கோட்டையன் appeared first on Dinakaran.
