×

கோவில்பட்டியில் பங்குனி பெருந்திருவிழா; ராட்டினங்களால் குதூகலிக்கும் சிறுவர்கள்

கோவில்பட்டி: கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் கோவில் பங்குனி பெருந்திருவிழாவை முன்னிட்டு ராட்சத ராட்டினம் உள்ளிட்ட பல்வேறு வகை ராட்டினங்கள் பொருத்தப்பட்டுள்ளதால் சிறுவர்கள் குதூகலம் அடைந்துள்ளனர்.
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாதசுவாமி திருக்கோயிலில் நடைபெறும் விழாக்களில் பங்குனி பெருந்திருவிழா மிகவும் முக்கியமானதாகும். இந்தாண்டு திருவிழா கடந்த 5ம்தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச்சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருவிழா வரும் 15ம்தேதி வரை 11 நாட்கள் நடக்கிறது. விழா நாட்களில் மண்டகப்படிதாரர்கள் சார்பில் காலை, மாலை சுவாமி, அம்மன் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வரும் 13-ம்தேதி நடக்கிறது.

அதனைத்தொடர்ந்து 14-ம்தேதி தீர்த்தவாரியும், 15ம்தேதி இரவு தெப்ப உற்சவமும் நடக்கிறது. 11 நாட்கள் நடைபெறும் திருவிழாவை முன்னிட்டு கோயில் பின்புறம் உள்ள மைதானத்தில் ராட்சத ராட்டினம், குழந்தைகளுக்கான சிறிய வகை ராட்டினங்கள் போன்ற பல்வேறு வகை ராட்டினங்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் டெல்லி அப்பள கடைகள், பேன்சி கடைகளும், பெண்கள் அழகு சாதனை பொருட்கள் கடைகள், கரும்பு சாறு கடைகள், பொம்மை விற்பனை கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. ராட்டினங்கள் பொருத்தப்பட்டுள்ளதால் சிறுவர், சிறுமிகள் உற்சாகம் அடைந்துள்ளனர். நகரில் கடும் கோடை வெயில் கொளுத்தி வருவதால், வெயில் தணியும் மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை கோயில் பின்புற மைதானத்தில் ராட்டினங்களை சுற்றவும், கடைகளில் பொருட்களை வாங்கவும் மக்கள் குடும்பத்துடன் திரண்டு வருவதால் திருவிழா களைகட்டி உள்ளது.

 

The post கோவில்பட்டியில் பங்குனி பெருந்திருவிழா; ராட்டினங்களால் குதூகலிக்கும் சிறுவர்கள் appeared first on Dinakaran.

Tags : Panguni festival ,Kovilpatti ,Kovilpatti Senbhagavalli Amman Temple ,Rakshatha ,Kovilpatti Senbhagavalli Amman Udanurai Poovanathaswamy Temple ,
× RELATED தமிழ்நாட்டில் பெண்களுக்கு...