×

ஐபிஎல் 21வது லீக் போட்டி: திக்… திக்… திரில்லரில் லக்னோ அபார வெற்றி: போராடி வீழ்ந்தது கொல்கத்தா

கொல்கத்தா: கொல்கத்தா அணிக்கு எதிராக நேற்று நடந்த பரபரப்பான லீக் போட்டியில், 238 ரன் குவித்த லக்னோ அணி, 4 ரன் வித்தியாசத்தில் வென்றது. கொல்கத்தாவில் நேற்று நடந்த ஐபிஎல் 21வது லீக் போட்டியில், கொல்கத்தா, லக்னோ அணிகள் மோதின. முதலில் ஆடிய லக்னோ அணியின் துவக்க வீரர்கள் மிட்செல் மார்ஷ், அய்டன் மார்க்ரம், முதல் விக்கெட்டுக்கு 99 ரன்கள் குவித்தனர். 11வது ஒவரில், அய்டன் மார்க்ரம் (28 பந்து, 47 ரன்), கிளீன் போல்டாகி வெளியேறினார்.

அதன் பின், நிகோலஸ் பூரன், மார்ஷுடன் இணை சேர்ந்தார். அதிரடி ரன் வேட்டையை நடத்திய மார்ஷ் (48 பந்து, 5 சிக்சர், 6 பவுண்டரி, 81 ரன்), ரஸல் பந்தில் அவுட்டானார். பின், அப்துல் சமத் உள் வந்தார். அதைத் தொடர்ந்து, அமர்க்கள ஆட்டத்தை வெளிப்படுத்திய பூரன், வெறும் 21 பந்துகளில் அரை சதத்தை கடந்தார். 19வது ஓவரில், அப்துல் சமத் (6 ரன்) கிளீன் போல்டானார். 20 ஓவர் முடிவில், லக்னோ, 3 விக்கெட் இழந்து, 238 ரன்கள் குவித்தது. நிக்கோலஸ் பூரன் 36 பந்துகளை எதிர்கொண்டு 8 சிக்சர், 7 பவுண்டரிகளுடன் 87 ரன் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

அதையடுத்து, 239 ரன் இமாலய இலக்குடன் கொல்கத்தா அணியின் குவின்டன் டிகாக், சுனில் நரைன் களமிறங்கினர். 3வது ஓவரில், டிகாக் (15 ரன்) அவுட்டானார். அதன் பின், கேப்டன் அஜிங்கிய ரகானே, நரைனுடன் இணை சேர்ந்தார். இவர்கள் சிறப்பாக ஆடி 2வது விக்கெட்டுக்கு 54 ரன் குவித்த நிலையில், 7வது ஓவரில் நரைன் (30 ரன்) ஆட்டமிழந்தார். பின் வந்த வெங்கடேஷ் ஐயருடன் சேர்ந்து, ரகானே ரன் மழை பொழிந்தார்.

35 பந்துகளில், 2 சிக்சர், 8 பவுண்டரிகளுடன் 61 ரன் எடுத்த நிலையில், ரகானே, ஷர்துல் தாக்குர் பந்தில் ஆட்டமிழந்தார். பின் வந்த ரமண்தீப் சிங் (1 ரன்), அங்கிரீஷ் ரகுவன்ஷி (5 ரன்) அடுத்தடுத்து அவுட்டாகினர். அடுத்த ஓவரில், மறுமுனையில் சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த வெங்கடேஷ் ஐயரும் (29 பந்து, 45 ரன்) ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஆண்ட்ரு ரஸல் 7 ரன்னில் வீழ்ந்தார். கடைசி நேரத்தில் ரிங்கு சிங் 15 பந்தில் 38 ரன்களை விளாசினார். இருப்பினும், கொல்கத்தா அணியால், 7 விக்கெட் இழப்புக்கு 234 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. அதனால், 4 ரன் வித்தியாசத்தில் லக்னோ வென்றது.

The post ஐபிஎல் 21வது லீக் போட்டி: திக்… திக்… திரில்லரில் லக்னோ அபார வெற்றி: போராடி வீழ்ந்தது கொல்கத்தா appeared first on Dinakaran.

Tags : IPL 21st League Match ,Lucknow ,Kolkata ,21st IPL league match ,Dinakaran ,
× RELATED சில்லிபாயிண்ட்…