×

மானாமதுரை, திருப்புவனம் தேசிய வங்கி ஏடிஎம்களில் தமிழ்மொழி புறக்கணிப்பு: வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி

மானாமதுரை/ திருப்புவனம்: மானாமதுரை, திருப்புவனத்தில் உள்ள தேசிய வங்கி ஏடிஎம் மையங்களில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டதால், வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழ்நாட்டில் வங்கி ஏடிஎம் இயந்திரங்களில் உள்ள தொடு திரைகளில் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகள் மட்டுமே பயன்பாட்டு மொழிகளாக உள்ளன. இந்நிலையில், சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் உள்ள தேசிய வங்கி ஏடிஎம் மையம் ஒன்றில் நேற்று பணம் எடுக்கச் சென்ற வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஏடிஎம் இயந்திர தொடுதிரையில் தமிழ் மொழிக்கு பதிலாக இந்தி மற்றும் கன்னடம் ஆகியவை இடம்பெற்றிருந்தன. இதனால், வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும், பணம் எடுக்க அவதிப்பட்டனர்.

இதேபோல, திருப்புவனத்தில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட மற்றொரு வங்கி ஏடிஎம் தொடுதிரையிலும் தமிழ் மொழிக்கு பதிலாக மற்றொரு மொழி இடம்பெற்றிருந்தது. இது குறித்து வாடிக்கையாளர்கள் கூறுகையில், `அவசர தேவைக்கு ஏடிஎம்மில் பணம் எடுக்க வந்தோம். ஆனால், ஏடிஎம் தொடுதிரையில் தமிழ் மொழிக்கு பதிலாக வேறு மொழிகள் இடம் பெற்றிருந்ததால் அதிர்ச்சி அடைந்தோம். இதனால், தேவையற்ற குழப்பம் ஏற்படுகிறது. இதனை சரிசெய்ய வங்கி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர். இது குறித்து வங்கி அதிகாரி ஒருவர் கூறுகையில், `ஏடிஎம் மென்பொருளில் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டு இருக்கலாம். இதனை சரிசெய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

The post மானாமதுரை, திருப்புவனம் தேசிய வங்கி ஏடிஎம்களில் தமிழ்மொழி புறக்கணிப்பு: வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி appeared first on Dinakaran.

Tags : National Bank ATMs ,Manamadurai, Tiruppuwanam ,MANAMADURAI ,THIRUPUWANAM ,NATIONAL BANK ATM CENTRES ,MANAMADURAI, THIRUPUWANAM ,Tamil Nadu ,Tirupwanam ,
× RELATED மகளிர் உரிமை தொகை திட்டம்;...