சென்னை: தமிழக சட்டப்பேரவையில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை மீதான மானியக் கோரிக்கைகளுக்கு பதிலளித்து அமைச்சர் முத்துசாமி வெளியிட்ட அறிவிப்புகள் :
- சுயசான்றிதழ் மூலம் தூண்தளம் மற்றும் இரண்டுதளம் கொண்ட குடியிருப்பு கட்டிடங்களுக்கு அனுமதி வழங்கப்படும்.
- குடிசை தொழில் மற்றும் பசுமை வகை தொழிற்சாலை கட்டிடங்களுக்கு உடனடி அனுமதி பெறும் சுய சான்றிதழ் திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.
- தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாநில நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள பள்ளிகளுக்கு, பள்ளி நிர்வாகமே சேவை சாலை உருவாக்குமெனில், அப்பள்ளி கட்டிடங்களுக்கு நடைமுறையிலுள்ள விதிகளை பின்பற்றி அனுமதி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
- உட்கட்டமைப்பு மற்றும் வசதி கட்டணங்கள், வளர்ச்சி கட்டணங்கள் செலுத்துவதற்கான காலக்கெடு 30 நாட்களிலிருந்து 60 நாட்களாக உயர்த்தப்படும்.
- ஒற்றை குடியிருப்பு கொண்ட தனி வீட்டிற்கு வாகன நிறுத்துமிடத்திற்கென தனி விதிகள் உருவாக்கப்படும்.
- திட்ட ஒப்புதல் வழங்கும் நடைமுறையில், பொதுமக்களுக்கு உதவி புரிய தற்போது செயல்பாட்டில் உள்ள ஒற்றை சாளர முறையில் மின்னணு உதவி செயலி உருவாக்கப்படும்.
- நகர் ஊரமைப்புத் துறை, மாநகராட்சி, நகராட்சி மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சிக்குழுமத்தில் பதிவுபெற்ற வல்லுநர்கள் நகர் ஊரமைப்பு துறையில் செயல்பட அனுமதிக்கப்படுவர்.
- நகர் ஊரமைப்பு துறையில் முழுமைத்திட்ட அலகு (தனி பிரிவு) உருவாக்கப்படும்.
- தமிழ்நாட்டில் முழுமைத்திட்டம் தயாரித்து செயல்படுத்துவதற்கான நிலையான செயல்முறை தயாரிக்கப்படும்.
- மலையிட பகுதிகளில், திட்டஅனுமதி செயல்முறை மற்றும் பிற திட்டமிடல் செயல்பாடுகளை வலுப்படுத்த, நகர்ப்புற திட்டமிடுபவர்கள், பொறியாளர்கள், கட்டிட கலைஞர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள்.தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம்:
- தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால் திருவள்ளூர் மாவட்டம் திரூரில் 1.97 ஏக்கர் பரப்பளவில் மனை மேம்பாட்டுத் திட்டம் ரூ.2.06 கோடியில் செயல்படுத்தப்படும்.
- தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால் திருவள்ளூர் மாவட்டம் காக்களூரில் 1.05 ஏக்கர் பரப்பளவில் மனை மேம்பாட்டுத் திட்டம் ரூ.0.80 கோடியில் செயல்படுத்தப்படும்.
- தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால் சேலம் மாவட்டம் எடப்பாடியில் 8.19 ஏக்கர் பரப்பளவில் மனை மேம்பாட்டுத் திட்டம் ரூ.9.13 கோடியில் செயல்படுத்தப்படும்.
- தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால் ஈரோடு மாவட்டம் தாளவாடியில் தமிழ்நாடு அரசு அலுவலர்களுக்காக முதற்கட்டமாக 100 வாடகை குடியிருப்புகள் ரூ.65 கோடியில் கட்டப்படும்.
- தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால் 2024க்கு முன்பு கட்டப்பட்டு விற்பனையாகாத குறைந்த வருவாய் பிரிவு குடியிருப்புகள் தவணை முறை திட்டத்தின் கீழ் விற்கப்படும்.
- தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால், 31.3.2015க்கு முன்பு தவணை காலம் முடிவுற்ற குடியிருப்பு திட்டங்களுக்கு, மாதத் தவணை தொகையினை தாமதமாக செலுத்தியதற்காக விதிக்கப்படும் அபராத வட்டி முழுமையாக தள்ளுபடி செய்யப்படும். வட்டி முதலாக்கத்தின் மீது விதிக்கப்படும் வட்டி முழுமையாக தள்ளுபடி செய்யப்படும். நிலத்தின் இறுதி விலை வித்தியாசத்திற்கான வட்டியில், ஒவ்வொரு ஆண்டிற்கு 5 மாதத்திற்குண்டான வட்டி தள்ளுபடி வழங்கப்படும். இச்சலுகை 31.3.2026 வரை செயல்படுத்தப்படும். இதன் மூலம் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள இனங்களில் ஒதுக்கீடுதாரர்கள் விரைவாக விற்பனை பத்திரம் பெற்றுக்கொள்ள இயலும்.
கூட்டுறவு வீட்டுவசதி சங்கம் :
- சென்னை, செங்கல்பட்டு, கோயம்புத்தூர், மதுரை, திருநெல்வேலி மற்றும் சேலம் ஆகிய மண்டலங்களிலுள்ள 8 கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்கள் மூலம் நகைக்கடன் வழங்கப்படும். அங்கு பாதுகாப்பு அறையுடன் கூடிய இரும்பு பெட்டகங்கள் நிறுவப்படும்.
- வேலூர் மற்றும் செங்கல்பட்டு மண்டலங்களிலுள்ள 3 கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்கள் மூலம் ரூ.40 லட்சத்தில் சிமென்ட் விற்பனையகம் துவக்கப்படும்.
- செங்கல்பட்டு மண்டலத்திலுள்ள கூட்டுறவு வீட்டுவசதி சங்கத்தில் எரிபொருள் நிரப்பும் நிலையம் அமைக்கப்படும்.
சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து அதிகார அமைப்பு : - சென்னை பெருநகர பகுதியில் ஸ்மார்ட் வாகன நிறுத்த மேலாண்மையை செயல்படுத்தப்படும்.
- சென்னை பெருநகரப் பகுதிக்கான விரிவான சாலை வடிவமைப்பு வழிகாட்டுதல்கள் தயாரிக்கப்படும்.
- சென்னை பெருநகரப் பகுதிக்கான போக்குவரத்து பாதிப்பு மதிப்பீட்டு வழிகாட்டுதல்கள் தயாரிக்கப்படும்.
The post குடிசை தொழில், பசுமை வகை தொழிற்சாலை கட்டிடங்களுக்கு உடனடி அனுமதி பெறும் சுய சான்றிதழ் திட்டம்: அமைச்சர் முத்துசாமி அறிவிப்பு appeared first on Dinakaran.
