
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்டதால் அதிமுக எம்எல்ஏக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். தமிழக சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அரசு மீது ஒரு குற்றச்சாட்டை முன் வைத்து பேசினார். ஆனால் அவர் பேச சபாநாயகர் அப்பாவு அனுமதிக்கவில்லை. துரைமுருகன்(அவைமுன்னவர்): எதிர்க்கட்சி தலைவர் பேச வருகிற பொருள். நீதிமன்றத்தில் உள்ளது. அதனால் அதுபற்றி சட்டப்பேரவையில் பேச முடியாது. அப்பாவு(சபாநாயகர்): 2018ம் ஆண்டு ஜூன் 7ம் தேதி அப்போதைய எதிர்க்கட்சி தலைவரும் தற்போதைய முதல்வர் ஒரு பொருள்(ஸ்டேர்லைட்) பேசினார். அப்போதைய சபாநாயகர் தனபால் இந்த பிரச்னை நீதிமன்றத்தில் இருப்பதால், பேரவைக்குள் பேச முடியாது என்று கூறிவிட்டார். விதி 92\1 ல் ஒரு பிரச்னை நீதிமன்றத்தில் இருந்தால் இங்கு பேச அனுமதியில்ைல. அதை பின்பற்றி தற்போதும் இந்த பிரச்னை குறித்து பேச அனுமதி கொடுக்க முடியாது. எதிர்க்கட்சி தலைவருக்கு எல்லாம் தெரிந்தும் அவை முன்னவர் பேசுகிறார். அவர் என்ன பேசுகிறார் என்று அமர்ந்து கேளுங்கள்.
துரைமுருகன்(அவை முன்னவர்): விதியை பின்பற்றி தான் சட்டசபையில் பேச முடியும்.
அப்பாவு(சபாநாயகர்): காலையில் எனது அறைக்கு எதிர்க்கட்சி துணை தலைவர் இந்த பிரச்னை குறித்து பேச அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரினார். நான் அப்போதே பேச அனுமதி அளிக்க முடியாது என்று சொல்லிவிட்டேன். எ.வ.வேலு(அமைச்சர்): 2019ம் ஆண்டு பிப்ரவரி 12ம் தேதி தற்போதைய முதல்வர் எதிர்க்கட்சி தலைவராக இருந்த போது, ஒரு பிரச்னை குறித்து பேச எழுந்தார். அப்போது தற்போதைய எதிர்க்கட்சி தலைவர் அப்போதைய முதல்வர் இந்த பிரச்னை நீதிமன்றத்தில் உள்ளது வழக்குக்கு குந்தகம் ஏற்படும் என்று பேச அனுமதிக்க முடியாது என்று சொல்லியுள்ளீர்கள்.(எடப்பாடி பேசியது அவை குறிப்பில் இருந்து நீக்கம் செய்யப்பட்டது).
துரைமுருகன்(அவை முன்னவர்) எதிர்க்கட்சி தலைவர் முதல்வராக இருக்கும் போது மட்டும் நீதிமன்றம் சென்று தடை வாங்க வில்லையா? இதைதொடர்ந்து அதிமுக உறுப்பினர்கள் பெரும்பாலானோர் ஒரு அட்டையை தூக்கி பிடித்து அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். அப்பாவு(சபாநாயகர் ) அட்டையை வைத்துள்ள அனைவரையும் அவையை விட்டு வெளியேற்றும் படி அவை காவலர்களுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து அவை காவலர்கள் உள்ளே வந்தனர். அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் கோஷம் எழுப்பியபடி சென்றனர். இதனால் அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.
அதிமுகவினர் வெளியேற்றப்பட்ட பின், முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: எதிர்க்கட்சி தலைவர் இன்று பேச அனுமதி கேட்டார். ஆனால் இந்த பொருள் குறித்து சபாநாயகர் மற்றும் அவை முன்னவர் விரிவான விளக்கம் அளித்தும் அதை கேட்காமல் அவையில் இருந்து வெளியேறி உள்ளனர். அவர்கள் ஒரு பதாகை வைத்து இருந்தனர். அந்த பதாகையில் ‘அந்த தியாகி யார்?’ என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. மறைந்த எம்ஜிஆர். மற்றும் ஜெயலலிதா ஆகியோர் தங்களது தியாகத்தால் அதிமுக கட்சியை வளர்த்து எடுத்தார்கள். ஆனால் அவர்கள் மறைந்த பிறகு அதிமுக கட்சியை கைப்பற்றியுள்ள எதிர்க்கட்சி தலைவர் தன் மீதுள்ள வழக்குகளுக்கான சிலரது காலில் விழுந்துள்ளார். முதலமைச்சர் பதவிக்காக யாருடைய காலில் விழுந்தாரோ அவரையே ஏமாற்றியவர் தான் இந்த தியாகி.
தன் மீதுள்ள வழக்குகளில் இருந்து காப்பாற்றிக் கொள்ள காலில் விழுந்தது யார்? நொந்து போன அதிமுக தொண்டர்கள் தான் தியாகி. முதல்வர் பதவிக்காக அந்த அம்மையார் காலில் விழுந்து பதவியை பெற்ற பின் ஏமாற்றியவர்கள் தான் இந்த தியாகி. இப்போது நொந்து நூடுல்சான அதிமுகவினர் தான் தியாகிகள். நான் தியாகிகளுக்கான விளக்கம் தான் கொடுக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
The post தமிழக சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்டதால் அதிமுக எம்எல்ஏக்கள் சஸ்பெண்ட் appeared first on Dinakaran.
