*விவசாயிகள் எதிர்பார்ப்பு
பொள்ளாச்சி : பொள்ளாச்சியை அடுத்த ஆழியார் அணையிலிருந்து, விவசாய நில பயன்பாட்டிற்காக வண்டல் மண் எடுக்க அனுமதிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த ஆண்டு பெய்த பருவமழையால் 120அடி கொண்ட ஆழியார் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகமாக இருந்ததுடன், டிசம்பர் மாதம் வரை அணையின் நீர்மட்டம் 110 அடிக்கும் அதிகமாக இருந்தது. அதன்பின் மழை குறைவாக இருந்தாலும், அணைக்கு வினாடிக்கு 350 கனஅடி வரை தண்ணீர் வந்துகொண்டிருந்தது.
இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் இறுதியிலிருந்து வெயிலின் தாக்கம் அதிகரிக்க துவங்கியதுடன்,மழையின்றி தண்ணீர் வரத்து மிகவும் குறைந்தது. தற்போது அணையின் நீர்மட்டம் 63 அடியாக சரிந்தது. அதனால், அணையின் பெரும்பகுதி மணல் மேடுகளாகவும், சேறும் சகதியுமாகவும், பாறைகள் நிறைந்த இடமாகவும் உள்ளது. கோடை மழைக்கு பிறகுதான் நீர் மட்டம் உயர வாய்ப்புள்ளது என்ற நிலை உள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக, கோடையின்போது ஆழியார் அணையிலிருந்து வண்டல் மண் எடுக்க அனுமதி அளிக்கப்பட்டது. விவசாய பாசனத்திற்காக வண்டல் மண் இலவசமாக எடுத்து செல்ல அனுமதி அளிக்கப்பட்டிருந்தது விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அந்நேரத்தில் அணையின் பின் பகுதியில் குறிப்பிட்ட பகுதியில் வண்டல் மண் எடுக்கப்பட்டு பள்ளமான இடங்களில், மழைக்காலத்தில் தண்ணீர் தேங்கியது. சுமார் அரை டிஎம்சி தண்ணீர் வரை தேக்கமானதாக கூறப்படுகிறது.
இந்த ஆண்டில், தற்போது ஆழியார் அணைக்கு தண்ணீர் வரத்து குறைந்து வற்றிய நிலையில் இருப்பதால், அணையில் தண்ணீர் இல்லாத இடத்தில், தூர்வார நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், விவசாய பயன்பாட்டிற்காக வண்டல் மண் எடுக்க அனுமதி அளிக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து ஆழியார் நீர் தேக்க திட்டக்குழு தலைவர் செந்தில் கூறுகையில், ‘ஆழியார் அணையில் கடந்த சில ஆண்டுகளாக வண்டல் மண் இலவசமாக எடுக்க அனுமதிக்கப்பட்டன. அதுபோல் நடப்பாண்டிலும், ஆழியார் அணையிலிருந்து விவசாயிகள் வண்டல் மண் எடுத்து செல்ல முறையான அனுமதி அளிக்க வேண்டும். தண்ணீரின் அளவை அதிகரிக்க ஆழியார் அணையில் தூர்வார வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைக்கிறோம்.
நீர்நிலைகளை தூர்வாரி அதிலுள்ள வண்டல் மண்ணை விவசாய நிலத்துக்கு பயன்படுத்துவதால், நீர்நிலைகளில் மழைநீர் சேமிப்பு திறன் பாதுகாக்கப்படுகிறது. நிலத்தடி நீர்மட்டம் அதிகரிக்கும், வளம் மேம்படும், பயிர் உற்பத்தி திறன் மற்றும் பயிரின வளர்ச்சி ஊக்கவிக்கப்படுகிறது. எனவே, இந்த ஆண்டிலும், ஆழியார் அணையிலிருந்து வண்டல் மண் எடுக்க அரசு முறையான உத்தரவு அளிக்க வேண்டும்’ என்றார்.
The post ஆழியார் அணையில் வண்டல் மண் எடுக்க அனுமதிக்கப்படுமா? appeared first on Dinakaran.
