×

சென்னையில் நட்சத்திர ஓட்டலில் ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் செங்கோட்டையன் சந்திப்பு

சென்னை: முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் இருந்து வந்த பனிப்போர் அத்திக்கடவு-அவினாசி திட்ட நிறைவு பாராட்டு விழாவின்போது வெடித்தது. அந்நிகழ்வைப் புறக்கணித்த செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமியை தவிர்த்து வந்தார். இது அதிமுகவில் பெரும் இது சலசலப்பை ஏற்படுத்தியது. சட்டமன்ற நிகழ்வுகளில் கூட எடப்பாடி பழனிசாமியை அவர் சந்திக்காமல் தவிர்த்து வந்தார். செங்கோட்டையன் சந்திக்காமல் தவிர்ப்பது குறித்த கேள்விக்கு பதில் அளித்த எடப்பாடி பழனிசாமி, இந்த கேள்வியை நீங்கள் அவரிடம் தான் கேட்க வேண்டும். அதிமுக தற்போது வரை ஒற்றுமையாகவும் பலமாகவும் உள்ளது என்று தெரிவித்திருந்தார்.

இந்தச் சூழலில், பா.ஜ.க.வுடன் கூட்டணியே கிடையாது எனக் கூறி வந்த எடப்பாடி பழனிசாமி திடீரென ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை டெல்லியில் சந்தித்தார். அன்று இரவே, 2026ம் ஆண்டு தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமையும் என அமித்ஷா எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். இந்நிலையில், சென்னை வந்த எடப்பாடி பழனிசாமி, “தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமையும் என அமித்ஷா, பதிவிட்டிருந்தால் அது அவரது விருப்பம், தேர்தல் நெருங்கும் நேரத்தில் தான் கூட்டணி பற்றி அறிவிக்க முடியும்” என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் செங்கோட்டையன் ரகசியமாக டெல்லி சென்று அமித்ஷா, நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்தார். சமீப நாட்களாக எடப்பாடி பழனிசாமியிடம் இருந்து செங்கோட்டையன் விலகியே இருக்கிறார். எடப்பாடி பழனிசாமியை சந்தித்த அமித்ஷா, செங்கோட்டையனையும் தனியாக சந்திக்க காரணம் என்ன என்பதுதான் கேள்வியாக இருந்து வருகிறது. இந்த சந்திப்பே அதிமுகவில் கடும் குழப்பத்தை ஏற்படுத்தி வந்தது.

இந்நிலையில் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இன்று அதிகாலை மீண்டும் சந்தித்து பேசி உள்ளார். இந்த சந்திப்பு சென்னை சோழா ஓட்டலில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நிகழ்ந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. சில நாட்களுக்கு முன்பு டெல்லியில் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசிய செங்கோட்டையன், சென்னையில் இன்று மீண்டும் சந்தித்து பேசி உள்ளார். கட்சி தலைமை அனுமதியின்றி செங்கோட்டையன் தனியே சென்று சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது. நிர்மலா சீதாராமனை செங்கோட்டையன் மீண்டும் சந்தித்துள்ளது அதிமுகவுக்குள் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையில் பிரதமர் மோடி இன்று ராமேஸ்வரம் வருகிறார். அவரை சந்திக்க எடப்பாடி மறுத்து விட்டார் என்று கூறப்படுகிறது. அதே நேரத்தில் எடப்பாடியை சந்திக்க பிரதமர் விரும்பவில்லை என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

இதற்கிடையில் பிரதமரை முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன், ஜி.கே.வாசன், அண்ணாமலை உள்ளிட்ட 38 பேர் சந்தித்து பேச உள்ளனர். இந்த பட்டியலில் செங்கோட்டையன் பெயர் இல்லை. அதே நேரத்தில் சென்னையில் இருந்த ெசங்கோட்டையன் கோயிலுக்கு செல்வதாக கூறி தூத்துக்குடிக்கு இன்று காலை புறப்பட்டு சென்றார். அவர் அங்கிருந்து ராமேஸ்வரம் செல்ல திட்டமிட்டுள்ளார். அங்கு பிரதமரை சந்தித்து பேசவும் முடிவு ெசய்துள்ளதாக கூறப்படுகிறது. ஒருவேளை அவரை பிரதமர் சந்தித்து பேசினால் அதிமுகவில் புதிய அணி செங்கோட்டையன் தலைமையில் உருவாக்க பாஜக முயற்சி செய்வது உறுதியாகி விடும்.

எடப்பாடி பழனிசாமியிடம் டெல்லி பாஜக தலைமை பேசிய போது ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோரை இணைத்து கொள்ள முடியாது என கூறிவிட்டதாக தெரிகிறது. மேலும் எடப்பாடி பழனிசாமி தலைமையை சில நிர்வாகிகள் விரும்பவில்லை என தெரிகிறது. செங்கோட்டையன் தான் சரி. இதனால் செங்கோட்டையனை அதிமுக பொதுச் செயலாளராக்க வேண்டும் என்ற எண்ணமும் மற்ற நிர்வாகிகளுக்கு இருக்கிறது. அது போல் செங்கோட்டையன் எல்லோரையும் அரவணைத்து செல்வார், அதிர்ந்து கூட பேச மாட்டார் என்பது அனைவருக்கும் தெரியும். எனவே ஒன்றிணைந்த அதிமுகவுக்கு எடப்பாடி பழனிசாமி ஒப்புக் கொள்ளாத நிலையில் செங்கோட்டையனை வைத்து பாஜக காய் நகர்த்துவதாகவும் சொல்லப்படுகிறது. இதனால், அதிமுகவில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சீமான், வேல்முருகனும் சந்திப்பு
சென்னை வந்த நிர்மலா சீதாராமனை நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் பண்ருட்டி வேல்முருகனும் சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்கள் என்ன பேசினார்கள் என்பது குறித்து தகவல் வெளியாகவில்லை. இதுவரை இந்த சந்திப்பை சீமான் மறுக்கவில்லை. ஏற்கனவே நாம் தமிழர் கட்சியின் நகர்வுகள் பாஜகவை நோக்கி இருப்பதாக அரசியல் விமர்சிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இது 2026 சட்டமன்ற தேர்தல் தொடர்பான சந்திப்பா? பாஜகவுடன் நாம் தமிழர் கட்சி கூட்டணியில் இணையுமா? என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது. நிர்மலா சீதாராமனுடனான சந்திப்பின்போது சீமான் அரசியல் தொடர்பாக பேசியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதே நேரத்தில் நான் சீதாராமனை சந்திக்கவில்லை என்று வேல்முருகன் கூறியுள்ளார். இதேபோல், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமியும், நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

The post சென்னையில் நட்சத்திர ஓட்டலில் ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் செங்கோட்டையன் சந்திப்பு appeared first on Dinakaran.

Tags : UNION ,MINISTER ,NIRMALA SITHARAMAN ,STAR CAFE ,CHENNAI ,former ,Senkottaian ,Edapadi Palanisami ,Attikadau-Avinasi Project Completion Appreciation Ceremony ,Eadapadi Palanisami ,Sengkottian ,Union Minister ,
× RELATED தமிழகத்தில் தீவிரமடையும் கடுங்குளிர்...