×

ஆதிதிராவிடர், பழங்குடி தொழில்முனைவோர் தாட்கோ தொழில் பேட்டைகளில் தொழில் தொடங்க வாய்ப்பு

பெரம்பலூர், ஏப்.4:பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக ஆதி திராவிடர் மற்றும் பழங்குடி தொழில்முனைவோருக்கு ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்ட தாட்கோ தொழிற் பேட்டைகளில் தொழில் துவங்க அரிய வாய்ப்பு வழங்கப்படவுள்ளது என்று மாவட்ட கலெக்டர் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது :
தமிழ்நாடு அரசு ஈரோடு மாவட்டம், ஈங்கூர் மற்றும் திருப்பூர் மாவட்டம், முதலிபாளையம் தொழிற்பேட்டைகளில் ஆதி திராவிடர் மற்றும் பழங் குடி வகுப்பை சார்ந்த தொழில்முனைவோருக்கு தொழிற் கூடங்களை குத்தகை மற்றும் வாடகை முறையில் வழங்க திட்டமிட்டுள்ளது. ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சரால் 2024-25ம் ஆண்டு சட்டப் பேரவை புதிய அறிவிப்பில் ரூ.50 கோடி மதிப்பீட்டில் 2 தொழிற் பேட்டைகளிலும் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி புனரமைக்கப்படும் என அறிவித்துள்ளார்.

அதனடிப்படையில் தற்போது திருப்பூர் மாவட்டம் முதலிபாளையம் தொழிற்பேட்டையில் அடிப்படை புனரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகிறது. மற்றும் ஈரோடு மாவட்டம் ஈங்கூர் தொழிற் பேட்டையிலும் புனரமைப் பணிகள் தொடங்கப்பட்டு 3 மாத காலத்தில் முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்தத் திட்டத்தில் குறு ,சிறு மற்றும் பெருதொழில் முனைவோரை கருத்தில் கொண்டு அவர்கள் பயன்பெறும் வகையில் வாடகை மற்றும் குத்தகை முறையில் காலி மனையாகவோ, மறு சீரமைக்கப்பட்ட தொழிற் கூடங்களாகவோ, ஒற்றைமாடி /பலமாடி தொழிற் கூடங்களாவோ அமைத்து அவர்களின் தேவைக்கு ஏற்ப குறுகிய,நீண்டகால குத்தகை அல்லது வாடகை முறையில் வழங்க அரசு தற்போதுமுன் வந்துள்ளது.

இத்திட்டத்தில் பயன் பெற விண்ணப்பத்துடன் விரிவான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படவுள்ளது. தமிழ்நாட்டில் அனைத்து பகுதிகளிலிருந்தும் ஆதிதிராவிட மற்றும் பழங்குடி தொழில் முனைவோர்கள் தாங்கள் தொழில் செய்வதற்கு மேற்கண்ட ஏதேனும் முறையில் தொழிற் கூடங்களை பெற விண்ணப்பிக்கும் முன்பாக தள பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் ஈங்கூர் தொழிற்பேட்டை மற்றும் முதலிபாளையம் தொழிற்பேட்டையில் தள பார்வையிடலாம். தொழில் முனைவோர்கள் தளத்தினை பார்வையிட்ட பிறகு அலுவலக தேவை படிவத்தின் மூலம் அவர்களின் விருப்பத்தை பெற ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. இதில் பங்குபெற விருப்பம் உள்ள தொழில் முனைவோர்கள் < https://forms.gle/fZPDgyWUToAAUobt7 > என்ற இணைய தளத்தில் பதிவு செய்ய வேண்டும். மற்றும் கூடுதல் விவரங்களுக்கு 91502 77723 என்ற கைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பயன் பெறுமாறு மாவட்டக் கலெக்டர் தெரிவித்துள்ளார்.

The post ஆதிதிராவிடர், பழங்குடி தொழில்முனைவோர் தாட்கோ தொழில் பேட்டைகளில் தொழில் தொடங்க வாய்ப்பு appeared first on Dinakaran.

Tags : Adi Dravidar ,Thatco Industrial Estates ,Perambalur ,Erode and ,Tiruppur ,Perambalur District ,Tamil Nadu ,Adi Dravidar Housing and Development Corporation ,Thadco ,Erode ,Dinakaran ,
× RELATED வேந்தர் சீனிவாசன் வழங்கினார்...