×

மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி.. மக்களவையில் நள்ளிரவில் தீர்மானம் நிறைவேற்றம்!!

டெல்லி: மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்துவதற்கு ஒப்புதல் கோரும் தீர்மானம் மக்களவையில் நிறைவேறியது. இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் கடந்த 2023ம் ஆண்டு மே மாதம் 3ம் தேதி மெய்தி மற்றும் குக்கி ஆகிய இரு சமூகத்தினர் இடையே மோதல் உருவானது. இந்த மோதல் பெரும் கலவரமாக மாறி இரு தரப்பிலும் 200க்கும் மேற்பட்டோர் பலியாகினர். மேலும், பல்லாயிரக்கணக்கானோர் தங்களது வீடுகளை இழந்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். இதையடுத்து முதலமைச்சர் பிரேன் சிங் ராஜினாமா செய்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்கு வந்தது.

இந்நிலையில், வக்ஃப் மசோதா நிறைவேறிய பிறகு, மணிப்பூர் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டதற்கான தீர்மானத்தை உள்துறை அமைச்சர் அமித்ஷா மக்களவையில் நேற்று நள்ளிரவு 2.30 மணிக்கு தாக்கல் செய்தார். இத்தீர்மானம் தாக்கலாகி 40 நிமிடங்களுக்குள் விவாதிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது. விரிவாக விவாதிக்கப்படக் கூடாது என்பதற்காகவே நள்ளிரவில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

மக்களவையில் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா நேற்று தாக்கல் செய்யப்பட்டது. அதன் மீதான விவாதம் 12 மணி நேரம் நடைபெற்ற நிலையில், நள்ளிரவு 12 மணியளவில் மசோதா மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. மசோதாவிற்கு ஆதரவாக 288 வாக்குகளும், எதிராக 232 வாக்குகளும் கிடைத்தன. இதையடுத்து வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா மக்களவையில் நிறைவேறிய நிலையில், மாநிலங்களவையில் இந்த சட்டத் திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

The post மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி.. மக்களவையில் நள்ளிரவில் தீர்மானம் நிறைவேற்றம்!! appeared first on Dinakaran.

Tags : President Reigns ,Lok Alam ,Delhi ,President of the Republic ,Manipur ,Lok Sabha ,northeastern ,Manipur, India ,Maiti ,Kuki ,President ,Reigns ,Manipur Resolution ,
× RELATED கனமழை காரணமாக காரைக்காலில் உள்ள...