×

டெல்லியில் இருந்து வீடு திரும்பிய செங்கோட்டையன் காளி கோயிலில் தரிசனம்: முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டுதல்?

கோபி: டெல்லியில் இருந்து வீடு திரும்பிய மாஜி அமைச்சர் செங்கோட்டையன் கோபி அருகே உள்ள பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோயிலில் தரிசனம் செய்தார். அவர் முதலமைச்சர் வேட்பாளராக தன்னை அறிவிக்க வேண்டும் என்று வேண்டுதல் வைத்துள்ளார் என்ற தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக பொது செயலாளரும் சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி மற்றும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இடையே கடந்த பிப்ரவரி மாதம் முதல் தொடர்ந்து மோதல் போக்கு ஏற்பட்டு உள்ளது. அதிமுக நிர்வாகிகள் இடையே ஒற்றுமை இல்லாமல் கட்சியில் பிளவு ஏற்பட்டு உடையும் அபாயத்தில் உள்ளது. எடப்பாடி பழனிச்சாமி மற்றும் முன்னாள் அமைச்சர்கள் டெல்லி சென்று ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து வந்தனர்.

இந்நிலையில், செங்கோட்டையன் யாருக்கும் தெரியாமல் மதுரையில் இருந்து டெல்லி சென்று அமைச்சர்கள் அமித்ஷா, நிர்மலா சீதாராமன் ஆகியோரை சந்தித்தார். பிறகு அங்கிருந்து மீண்டும் மதுரை விமான நிலையம் வழியாக நேற்று வந்த செங்கோட்டையன், வழக்கமான அவரது காரை பயன்படுத்தாமல், கட்சி நிர்வாகி காரில் ஈரோடு மாவட்டம் கோபியில் உள்ள தன் வீட்டிற்கு திரும்பினார். வீட்டின் முன் செய்தியாளர்கள் திரண்டு விடுவார்கள் என்பதால், மாலை 5 மணிக்கு வீடு திரும்ப உள்ளதாக தகவலை பரப்பிய செங்கோட்டையன், மதியம் 1.55 மணிக்கே வீடு திரும்பினார்.

அதைத்தொடர்ந்து மாலை வீட்டைவிட்டு வெளியேறிய செங்கோட்டையன், முன்னாள் எம்பி சத்தியபாமா உள்ளிட்ட ஆதரவாளர்களுடன் கோபி அருகே உள்ள பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். டெல்லி சென்ற செங்கோட்டையன், முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று பாஜ முக்கிய தலைவர்களிடம் பேசியதாகவும், அது பலிக்க வேண்டும் என்று டெல்லியில் இருந்து திரும்பியவுடன் பாரியூரில் உள்ள கோயிலுக்கு சென்று வேண்டுதல் வைத்ததாகவும் பரபரப்பாக பேசப்படுகிறது.

The post டெல்லியில் இருந்து வீடு திரும்பிய செங்கோட்டையன் காளி கோயிலில் தரிசனம்: முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டுதல்? appeared first on Dinakaran.

Tags : Sengkottaian Kali ,Temple ,Delhi ,Kobi ,Maji Minister ,Sengkottaian ,Kaliamman Temple ,Gobi ,minister ,Sengkottaian Kali Temple ,
× RELATED சேலத்தில் எடப்பாடிக்கு செக்; செங்கோட்டையன் ஸ்கெட்ச்