விராலிமலை, மார்ச் 30: அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து பொதுமக்கள் அனைவரும் வாழ்வாதார தரத்தை உயர்த்தி கொள்ள வேண்டும். இதற்கு இது போன்ற அரசு கூட்டங்களில் பங்கேற்பது மிகவும் அவசியம் என்று கல்லுக்குத்தாம் பட்டி சிறப்பு கிராம சபை கூட்டத்தில் கலெக்டர் அருணா வலியுறுத்தினார். உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை ஊராட்சி ஒன்றியம், ராஜகிரி ஊராட்சி, கல்லுக்குத்தாம் பட்டியில் சிறப்பு கிராம சபை கூட்டம் நேற்று நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் மு.அருணா தலைமை வகித்தார்.
இதில் சிறப்பாக பணிபுரிந்த தூய்மை பணியாளர்களுக்கு பொன்னாடை அணிவித்து கௌரவித்து, வேளாண்மை உழவர் நலத்துறையின் சார்பில் விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருட்கள் மற்றும் மாவட்ட அளவிலான பயிர் விளைச்சல் போட்டியில் வெற்றி பெற்ற விவசாயிகளுக்கு பரிசு தொகை, கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் கால்நடை வளர்ப்போர்களுக்கு தாது உப்பு கலவை, மாற்றுத்திறனாளிகளுக்கு காதொலி கருவி வழங்கி, பல்வேறு அரசு துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை கலெக்டர் அருணா பார்வையிட்டார்.
பின்னர் மாவட்ட கலெக்டர் பேசுகையில்,
அரசின் செயல்பாடுகள் வெளிப்படை தன்மையுடன், பொதுமக்களின் பங்களிப்புடன் நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில், ஜனவரி-26 (குடியரசு தினம்), மார்ச்-22 (உலக தண்ணீர் தினம்), மே-1 (உழைப்பாளர் தினம், ஆகஸ்ட்-15 (சுதந்திர தினம்), அக்டோபர்-2 (காந்தி ஜெயந்தி), நவம்பர்-1 (உள்ளாட்சி தினம்) என ஆண்டுக்கு 6 முறை கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படுகிறது.
அந்த வகையில், உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 489 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டங்கள் நேற்று நடத்தப்பட்டது. இதில் ராஜகிரி ஊராட்சி, கல்லுக்குத்தாம் பட்டியில் நடைபெற்ற சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் கலந்து கொள்ளப்பட்டது.
இக்கூட்டத்தில், உலக தண்ணீர் தினத்தின் கருப்பொருள் பற்றி விவாதித்தல், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, சுத்தமான குடிநீர் விநியோகத்தை உறுதி செய்வது, அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், முழு எழுத்தறிவு பெற்ற நகர கிராம பஞ்சாயத்து, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) திட்டம், தொழிலாளர் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் பற்றி விவாதிக்கப்பட்டது.
மேலும், இக்கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள தொடர்புடைய அரசு அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்மூலம் கிராமங்களில் பொது மக்களின் அடிப்படைத் தேவைகளுக்கு முன்னுரிமை அளித்து செயல்படவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் அனைவரும் இதுபோன்ற கூட்டங்களை உரிய முறையில் பயன்படுத்தி, தங்கள் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்து கொண்டு வாழ்வாதார தரத்தை உயர்த்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் அ.கோ.ராஜராஜன், உதவி இயக்குநர் சா.மோகனசுந்தரம் (ஊராட்சிகள்), இணை இயக்குநர் மு.சங்கர லட்சுமி (வேளாண்மை), முதன்மை கல்வி அலுவலர் கூ.சண்முகம், புதுக்கோட்டை மாவட்ட சுகாதார அலுவலர் ராம் கணேஷ், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் உலகநாதன், மாவட்ட சமூகநல அலுவலர் க.ந.கோகுலப்பிரியா, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் க.தர், விராலிமலை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பி.பார்த்திபன்(கிஊ),எஸ்.பாலசுப்ரமணியன், விராலிமலை வட்டாட்சியர் எஸ்.ரமேஷ்,திமுக ஒன்றிய செயலாளர்கள் எம்.சத்தியசீலன் (கிழக்கு), கே.பி.அய்யப்பன்(மத்தியம்) மண்டல துணை வட்டாட்சியர் கணேஷ்குமார்,துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்பிரமணியன் மற்றும் பொதுமக்கள், அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
The post அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து பொதுமக்கள் அனைவரும் வாழ்வாதார தரத்தை உயர்த்தி கொள்ள வேண்டும்: அரசு கூட்டங்களில் பங்கேற்பது மிக அவசியம் appeared first on Dinakaran.
