×

சிபிஐ-க்கு கடிவாளம் போட்டிருந்த மாநிலங்களின் அதிகாரத்தை பறிக்க ஒன்றிய அரசு முயற்சி: புதிய சட்டம் இயற்ற நிலைக்குழு பரிந்துரை

 

புதுடெல்லி: சிபிஐ-க்கு கடிவாளம் போட்டிருந்த மாநிலங்களின் அதிகாரத்தை பறிக்கும் வேலையில் ஒன்றிய அரசு இறங்கியுள்ளது. அதற்கேற்றால் போல் சிபிஐக்கு புது சட்டம் இயற்ற நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரை செய்துள்ளது. பாஜக மாநிலங்களவை உறுப்பினர் பிரிஜ்லால் தலைமையிலான ஒன்றிய பணியாளர் மற்றும் பயிற்சித் துறை நாடாளுமன்ற நிலைக்குழு, அந்த துறை தொடர்பான மானியக் கோரிக்கைகள் (2025-26) குறித்த 145வது அறிக்கையில், ‘மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ-யில் பணியாளர்கள் பற்றாக்குறை இருப்பது மிகவும் கவலைக்குரிய விஷயம். காலிப் பணியிடங்களை பூர்த்தி செய்ய வேண்டும். காலிப்பணியிடங்களை பூர்த்தி செய்யாததால், சிபிஐயின் விசாரணை பாதிக்கிறது.

நிர்வாக சிக்கல்கள் இருப்பதால் புதிய பணி நியமனங்கள் தாமதப்படுத்தப்படுகிறது. இதனால் முக்கியமான வழக்குகள் பாதிக்கப்படுகின்றன. இந்த சவால்களை எதிர்கொள்ளும் வகையில் சிபிஐ சட்டத்தில் சீர்திருத்தங்கள், நெறிப்படுத்தப்பட்ட செயல்முறைகள் மற்றும் திறமையான பணியாளர்களை சேர்க்க வேண்டும். டிஎஸ்பி, இன்ஸ்பெக்டர் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் போன்ற முக்கிய பதவிகளுக்கு சிபிஐ-யே நேரடியாக ஆட்சேர்ப்பை நடத்த வேண்டும். அதற்கான கட்டமைப்பை சிபிஐ-யில் உருவாக்க வேண்டும். சைபர் குற்றம், தடயவியல், நிதி மோசடி மற்றும் சட்டப்பிரவுகளில் நிபுணத்துவம் பெற்றவர்களை பணியாளர்களாக நியமிக்க வேண்டும்.

நாடு முழுவதும் எட்டு மாநிலங்கள், சிபிஐ விசாரணைக்கான பொது ஒப்புதலை திரும்பப் பெற்றுள்ளன. இதனால் ஊழல் மற்றும் முக்கிய குற்ற வழக்குகளை விசாரிக்கும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தப் பிரச்னையைச் சமாளிக்க, தேசிய பாதுகாப்பு மற்றும் நாட்டின் ஒருமைப்பாட்டைப் பாதிக்கும் வகையிலான குற்றங்களில் தொடர்புடைய வழக்குகளில், மாநில அரசுகளின் அனுமதியின்றி சிபிஐ நேரடியாக விசாரிக்கும் வகையில் தனியாக அல்லது புதிய சட்டத்தை இயற்ற வேண்டும். இதற்காக மாநில அரசுகளின் கருத்தையும் பெற வேண்டும். மாநில அரசுகளின் விசாரணையில் நிபுணத்துவம் குறைவாக இருப்பதை தடுக்கும் வகையில், புதிய சட்டத்தில் பாதுகாப்பு அம்சங்களை சேர்க்க வேண்டும்.

சரியான நேரத்தில் மற்றும் நியாயமான விசாரணையை உறுதி செய்வதற்கும், வழக்கு விசாரணையின் தாமதங்களைத் தடுப்பதற்கும் சீர்திருத்தம் அவசியமாகிறது. நாட்டின் கூட்டாட்சி தத்துவத்தை பின்பற்றி சிபிஐயின் அதிகாரத்தை வலுப்படுத்தும் நடவடிக்கையை எடுக்க வேண்டும். டெல்லி சிறப்பு காவல் நிறுவன சட்டம் – 1946 மூலம் வழக்குகளை விசாரிக்க சிபிஐ-க்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. சிபிஐ-யின் செயல்பாட்டில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவர, வழக்கு புள்ளிவிவரங்கள் மற்றும் ஆண்டு அறிக்கைகள் அதன் வலைத்தளத்தில் பொதுவில் கிடைக்கச் செய்யப்பட வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post சிபிஐ-க்கு கடிவாளம் போட்டிருந்த மாநிலங்களின் அதிகாரத்தை பறிக்க ஒன்றிய அரசு முயற்சி: புதிய சட்டம் இயற்ற நிலைக்குழு பரிந்துரை appeared first on Dinakaran.

Tags : EU government ,CPI ,Standing Committee ,NEW DELHI ,Parliamentary Standing Committee ,CBI ,BJP ,Brijlal ,Dinakaran ,
× RELATED கனமழை காரணமாக காரைக்காலில் உள்ள...