×

தேசிய அளவில் வெண்பட்டு உற்பத்தியில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது: அமைச்சர் தா.மோ. அன்பரசன்

சென்னை: பூம்புகார் மற்றும் பட்டு வளர்ச்சி துறையின் புதிய அறிவிப்புகள் வெளியிட்டு குறு, சிறு மற்றும் நடுத்ரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் உரையாற்றினார். அப்போது; தமிழகத்தில் பட்டு உற்பத்தியை பெருக்கி, பட்டு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்திட முதல்வர் அவர்களின் வழிகாட்டுதலின் படி தமிழகத்தின் கிராமபுறங்களில் உள்ள 24 ஆயிரம் பட்டு விவசாயிகளுக்கு பல்வேறு மானியங்கள், தொழில்நுட்ப உதவிகள் வழங்கி, வெண்பட்டு உற்பத்தியில் தமிழகத்தை தேசிய அளவில் முதலிடத்திற்கு கொண்டு வர திமுக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் பட்டுப்புழு வளர்ப்புக்கு தேவையான மல்பெரி செடிகளை நடவு செய்ய ஒரு ஆண்டுக்கு 3 ஆயிரத்து 500 ஏக்கருக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்த ஊக்கத் தொகை, திமுக அரசு பொறுப்பேற்று 6 ஆயிரத்து 500 ஏக்கராக உயர்த்தி கடந்த 4 ஆண்டு காலத்தில் பட்டு விவசாயிகளுக்கு ரூ. 25 கோடி ஊக்கத் தொகை வழங்கப்பட்டு அதன் விளைவாக கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் மல்பெரி பரப்பு 24 ஆயிரத்து 500 ஏக்கர் அதிகரித்து, தற்போது 48 ஆயிரத்து 45 ஏக்கர் பரப்பளவில் மல்பெரி சாகுபடி செய்யப்படுகிறது.

பட்டு விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று திமுக ஆட்சியில் முதல் முறையாக பவர் டில்லர் இயந்திரம் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது. கடந்த 3 ஆண்டுகளில், ரூ. 2 கோடியே 80 லட்சம் மதிப்பில் 800 முன்னோடி பட்டு விவசாயிகளுக்கு பவர் டில்லர் இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டிற்கான பவர் டில்லர் இயந்திரங்கள் ரூ.87 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் 250 பட்டு விவசாயிகளுக்கு விரைவில் வழங்கப்பட உள்ளது. பட்டுப் புழு வளர்ப்பு மனை அமைப்பதற்கான மானியம் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் ரூ.87 ஆயிரத்து 500 வழங்கப்பட்டது. திமுக அரசு பொறுப்பேற்றப்பின் ரூ. 1 லட்சத்து 20 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்பட்டது. கடந்த 4 ஆண்டு காலத்தில் 3 ஆயிரத்து 811 விவசாயிகளுக்கு ரூ.40 கோடியே 91 லட்சம் மானியமாக வழங்கப்பட்டுள்ளது. நவீன பட்டுப்புழு வளர்ப்பு, பண்ணை உபகரணங்கள் கடந்த 3 ஆண்டுகளில், 5 ஆயிரத்து 520 விவசாயிகளுக்கு ரூ.23 கோடியே 54 லட்சம் மதிப்பில் வழங்கப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டிற்கான (2024-2025) பண்ணை உபகரணங்கள் ரூ. 6 கோடியே 81 லட்சம் மதிப்பில் 2 ஆயிரத்து 350 பட்டு விவசாயிகளுக்கு விரைவில் வழங்கப்பட உள்ளது.

ஆக மொத்தம் 4 ஆண்டுகளில் 21 ஆயிரத்து 749 பயனாளிகளுக்கு ரூ.172 கோடியே 90 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். பட்டுவிவசாயிகளுக்கு ஆண்டுதோறும் பட்டு முட்டை தடையின்றி கிடைக்க கிருஷ்ணகிரி மாவட்டம் – ஓசூரில் ஒரு கோடி பட்டு முட்டைகள் பதனம் செய்யும், குளிர்பதன கிடங்கு ரூ.4 கோடியே 46 லட்சம் மதிப்பில் நிறுவப்பட்டுள்ளது. வெண்பட்டு உற்பத்தியை அதிகரிக்க திருப்பூர் மாவட்டம் – மானுபட்டியில் தனியார் பட்டு முட்டை உற்பத்தி மையம் அமைக்க ரூ.52 லட்சத்து 50 ஆயிரம் மானியம் வழங்கப்பட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டு தமிழகத்தில் 1,834 மெட்ரிக் டன்னாக இருந்த பட்டு உற்பத்தி திமுக அரசின் பல்வேறு சீரிய திட்டங்களால் இதுவரை இல்லாத அளவில், நடப்பாண்டு 2 ஆயிரத்து 723 மெட்ரிக் டன் பட்டு உற்பத்தி செய்யப்பட்டு, தேசிய அளவில் வெண்பட்டு உற்பத்தியில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழகத்தில் உள்ள 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைவினைக் கலைஞர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும், வாழ்க்கை தரத்தை உயர்த்தவும், கலைப் பொருட்களுக்கு நல்ல விலை கிடைத்திடவும், கைவினை கலைகளை பாதுகாத்து, உலகம் எங்கும் கொண்டு செல்லவும், முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களால் 1973- ஆம் ஆண்டு தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் திமுகம் “பூம்புகார்” என்ற பெயரில் துவக்கப்பட்டு, தற்போது, 7 உற்பத்தி நிலையங்கள், 22 விற்பனை கூடங்கள், 2 நகர்புற விற்பனை கண்காட்சி திடல்களுடன் செயல்பட்டு வருகிறது. பூம்புகார் நிறுவனத்தின் புதுடெல்லி, கொல்கத்தா, கோயம்புத்தூர் ஆகிய 3 விற்பனை நிலையங்கள் ரூ.3 கோடியே 43 லட்சம் செலவிலும், தமிழகத்தில் உள்ள சுவாமிமலை, நாச்சியார் கோயில், மதுரை, வாகைக்குளம், தஞ்சாவூர், கள்ளக்குறிச்சி, மாமல்லபுரம் ஆகிய 7 உற்பத்தி நிலையங்கள் ரூ.3 கோடியே 50 லட்சம் செலவில் பழுது பார்த்து புனரமைக்கப்பட்டுள்ளது. மேலும், ரூ.1 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள கடலூர் விற்பனை நிலையம் விரைவில் திறந்து வைக்கப்பட உள்ளது என தெரிவித்துக் கொள்கிறேன்.

திமுக அரசு பொறுப்பேற்ற பின் கடந்த 4 ஆண்டுகளில் காஞ்சிபுரம், சேலம், தென்காசி, திருநெல்வேலி, விழுப்புரம், ஈரோடு, பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் உற்பத்தி செய்யப்படும் தனித்துவம் மிக்க கலைப் பொருட்களுக்காக, 7 பொது வசதி மையங்கள் ரூ.3 கோடியே 94 லட்சம் மதிப்பில் கட்டி திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 2000க்கும் மேற்பட்ட கைவினைக் கலைஞர்கள் பயன் அடைந்து வருகிறார்கள். கைவினைக் கலைஞர்கள் கலைப்பொருட்களை விரைவாக வடிவமைக்கவும், உற்பத்தி திறனை மேம்படுத்தவும், 700 கைவினைக் கலைஞர்களுக்கு, ரூ.70 லட்சம் மதிப்பில் நவீன உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது. 270 கைவினைக் கலைஞர்களுக்கு திறன்மேம்பாட்டு பயிற்சியும், 1,195 கைவினைக் கலைஞர்களுக்கு அரசு திட்டங்கள் குறித்த விழிப்புணர்வும், ஆலோசனையும் வழங்கப்பட்டுள்ளது. திமுக அரசு பொறுப்பேற்ற கடந்த 4 ஆண்டுகளில் பூம்புகார் நிறுவனம் ரூ.165 கோடியே 69 லட்சம் மதிப்பில் கைவினைப் பொருட்களை விற்பனை செய்துள்ளது. இதில் ரூ.2 கோடியே 92 லட்சம் மதிப்பிலான கலைப் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.ரூ. 2 கோடியே 67 லட்சம் மதிப்பிலான கலைப் பொருட்கள் Online மூலம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் ரூ.3 கோடியே 61 லட்சம் லாபம் ஈட்டி உள்ளது என பெருமையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

தமிழகத்தின் பாரம்பரிய கலைப் பொருட்களுக்கு உலக அங்கீகாரம் கிடைக்கும் வகையில், திமுக ஆட்சி பொறுப்பேற்ற கடந்த 4 ஆண்டுகளில், கள்ளக்குறிச்சி – மரச்சிற்பம், கருப்பூர் – கலம்காரி ஓவியம், தஞ்சாவூர் – நெட்டி வேலை, அரும்பாவூர் – மரச்சிற்பம், மயிலாடி – கற்சிற்பம், தஞ்சாவூர் – வீணை, மானாமதுரை – மண்பாண்டம், மயிலாடுதுறை-தைக்கல்பிரம்பு கைவினை, செட்டிநாடு-கொட்டான், நரசிங்கபேட்டை-நாதஸ்வரம், ஆகியவற்றிக்கு புவிசார் குறியீடு பெறப்பட்டுள்ளது. இது வரை 20 கைவினைப் பொருட்களுக்கு அதிக புவிசார் குறியீடுகளை பெற்ற மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது எனத் தெரிவித்துக் கொள்கிறேன்.

புதிய அறிவிப்புகள்
முதல்வர் அவர்களின் வழிக்காட்டுதலின்படி, பட்டு வளர்ச்சி துறை சார்பில் 17 அறிவிப்புகளையும், தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சி திமுகத்தின் சார்பில் 7 அறிவிப்புகளை வெளியிடுகிறேன்.

பட்டு வளர்ச்சித்துறை
1) பட்டுக்கூடு உற்பத்தி மற்றும் உற்பத்தித் திறனை ஊக்குவிக்க, 3,050 பட்டு விவசாயிகளுக்கு தனிபட்டுப் புழுவளர்ப்பு மனைஅமைக்க ரூபாய் 29 கோடியே 46 இலட்சத்து 88 ஆயிரம் உதவித் தொகை வழங்கப்படும்

2) அதிக மகசூல் தரும் மல்பெரி இரகங்கள் நடவு செய்யும் 3,050 பட்டு விவசாயிகளுக்கு ரூபாய் 6 கோடியே 82 இலட்சத்து 50 ஆயிரம் உதவித் தொகை வழங்கப்படும்

3) பட்டுவளர்ச்சித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 2 அரசு வித்தகங்கள், 7 அரசு விதைப் பண்ணைகள், 2 அரசு பெருமளவு பட்டுப் பண்ணைகள், 1 அயலின விதைப் பட்டுக்கூடு அங்காடி ஆகியவற்றில் புதிய கட்டடங்கள் மற்றும் ஆழ்துளை கிணறுகள் நிறுவிட ரூபாய் 5 கோடியே 13 இலட்சத்து 25 ஆயிரம் நிதி வழங்கப்படும்

4) தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கு மேல் பட்டுப்புழுவளர்ப்பு மேற்கொண்டு வரும் 1000 முன்னோடி பட்டு விவசாயிகளின் மண்வளம் மற்றும் மல்பெரி இலை மகசூலை அதிகரித்திட செரி-கம்போஸ்ட் தயாரிப்பதற்கான இயந்திரம், உயிர் உரம், மல்பெரி வளர்ச்சி ஊக்கிகள் மற்றும் சோலார் விளக்குப்பொறி ஆகியவை ரூபாய் 4 கோடியே 82 இலட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் கொள்முதல் செய்து வழங்கப்படும்

5) 3,050பட்டு விவசாயிகளுக்கு ரூபாய் 4 கோடியே 75 இலட்சம் மதிப்பில் நவீன பட்டுப்புழு வளர்ப்புத் தளவாடங்கள் மற்றும் பண்ணை உபகரணங்கள் கொள்முதல் செய்து வழங்கப்படும்

6) தென் மாவட்டங்களில் உள்ள பட்டு விவசாயிகள் பயன்பெறும் வகையில் தேனி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த பட்டுக்கூடு அங்காடி வளாகம் ரூபாய் 3 கோடியே 50 இலட்சம் மதிப்பில் நிறுவப்படும்

7) ஓசூர், தமிழ்நாடு பட்டுவளர்ச்சி பயிற்சி நிலையத்தில் 3,050 பட்டு விவசாயிகளுக்கு ரூபாய் 2 கோடியே 13 இலட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் பட்டுவளர்ப்பு குறித்த தொழில்நுட்பப் பயிற்சி வழங்கப்படும்

8) மாநிலத்தில் பட்டுநூற்பு தொழிலுக்கு தேவையான உட்கட்டமைப்புகளை மேம்படுத்தும் வகையில் புதிதாக பட்டு நூற்பு அலகுகள் நிறுவிட தனியார் தொழில்முனைவோரை ஊக்குவித்து மாநிலத்தின் பட்டுநூற்புப் பிரிவினை மேம்படுத்த ரூபாய் 2 கோடியே 2 இலட்சத்து 27 ஆயிரம் உதவித் தொகை வழங்கப்படும்

9) பட்டுவளர்ச்சித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 3 அரசு பட்டுப் பண்ணைகள் மற்றும் ஈரோடு வித்தக கட்டடத்தில் உட்கட்டமைப்பு வசதிகள் ரூபாய் ஒரு கோடியே 26 இலட்சத்து 40 ஆயிரம் மதிப்பில் மேம்படுத்தப்படும்

10) நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் அணைக்கட்டிப்பாளையம் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் ஒருங்கிணைந்த பட்டுக்கூடு அங்காடி வளாகத்திற்கு தேவையான பொருட்கள் மற்றும் உபகரணங்கள் கொள்முதல் செய்ய ரூபாய் 50 இலட்சம் நிதி வழங்கப்படும்

11) தரமான பட்டுக்கூடு உற்பத்தியினை ஊக்குவிக்க, 3,050 பட்டு விவசாயிகளுக்கு ரூபாய் 38 இலட்சத்து 13 ஆயிரம் மதிப்பில் நோய்த்தடுப்பு மருந்துப் பொருட்கள் கொள்முதல் செய்து வழங்கப்படும்

12) விதைப்பட்டுக்கூடு உற்பத்தி செய்யும் 20 விவசாயிகளுக்கு இளம்புழுவளர்ப்பு அறை அமைக்க ரூபாய் 30 இலட்சம் உதவித் தொகை வழங்கப்படும்

13) பட்டுப்புழு வளர்ப்பு மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு தொழில்நுட்ப சேவைகள் மற்றும் பட்டுப்புழு வளர்ப்புக்கான இடுபொருட்கள் வழங்கிட புதிதாக 20 பட்டு பல்நோக்கு ஆலோசனை மையங்கள் அமைக்க ரூபாய் 20 இலட்சம் உதவித் தொகை வழங்கப்படும்

14) மாநிலத்தில் மல்பெரி விரிவாக்கத்திற்கு தேவைப்படும் மல்பெரி நாற்றுகள் உற்பத்தியை ஊக்குவிக்க, 50 ஏக்கர் பரப்பில் மல்பெரி நாற்றங்கால் அமைக்கும் விவசாயிகளுக்கு ரூபாய் 18 இலட்சத்து 75 ஆயிரம் உதவித் தொகை வழங்கப்படும்

15) பட்டு விவசாயிகளுக்கு தரமான இளம் பட்டுப்புழுக்கள் வளர்ப்பு செய்து விநியோகம் செய்யும் வகையில், 5 பெரிய அளவிலான இளம்புழுவளர்ப்பு மையங்கள் அமைத்திட ரூபாய் 16 இலட்சத்து 25 ஆயிரம் உதவித் தொகை வழங்கப்படும்

16) மல்பெரி மற்றும் பட்டுப்புழுவளர்ப்பில் உயிரியல் முறையில் பூச்சி மற்றும் நோய் மேலாண்மையை ஊக்குவிக்கும் வகையில் திருப்பூர் மாவட்டம் மைவாடி அரசு பட்டுப் பண்ணையில் உயிரியல் நோய்க் கட்டுப்பாட்டு காரணிகள் உற்பத்தி ஆய்வகம் ரூபாய் 7 இலட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் அமைக்கப்படும்

17) பட்டுநூல் உற்பத்தி செய்யும் தானியங்கி பட்டுநூற்பகத்தில் நீர் சுத்திகரிப்பு ஆலை அமைக்க ரூபாய் 5 இலட்சத்து 75 ஆயிரம் உதவித் தொகை வழங்கப்படும்

தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் திமுகம்

1. ரூபாய் 2 கோடி மதிப்பில் கைவினைஞர்கள் தயாரிக்கும் பொருட்களை மின்வணிகம் மூலம் உலகச் சந்தைக்கு எடுத்துச் செல்லும் நோக்கத்தில் “கைவினைப் பொருட்கள் சந்தை இயக்கம்” (Handicrafts Marketing Mission) செயல்படுத்தப்படும்

2. ரூபாய் 1.30 கோடி மதிப்பில் தமிழ்நாட்டின் கைவினைப் பொருட்களை சந்தைப்படுத்த இந்தியாவின் முக்கிய பெருநகரங்களில் 10 விற்பனைக் கண்காட்சிகள் நடத்தப்படும்

3. ரூபாய் 1.10 கோடி மதிப்பில் புவிசார் குறியீடு பெற்ற கைவினைப் பொருட்கள் மற்றும் இதர கைவினைப் பொருட்களுக்கான வடிவமைப்புத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி 510 கைவினைஞர்களுக்கு ஊக்கத் தொகையுடன் வழங்கப்படும்

4. ரூபாய் 36 இலட்சம் மதிப்பில் நலிந்துவரும் கைத்திறத் தொழில்களான பொய்க்கால் குதிரை, கடம் இசைக்கருவி மற்றும் தஞ்சாவூர் உருட்டு பொம்மைகள் ஆகிய பொருட்களைச் செய்யும் 60 கைவினைஞர்களுக்கு ஊக்கத் தொகையுடன் சிறப்பு பயிற்சிப் பட்டறைகள் நடத்தப்படும்.

5. பூம்புகார் மாவட்ட கைத்திறன் விருது பெறும் 85 கைவினைஞர்களுக்கு வழங்கப்பட்டு வரும் ரொக்கப் பரிசினை ரூபாய் 10 ஆயிரத்திலிருந்து ரூபாய் 20 ஆயிரமாக உயர்த்தியும், 5 கிராம் வெள்ளிப்பதக்கத்தினை 50 கிராமாக உயர்த்தியும் ரூபாய் 25 இலட்சம் செலவில் இவ்விருது வழங்கப்படும்

6. ரூபாய் 20 இலட்சம் செலவில் அடுத்த தலைமுறை கைவினைஞர்களுக்கான கைத்திறப்போட்டி வெற்றியாளர்களுக்கு விருதுடன் கூடிய ரொக்கப் பரிசினை ரூபாய் 2 ஆயிரத்திலிருந்து ரூபாய் 10 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்

7. ரூபாய் 20 இலட்சம் மதிப்பில் 200 கைவினைஞர்களின் திறமையை ஊக்கப்படுத்தவும் அவர்களின் உற்பத்தித் திறனை அதிகரிக்கவும் தொழில்நுட்ப உபகரணப் பொருட்கள் வழங்கப்படும்

The post தேசிய அளவில் வெண்பட்டு உற்பத்தியில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது: அமைச்சர் தா.மோ. அன்பரசன் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Minister Tha. Mo. Anbarasan ,Chennai ,Minister ,Micro, Small and Medium Enterprises ,Bombukar ,Silk ,Sector ,Mo. Anbarasan ,
× RELATED நெல்லை மருத்துவக் கல்லூரி...